BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 1 June 2014

தமிழக மீனவர்கள் 33 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்


இலங்கை கடற்படையினால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

 "கடந்த 45 நாள்களாக அமல்படுத்தப்பட்டிருந்த மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்த நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் 33 அப்பாவி மீனவர்களையும், அவர்களது 7 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுவிட்டார்கள் என்பதை மிகுந்தத் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 3 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் 76 கைது நடவடிக்கைகளாலும், 67 தாக்குதல் நடவடிக்கைகளாலும் இந்திய மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, முந்தைய பிரதமருக்கு நான் பலமுறை கடிதம் எழுதி, தூதரக ரீதியில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை.

இந்த நிலையில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 33 மீனவர்களையும், அவர்களது 7 விசைப்படகுகளையும் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றிருக்கிறார்கள். மீனவர்கள் அனைவரும் இலங்கையின் தலைமன்னாருக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

மத்தியில் புதிய அரசு பொறுப்பெற்றுள்ளதால், தங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை, தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பு மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தையிலும் உரிய பலன் கிடைக்கவில்லை. இதற்கு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அலட்சியப் போக்கும் பலவீனமான அணுகுமுறையும்தான் காரணம்.

உங்கள் தலைமையின் கீழ், இந்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நம்புகிறேன். தமிழக மீனவர்களின் துயரத்தை முழுமையாக போக்கும் வகையில், நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில், கடந்த ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்தச் சூழலில், மத்தியில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நடவடிக்கைகளால், தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என லட்சக்கணக்கான மீனவ மக்கள் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள்.

எனவே, இந்தப் பிரச்சினையில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு, வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் இலங்கை அதிகாரிகளை அணுகி, உடனடியாக 33 மீனவர்களையும், 7 விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற சம்வங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறேன். உடனடி நடவடிக்கையை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media