BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 4 September 2014

மறைந்து வரும் தமிழரின் உணவு பழக்கங்கள்

ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர் தம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ் நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும்.

“சமைத்தல்” என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அடுப்பில் ஏற்றிச் சமைப்பது “அடுதல்” எனப்படும். சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை. தமிழர்களின் வீட்டு அமைப்பில் வீடு எந்தத் திசை நோக்கி அமைந்திருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென் மேற்கு மூலையில் அமைக்கப்படுகிறது. நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊற வைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.

நகர்ப்புறமயமாதல், தொடர்புச் சாதனங்களின் விளம்பரத் தன்மை, பொருளியல் வளர்ச்சி, பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் தமிழர்களின் உணவு முறை மிகப் பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது. நிகழ்கால உணவுப் பழக்க வழக்கங்களில் உடல் நலம் குறித்த அக்கறையைவிடச் சுவை குறித்த பார்வையே ஆளுமை செலுத்துகிறது. எனவே இன்னும் சில மிச்சசொச்சங்களோடு இருக்கும் பழைய உணவுப் பழக்கங்களைத் தொகுத்துக் காணுவது நல்லது. கிழங்கு வகைகளில் சிலவும் (பனங்கிழங்கு), புன் செய்த்தானிய வகைகளில் சிலவும், சிறு பறவை இறைச்சியும் ஏழை மக்களால் சுட்டு உண்ணப்படுகின்றன. கடினமான கிழங்குகளும், ஏழிலைக் நீரிலிட்டு அவிக்கப்படுகின்றன. அரைத்து அல்லது இடித்த மாவுப் பொருள்கள் நீராவியில் வேக வைக்கப்படுகின்றன. இடித்த மாவுடன், சூடான இனிப்புப் பாகினைச் சேர்த்துக் கட்டி அரிசி, பொரிவிளங்காய், பாசிப்பயற்று மா உருண்டை செய்யப்படுகின்றன. மாவுப் பொருள்களுடன் இனிப்புப் பாகு கூட்டி மீண்டும் எண்ணெயில் பொரித்து முந்திரிக் கொத்து, அதிரசம் ஆகியன செய்யப்படுகின்றன. மாவுப் பொருள்களுடன் உறைப்புச் சுவையுடைய மசாலா கூட்டி பஜ்ஜி, வடை செய்யப்படுகின்றன. புலவு அல்லது காய்கறிகளுடன் உறைப்பு மசாலா அல்லது தொடுகறியாகவோ ஆக்குகிறார்கள். மாவுப் பொருள்களுடன் காய்கறிகள் சேர்த்து, எண்ணெய் தடவிச் சுடும் உணவு வகைகளில் அடை, தோசை ஆகியன அடங்கும். இலை (அடை) வடிவில் செய்யப்படுவதால் அது அடை எனப் பெயர் பெற்றது. வெந்த தானியத்துடன் வெல்லம், கருப்புக்கட்டி, ஆகியன சேர்த்துத் திரவ வடிவில் ஆக்குவது பாயசம்.

சங்க இலக்கியத்தில் மிளகு, நெய், புளி, கீரை, இறைச்சி, கும்மாயம் பற்றிய உணவுக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. பக்தி இயக்கத்தின் எழுச்சியோடு தமிழர் உணவு வகையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. லட்டு(இலட்டுவம்), எள்ளுருண்டை, அப்பம் போன்றவற்றைப் பெரியாழ்வார் தம் பாடலில் குறிப்பிடுகிறார். சோழர் காலக் கல்வெட்டுக்களில் சருக்கரைப் பொங்கல் பணியாரம் ஆகிய உணவு வகைகள் பேசப்படுகின்றன. விசய நகர ஆட்சிக்காலக் கல்வெட்டுக்களில் தான் இட்டளி, தோசை, அதிரசம் போன்ற உணவு வகைக்குறிப்புக்கள் கிடைக்கின்றன. ஆனால் இவை கோயிற் பண்பாட்டைப் பிரதிபலிப்பதனால், பெருவாரியான மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களை அறிய இவற்றைப் போதிய சான்றுகளாகக் கொள்ள முடியாது.திடப் பொருள்களையும் இறைச்சிப் பொருள்களையும் அரைத்தும் துவைத்தும் நீர் குறைத்து ஆக்கப்படுவன துவையல் என்ற வகையில் அடங்கும். நீரிலே கரைத்த துவையல் இக்காலத்தில் “சட்டினி” என வழங்கப்படுகிறது. இறைச்சி சேர்த்து துவையல் “கைமா” என்ற உருதுச் சொல் லால் வழங்கப்படுகிறது.

எளிய மக்கள் நிறைய நீரில் தானியங்களை வேகவைத்து உண்பது கஞ்சியாகும். கஞ்சியினை “நீரடுபுற்கை” என்கிறார் திருவள்ளுவர் கஞ்சியில் சேர்க்கப்படும் மற்றொரு பொருள் மோர். வற்றல் என்பது மழைக்காலத்திற்கு எனச் சேமிக்கப்பட்ட உணவாகும். காய்கறிகள் நிறையக் கிடைக்கும் காலத்தில் உப்புக் கலந்த மோரில் ஊறவைத்துப் பின்னர் வெயிலில் நீர் வற்றக் காயவைத்துச் சேமிப்பர். வெண்டை, மிளகாய், பாகல், சுண்டை, கொவ்வை, கொத்தவரை, கத்தரி, மணத் தக்காளி ஆகியன வற்றலுக்கு உரிய காய்கறிகள்.

காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்துவந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுறைக்காகக் கறுப்பு மிளகினை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே “கறி” எனப் பின்னர் வழங்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர். பழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெயில் இட்ட பண்டங்கள் அண்மைக் காலங்களிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தயாரிப்பில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய்யும் விசயநகர ஆட்சிக் காலத்திலேயே இங்கு அறிமுகமானது.

“லாலா மிட்டாய்க் கடை” என்பது புதுவகை உணவுகளைத் தமிழ் நாட்டில் அறிமுகம் செய்து வருகிறது. நாயக்க மன்னர்களின் காலத்தில் அவர்களால் தமிழ் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இந்தி பேசும் மக்கள் பிரிவினர் புதிய இனிப்பு வகைகளை அறிமுக்கப்படுத்தினர். சர்க்கரை, கோதுமை, நெய், கடலைமா, ஆகியனவே இவற்றின் மூலப் பொருள்கள். சருக்கரைக்குப் பதிலாகக் கருப்புக்கட்டி சேர்த்து நாடார் சாதியினர் சேர்த்து வைக்கும் இனிப்புக் கடையை மிட்டாய்க் கடை என்றே சொல்வார்கள். கிராமப் புறத்து மக்கள் இனிப்புக் கடையை மிட்டாய்க்கடை என்றே சொல்வார்கள். கிராமப் புறத்து மக்கள் இனிப்பு விற்கும் கடைகளை “அந்திக்கடை” என்றே வழங்கி வந்தனர். லாலா மிட்டாய் என்பன முறையே இந்தி, உருதுச் சொற்களாகும்.கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர் வீட்டுச் சமையலில் எண்ணெயின் பங்கு பெருமளவு அதிகரித்திருக்கிறது. எண்ணெய்ச் சுவையினை இக்காலத் தமிழர்கள் பெரிதும் விரும்புவதால் அவித்தும், வேகவைத்தும், எண்ணெயைச் சேர்க்காமலும் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் வேகமாக மறைந்து வருகின்றன. பொருளாதாரச் சந்தையில் எண்ணெய் வணிகம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வல்லரசு நாடுகளின் கருவிகள் பலதரப்பட்டவை. அவற்றின் பொருளியல் ஆயுதங்களாகக் காப்பியும், தேநீரும் அவற்றின் துணைப் பொருளான சருக்கரையும் இன்று எல்லா வீடுகளிலும் நுழைந்துவிட்டன.

உணவு என்பது இன்று ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கமன்று. இனிமை ததும்பும் சருக்கரையானது கியூபா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் வாழ்வுக்கான பற்றுக்கோடு. அமெரிக்கா போன்ற நாடுகளால் இச்சிறிய நாடுகள் ஒடுக்கப்படுவதற்கு அதே சருக்கரை ஒரு கொடுமையான பொருளாதார ஆயுதமாகவும் அமைகிறது. இந்த அரசியல் உண்மையை உணராத தமிழர்கள் உணவுப் பழக்கத்தில் உடல் நலத்தைக் கருதாது, நாவின் சுவையினையே சார்ந்து இருப்பது வீழ்ச்சிக்குரிய வழிகளில் ஒன்று.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media