ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று குஜராத் சென்றிருந்தார். குஜராத் மாநில முழுவதும் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்போவதாகவும், மோடி கூறுவது போல் அங்கு ராம ராஜ்ஜியம்தான் நடக்கிறதா என தான் ஆராயப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
குஜராத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் ஊர்வலமாக செல்ல முயன்றபோது, அவருக்கு எதிராக பாஜகவினர் கருப்புக் கொடிகளை காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, அரவிந்த் கேஜ்ரிவாலை தடுத்து நிறுத்திய குஜராத் போலீஸார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தனர். இதற்கு, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், நடத்தை விதிமுறைகள் குறித்து கேஜ்ரிவாலிடம் விவரித்ததாக குஜராத் போலீஸ் தரப்பு விளக்கம் அளித்தது.
குஜராத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் தடுத்து நிறுத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன், டெல்லியில் திரண்ட ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகை இட்டனர். அலுவலகத்தில் இருந்த பாஜகவினர் சாலைக்கு வந்து ஆம் ஆத்மியினருடன் மோதலில் ஈடுபடத் தொடங்கினர். சிலரது சட்டைகள் கிழித்தெறியப்பட்டன. சிலருக்கு காயம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
அதேவேளையில், லக்னோவில் ஆம் ஆத்மி கட்சியினர் துடைப்பங்களுடனும், பாஜகவினர் லத்திகளுடனும் மோதலில் ஈடுபட்டனர்.
உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இந்த மோதலைத் தடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.