சென்னையில் 14 இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஒரு முறை தங்கள் சான்றிதழ்களை சமர்பித்து ஒரு பிரத்யேகமான எண்ணை பெற்ற பிறகு, அதை பயன்படுத்தியே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், விதவைகளுக்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், உள்ளிட்டவைகளை ஒரே இடத்தில் பெறலாம். இன்னும் சில நாட்களில் தண்ணீர் வரி, சொத்து வரி, மின்சார கட்டணம் உள்ளிட்டவைகளையும் செலுத்தலாம். மயிலாப்பூர் மையத்தில் தற்போதிலிருந்தே வரி மற்றும் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயங்கும்.
தற்போது எழும்பூர்-நுங்கம்பாக்கம், மாம்பலம்-கிண்டி, மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி தாலுகா அலுவலகங்களிலும், அடையார், அண்ணா நகர் மற்றும் பேசின் பிரிட்ஜ் மண்டல அலுவலகங்களிலும், சைதாப்பேட்டை, அசோக் நகர் சென்னை குடிநீர் அலுவலகங்களிலும், ஆறு நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களிலும் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த இ-சேவை மையங்களில் விண்ணிப்பதாரர் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உள்ளிட்ட தங்களது சான்றுகளின் அசலை தர வேண்டும். அவை ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டு, பின்பு பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் கணினியில் அலுவலரால் பதிவு செய்யப்படும். பிறகு 13 இலக்கு கொண்ட கேன் (CAN) எண் தரப்படும். இந்த கேன் எண்ணைக்கொண்டு வேண்டிய சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும், இது போன்ற மையங்கள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, கேன் எண்ணைப் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த சான்றிதழையும் பெற்றுக் கொள்ளலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.