BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 12 September 2014

93-ஆவது நினைவு தினம்: மகாகவி பாரதி

மனித நேயம் சிறக்கப் பாடிய மகாகவி பாரதி என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.

மகாகவி பாரதியின் 93-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பின்னர் நடந்த கூட்டத்தில் அவர் பேசியது: மாபெரும் கவிஞராக பாரதி விளங்கினார். அவர் தத்துவக் கவிஞர். அரசரையோ, இயற்கையையோ, அழகிய பெண்களையோ அவர் வர்ணித்துப் பாடவில்லை. நம் நாட்டு மண்ணை நேசித்து, மக்களை நேசித்து சமூகத்தை மேம்படுத்திட பாடல்கள் பாடினார். பதவி பெற்று அதன் சுகத்தை அனுபவிக்க அவர் நாட்டுக்கு உழைக்கக் கூறவில்லை. தேச விடுதலைக்கு உழைக்கும் தியாகிகளின் தியாகத்தை உணர்த்துவதையே நாட்டுக்கு உழைத்தல் என்றார்.
தமது செயல்மூலம் நாட்டை மேம்படுத்திட நினைத்தார். ஆகவே, பாரதி பணிபுரிந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெருமைக்குரியவர்கள். பாரதியின் பாடலைப் படிப்பதுடன் நின்றுவிடாமல், அதன் வழி நடப்பது வாழ்வை மேம்படுத்தும்.

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்திய கவிஞர். சாதி, மதங்களை விடுத்து தர்மத்தின் வழிநடக்க வழிகாட்டியவர் பாரதி. கற்கள், புற்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளும் மேம்பட பாடிய பாரதியின் வழியில் நடப்போம் என்றார். பாரதி இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் பிரான்சிஸ் பாஸ்டின் தலைமை வகித்தார். சேதுபதி மேல்நிலைப் பள்ளித் தாளாளர் எஸ்.பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். தியாகி ஐ.மாயாண்டிபாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் பாலகுருநாதன், நெல்லை பாலு, கி.பாரதீயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media