திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் இன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த போது, "கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விரும்பியவாறு, இந்தக் கூட்டணிக்கு, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. " என கருணாநிதி அறிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆர்.,கழகம் ஆர்.எம்.வீரப்பன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், திராவிடர் கழகம் கி.வீரமணி, இந்திய தேசிய லீக் திருப்பூர் அல்தாப், பேராயர் எஸ்ரா சற்குணம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம், உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து மற்றும் பொன் குமார் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் கருணாநிதி பேசியதாவது:
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விரும்பியவாறு, இந்தக் கூட்டணிக்கு, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உங்களுடைய கருத்துகள் மதிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை நானே முன் நின்று செய்து கொடுப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிரியானாலும் அவர்களிடத்திலே அன்போடும், நட்புணர்வோடும் நடக்கக் கற்றவன். அந்தப் பாடத்தை எனக்குக் கற்பித்த பெரியவர்கள் பெரியாரும், அண்ணாவும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றிக்கு இன்று நாம் கொடியேற்றுவோம். அந்தக் கொடி உயரப் பறக்கட்டும், அந்தக் கொடி நிழலில் தமிழ்நாட்டு மக்களை மாத்திரமல்ல. இந்திய நாட்டு மக்களை மதச்சார்பற்ற ஓரணியில் திரட்டுவோம்."
இவ்வாறு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டத்தில் கருணாநிதி கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.