மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி இன்று ஆம் ஆத்மியில் இணைந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
'இந்தியாவில் காங்கிரஸ், பாஜக, தமிழகத்தில் அதிமுக ஆகிய நான்கு கட்சிகளுக்கு எதிராக மாற்று உருவானால்தான் இந்திய, தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகும். இந்த மாற்றத்தை இடதுசாரி அமைப்புகள் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், தற்காலிக அரசியல் சிக்கல்களைச் சந்திக்கும் போக்கால், அது நடக்காமலேயே போய்விட்டது. தவிர, ஒற்றைச் சிந்தாந்த அடிப்படையில் இயங்கி, மக்களைத் திரட்டுவது ஒரு பற்றாக்குறையோ என்று எனக்குத் தோன்றுகிறது.
நமக்கு காந்தி, அம்பேத்கர், மார்க்ஸ், விவேகானந்தர், நாராயணகுரு, பாரதி, நேரு, பகத் சிங் என்று பலரிடம் இருந்தும் எடுத்துக்கொள்ளும் நிறைய உள்ளன என்று எப்போதும் நான் நம்புகிறேன். ஒருவரிடம் இருந்து இன்னொருவரை நிராகரிக்கும் போக்கும், ஒருவரிடம் இருந்து மட்டுமே எல்லாம் கிடைத்துவிடும் என்ற பிடிவாதமாக நம்பும் மூர்க்கமும் எனக்கு உடன்பாடில்லை.
எனவே, ஒற்றைச் சிந்தாந்த அடிப்படை இல்லாமல், திறந்த மனதுடன் அரசியலை அணுகும் வாய்ப்பு இருக்கும் கட்சியாக இன்று ஆம் ஆத்மி உருவாகியிருப்பதால், பல ஆரோக்கியமான அரசியல் அம்சங்களின் தொகுப்பாக அது வளரும் வாய்ப்பு இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
டெல்லியில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் மாற்றாக இன்னொரு சக்தி இருக்க முடியும் என்று மக்கள் நம்பிக்கையைத் தூண்டியதால் இன்று நாடு முழுவதும் ஆம் ஆத்மி மீது ஆங்காங்கே எதிர்பார்ப்பு இளைய தலைமுறையிடம் மலர்ந்திருக்கிறது.
அதேபோல் தமிழ்நாட்டிலும் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு சக்தியாக வரவேண்டியவை எதுவும் இன்னும் வளரவில்லை. வந்தவையெல்லாம் அவற்றின் குளோன்களாகவே இருப்பவை. அந்த இடத்தையும் ஆம் ஆத்மி என்ற எளிய மக்கள் கட்சி பூர்த்தி செய்யும் வாய்ப்பிருக்கிறது.
ஆம் ஆத்மியின் செயல்பாடுகள் பற்றி கடு விமர்சனங்களை பல நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள். அதன் வருகையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பாஜக கடும் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவை ஆம் ஆத்மி வளர வேண்டும் என்ற அக்கறையினால் சொல்பவை அது அழிய வேண்டும் என்ற ஆசையில் முன்வைப்போருடையவை அல்ல.
காங்கிரஸ் கட்சிக்கு வயது 129. பிஜேபிக்கு ஆர்.எஸ்.எஸ். தோன்றிய நாளில் இருந்து கணக்கிட்டால் 89 வயது. திராவிடக் கட்சிகளின் வயதை நீதிக் கட்சியில் இருந்து கணக்கிட்டால், வயது 97. ஆம் ஆத்மி உருவாகி ஒரே ஒரு வருடம்தான் ஆகிறது. துடிப்பான குழந்தை இது. நல்ல போஷாக்கான உணவு தரும் பெற்றோரும், நல்ல கல்வி தரும ஆசிரியர்களும்தான் குழந்தையை சிறந்த மனிதனாக உருவாக்க முடியும். அப்படிப்பட்ட அக்கறையுள்ள பெற்றோர்களாக, ஆசிரியர்களாக நாடு முழுவதும் பல துறை அனுபவம் உடையவர்களும், அங்கே இன்று இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். இந்தக் குழந்தை எங்கே உருப்படப் போகுது என்று கரித்துக் கொட்டும் எதிர்வீட்டுக்காரரின் அசல் பிரச்சினை, அவர் குழந்தைகள் உருப்படாமல் போய்விட்டதுதான்.
1967, 1977, 1987 என்று தேர்தல் அரசியலில் மாற்றத்துக்கான அறிகுறிகள் தோன்றிய வரிசையில், இது அடுத்த மாற்றம் தென்படும் காலம். முந்தைய மாற்றங்கள் எல்லாம் வீணானது போல இதுவும் ஆகிவிடக் கூடாது என்ற கவலையில், இதற்கான என் பங்களிப்பாக, அந்த மாற்றத்தை நோக்கி இன்னும் பலரையும் உந்த உற்சாகப்படுத்தும் சக்தியாக இருப்பதற்காகவே நான் கட்சி, தேர்தல் அரசியலில் இறங்கியிருக்கிறேன்.
இவ்வாறு ஞாநி கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.