டெல்லியில் கார் விபத்தில் மரணமடைந்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடல், அவரது சொந்த ஊரில் இன்று அரசு மரியாதயுடன் தகனம் செய்யப்பட்டது.
கோபிநாத் முண்டே உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, டெல்லியில் இருந்து மகாராஷ்டிரம் புறப்பட்ட மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், செய்தியாளர்களிடம் கூறியது:
"சீட் பெல்ட் அணிந்திருந்தால், முண்டே உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். சீட் பெல்ட்டை பலர் அலங்கார பொருளாகவே நினைக்கின்றனர். சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் அறியாமல் மக்கள் உள்ளனர். இதுபோன்ற அலட்சிய செயலால், என் நண்பனையே நான் இப்போது இழந்துவிட்டேன்.
நாம் செய்து வருவதை பார்த்து, நமது பிள்ளைகளும் தவறான நடைமுறைகளையே பின்பற்றுகின்றனர். வேகமாக வாகனத்தை ஓட்டுபவர்களை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, ஒழுங்காக வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட வேண்டும்.
என் நண்பர் முண்டே, விபத்து நடந்த சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்திய கார், சிகனலில் நிற்காமல் போனதே விபத்துக்கு காரணமாக உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும். வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான விஷயம். மக்களின் மனதில் எளிதில் சென்று சேரக்கூடிய அளவில் பல்வேறு ஊடகங்கள் மூலம் இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
முண்டேவின் மறைவு நம் அனைவருக்கு விழிப்புணர்வு எற்படுத்துவதாக இருக்க வேண்டும். அவரது இழப்பை அடுத்து, ஒரு திருப்புமுனையாக நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
விபத்தால் அவர் சென்ற காருக்கு எந்த வகையிலும் சேதம் ஏற்படவில்லை. ஆனால், வேகத்தின்போது காரின் உள்ளேயே, முண்டே தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பல உள்காயங்கள் ஏற்பட்டன. அவரது கழுத்து பகுதியில் உள்ள மூட்டில்தான் முக்கியமாக பலத்த காயம் ஏற்பட்டது. அவரது முதுகுத் தண்டும் பாதிப்புக்குள்ளாக்கியது. மேலும், அதனால் மூளைக்கு செல்லும் ரத்தநாள குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக அவர் மாரடைப்பால் இறந்துள்ளார்.
இந்த தேசம், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் பெருந்தலைரை இழந்துவிட்டது. விபத்தால் சிக்கி உயிரிழந்தவர்களுடைய உறவினர்களின் மனநிலையை இப்போதுதான் உணர்கிறேன். பெரும்பாலும் சீட் பெல்ட் அணியாததே கார் விபத்தில் சிக்குபவர்கள் இறப்பதற்கு காரணமாக உள்ளது"
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.