மார்ச் 16-ல் தருமபுரி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் விஜய காந்தும் ராமதாஸும் ஒரே மேடையில் தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு பாமக மற்றும் தேமுதிக வட்டாரத்தில் எழுந்துள்ளது.
16-ம் தேதி விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்துக்காக தருமபுரி வருகிறார். அதேநாளில் ராமதாஸும் தேர்தல் பிரச்சாரத்துக்காக தருமபுரி வருகிறார். அதற்கு முன்பாக, பாஜக கூட்டணியில் தேமுதிக-வும் பாமக-வும் இடம்பெறுவது இறுதி செய்யப்பட்டால், ராமதாஸும் விஜயகாந்தும் ஒரே மேடையில் தோன்றும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து தருமபுரி அரசியல் வட்டாரத்தினர் கூறுகையில், “பாமக-வும் தேமுதிக-வும் தமிழக அரசியலில் இதுநாள் வரை எதிரும் புதிருமாய் இருந்து வந்துள்ளன. ராமதாஸும், அன்புமணியும் மேடைகள்தோறும் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை வெளிப்படையாகவே பேசியுள்ளனர். இந்நிலையில், காலத்தின் கட்டாயத்தால் பாமக-வும் தேமுதிக-வும் இப்போது ஒரே கூட்டணியில் இணையக்கூடிய சூழல் நிலவுகிறது. 16-ம் தேதிக்கு முன்பாக கூட்டணிக்கு இறுதிவடிவம் கிடைத்து விட்டால் ராமதாஸும் விஜயகாந்தும் முதல் முறையாக ஒரே மேடையில் அல்லது ஒரே வாகனத்தில் இணைந்து பிரச்சாரம் செய்வர். இது அரசியலில் ஒரு முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது’’ என்றனர்.
இதுகுறித்து பாமக-வின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணனிடம் கேட்டபோது, 16-ம் தேதி அவரச சூழல் எப்படி அமையும் என்று தெரியவில்லை. அதேநேரம், கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் 16 -ம் தேதிக்குப் பிறகு நடக்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் ஒன்றாக பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது’’ என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.