BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 4 September 2014

மூளை சுறுசுறுப்பாக செயல்பட சில வழிகள்

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. எவ்வளவு தெளிவாக சிந்திக்க மூளை துணைபுரிகிறதோ, அவ்வளவு வியப்பூட்டும் வகையில் விஞ்ஞானிகளையே குழப்பத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது மூளை. அதன் செயல்பாடுகள் மிக நுண்ணியதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.
மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம், புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. அப்படியானால் முழு அளவு மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா?
மற்ற விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, அர்த்தமுள்ள இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான். ஒரு நொடிக்குள் பல தூண்டல்களை எதிர்கொண்டு செயல்களை செய்ய துரிதமாக இயங்குவது மூளை. மனிதர்களில் கூட நாம் பிறரில் இருந்து வேறுபட்டு இருந்தால் அது நமது மூளையை பயன்படுத்தும் ஆற்றலில்தான்.
எனவே நாம் துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டுமானால் மூளையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு மூளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். அதன் சுறுசுறுப்பை அதிகரிக்க இங்கே சில வழிமுறைகள் ...
* மூளை சுறுசுறுப்பாக செயல்பட முதலில் அதிகாலையில் எழ வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். மூச்சுப்பயிற்சி பெற்றவர்களிடம் பயிற்சி பெற்று செய்வது சிறந்த பலன் தரும்.
மேலும் "ட்ரெட்மில்"லில் ஓடுவது, ஜாக்கிங் செய்வது, ஓட்டம் போன்ற பயிற்சிகளை செய்தாலும் மூளையின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.

* இரண்டாவதாக, சத்துள்ள சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள், பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அதே வேளையில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம். கண்ட கண்ட வேளைகளில் சாப்பிடுவதும், அளவை மீறிச் சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற உணவுமுறை மந்தத் தன்மையையும், சில வியாதிகளையும் ஏற்படுத்தும்.
* உடல் பராமரிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். நோய்கள் தாக்காத வகையில் தேவையான விழிப்புணர்வுடன் சுத்தமாக இருக்க வேண்டும். டைப் 2 நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் மூளையின் செயல்களை பாதிக்கக் கூடியவை. இவை அறிவுத்திறனை பாதித்து, கவலைகளை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க சிகரெட் மற்றும் புகைப் பழக்கங்களை கைவிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.
* அடுத்ததாக மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தேவையானது ஓய்வு. மூளைக்கு ஓய்வு என்பது தூக்கத்தில்தான் கிடைக்கிறது. எனவே வேலை, வயதுக்கு தக்கபடி போதிய அளவு தூங்கி ஓய்வெடுங்கள். சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது.
* ஒரு நாளைக்கு 2 முறை காபி அல்லது டீ குடியுங்கள். இதில் உள்ள "காபீன்" என்னும் ரசாயனப்பொருள் புத்துணர்ச்சியை தூண்டும் திறன் உடையது. குறிப்பாக மாலைநேர காபி மூளையின் செயல்பாட்டை அதிக அளவில் தூண்டுவதாக ஆய்வில் கண்டறிந்து உள்ளனர். தினசரி 4 முறைக்கு மேல் டீ பருகுவதையும் தவிர்க்க வேண்டும். 

* அதேபோல் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் உணவு மீன். அதில் உள்ள "ஃபேட்டி ஆசிட்", ஒமேகா 3 ஆகியவை மூளை செயல்படும் விதத்தை துரிதப்படுத்துகிறது. எனவே உணவில் மீனையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம்.
* அறிவுத்திறனை வளர்க்கும் போட்டிகளில் பங்கேற்றுப் பழகுங்கள்.
* நினைவுத்திறனை அதிகப்படுத்துவதற்காக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மேற்கண்ட வழிகளை பின்பற்றினால் மூளையில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். வெற்றி கைகளை நீட்டி தழுவிக் கொள்ளும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media