ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து மத்திய அரசு பிப்ரவரி 19-ம் தேதி மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு தனது பதில் மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.
அதில் கூறியிருப்பதாவது:
மூவரையும் விடுவிப்பது தொடர்பான யோசனையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவித்து, ஆலோசனை நடத்த முயற்சித்தது. தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தமிழக அரசிடம் நேரடியாக தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், மாநில அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு சென்றுவிட்டது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 32-ன் படி மத்திய அரசால் நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்ய முடியாது. அடிப்படை உரிமைகள் என்பது குடிமக்களுக்குத்தானே தவிர, அரசுக்கு அல்ல.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 161 அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432, 433 ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவின் கீழ் குற்றவாளிகளை விடுவிக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்து, அது தொடர்பாக உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கற்பனையான காரணத்தைக் கூறி மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 162, 73(1)(a) ஆகிய பிரிவுகளின்படி செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசிடம்தான் உள்ளது.
குற்றவாளிகள் அனைவரும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, சட்டப் பிரிவு 432-ன் படி அவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது.
குற்றவாளிகள் அனைவரும் ஏற்கெனவே தடா சட்டப் பிரிவு தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதத் தடைச் சட்டம், மத்திய அரசின் சட்டங்களின் கீழ் பெற்ற தண்டனை களை ஏற்கெனவே சிறையில் கழித்துவிட்டனர்.
எனவே, அவர்களை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு சரியானதுதான். மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வரும் மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.