BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 1 June 2014

தமிழகம் முழுவதும் புதிதாக 360 அம்மா உணவகங்களை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

 'குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசினை நானிலமே போற்றும்' என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தமிழகத்தின் தேவைகளையும், தமிழ்நாட்டு மக்களின் நாடித் துடிப்பையும் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்றபடி திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகின்ற அரசாக எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு விளங்கிக் கொண்டு இருக்கின்றது.

அந்த வகையில், விலைவாசி உயர்வு என்னும் கொடூரத் தாக்குதலிலிருந்து தமிழக மக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் விடுபட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மலிவு விலையில் தரமான உணவினை ஏழை எளிய மக்கள் வயிறார உண்ணும் வகையில், 15 அம்மா உணவகங்களை சென்னை மாநகராட்சி பகுதிகளில் 19.2.2013 அன்று நான் திறந்து வைத்தேன். பின்னர், இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவாக்கப்பட்டது.

மக்களின் விருப்பத்தினைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள பிற மாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் 'அம்மா உணவகங்களை' காணொலிக் காட்சி மூலம் நான் திறந்து வைத்தேன்.

தற்போது சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 203 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்கள் அமைப்பதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உணவகங்களும், இதர மாநகராட்சிகளில் தலா 10 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆக மொத்தம் தற்போது 294 அம்மா உணவகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

இந்த அம்மா உணவகங்களில், காலை 7 மணி முதல் 10 வரை இட்லி, சாம்பார் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில், காலை சிற்றுண்டியின் போது, இட்லி தவிர, பொங்கல், சாம்பார் ஐந்து ரூபாய்க்கும்; மதிய உணவின் போது, எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும்; மாலை வேளைகளில் இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை புரிபவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் இந்த அம்மா உணவகங்கள் குறித்து அகில உலக அளவில் பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஏழை, எளிய மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அம்மா உணவகங்களின் பயன் பிற நகர்ப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் வீதம், 200 அம்மா உணவகங்கள்; ஏற்கெனவே அம்மா உணவகங்கள் நிறுவப்பட்ட மதுரை, வேலூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தவிர்த்து, ஏனைய மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள்; திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் தலா ஒன்று வீதம்,

2 அம்மா உணவகங்கள்; கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகராட்சிகளில் கூடுதலாக தலா ஒன்று வீதம் 2 அம்மா உணவகங்கள் என மொத்தம் 360 புதிய அம்மா உணவகங்களை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த அம்மா உணவகங்கள் விரைவில் செயல்படத் துவங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அம்மா உணவகங்களுடன், இவற்றையும் சேர்த்து, மொத்தம் 654 அம்மா உணவகங்கள் மக்களின் தேவையை நிறைவு செய்யும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, மலிவான விலையில் தரமான உணவை மேலும் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பெற வழி வகுக்கும்

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media