BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 6 March 2014

ஃபேஸ்புக், ட்விட்டரை புகழ்ந்து தள்ளும் கருணாநிதி

  ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் கனவுலகம் மெய்ப்பட்டிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களின் புகழ் பாடியிருக்கிறார், கருணாநிதி. இது தொடர்பாக 'இளைஞர்கள் உருவாக்கிய இணைய உலகம்' என்ற தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் கருணாநிதி பகிர்ந்தது:

இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு இணைய உலகம். கோடிக்கணக்கில் மக்கள் இணைய உலகின் குடிமக்களாக (Netizen) உள்ளனர். உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் கருத்துலகில் ஒன்றாகி முகநூல் (FaceBook) ட்விட்டர்களில் (Twitter) குடியிருக்கிறார்கள்.

முகநூல் 4.2.2004 இல் தொடங்கப்பட்டிருக்கிறது. மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) என்பவர் உருவாக்கி இருக்கிறார். அப்போது அவர் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர். தனது அறை நண்பர்கள் மற்றும் உடன் படிப்பவர்களுடன் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்.

மாணவர்களுக்காக மாணவர்கள் உருவாக்கிய முகநூல் இன்று வீடு, அலுவலகம், நண்பர்கள், உறவினர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள் என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் கணக்கு தொடங்க முடிகிறது. வங்கிகளில் கூட கணக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் முகநூலில் கணக்கு இல்லை என்றால் முகம் வாடிப் போகிறது.

அதேபோல் ட்விட்டர். 140 எழுத்துகளில் உள்ளத்தில் உள்ளதை உடனுக்குடன் வெளிப்படுத்த 50 கோடி மக்கள் இப்போது ட்விட்டரில் இருக்கிறார்கள்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவராக இருந்த ஜாக் டார்சியின் (Jack Dorsey) மூளையில் விளைந்த பயிர், வளர்ந்து பயன் தந்துகொண்டிருக்கிறது 21.3.2006 இரவு 9.50 மணிக்கு முதல் ட்விட்டர் செய்தி, "just setting up my twttr" என்று டார்சியால் அனுப்பபட்டிருக்கிறது. பின்னர், 'twttr', 'twitter' ஆகியிருக்கிறது. ட்விட்டர் எனும் பெயர் ஒரு பறவையின் கீச்சொலியின் ஒலிபெயர்ப்பாம்.

முகநூல், ட்விட்டர் வரும்வரை, செய்தித் தொடர்பு ஒருவழிப் பாதையாகத்தான் இருந்தது. பதிலுக்குக் காத்திருக்க வேண்டியிருந்தது.

முகநூலும், ட்விட்டரும் செய்தித் தொடர்பை இருவழிப்பாதை ஆக்கியிருக்கின்றன. கருத்தும் சிந்தனையும் ஏற்படுத்தும் அதிர்வுகளை உடனுக்குடன். உலகம் அறிந்துகொள்ள பயன்படுகின்றன. சாதி, மதம், நாடுகளின் எல்லைகள் கடந்து மக்கள் உறவாடவும் உரையாடவும் முகநூலும் ட்விட்டரும் வழியமைத்திருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கணியன் பூங்குன்றனாரின் கனவுலகம் மெய்ப்பட்டிருக்கிறது.

அதற்குக் கடந்த பிப்ரவரி பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள முகநூலுக்கும், உருவாக்கிய மார்க்-குக்கும், வரும் மார்ச் 21 ஆம் நாள் எட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடும் ட்விட்டருக்கும், உருவாக்கிய டார்சி-க்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media