கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு ஒழுங்கு நடவடிக்கையாக திமுகவில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்குவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
"தி.மு.க. தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தலைமையையும் - கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும்தி.மு.கழகத்திலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார்."
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க. அழகிரி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பின் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சமீபத்தில் சந்தித்தார். கடந்த இரண்டு தினங்களாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக சிவகங்கை தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜா ஆகியோர் அழகிரியை நேரில் சென்று சந்தித்தனர். இது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியானதாக கூறப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.