திருச்சியில் நடந்த திமுக 10-வது மாநில மாநாட்டில், கருணாநிதி ஆற்றிய நிறைவுரையின் தொகுப்பு:
அண்ணா கண்ட கனவான சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிப்போரும், மதவாதத்தை எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்களும் திமுக கூட்டணிக்கு வரலாம். மதவாத அரசு உருவாக இடமளிக்க மாட்டோம் என உறுதி எடுப்பவர்கள் தோழமை கட்சிகளாக வரலாம். சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் ஆதரவளிப்பவர்கள் இந்த அணியில் இடம்பெறுவார்கள்.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வாய்தா கேட்டதன் காரணமாக இத்திட்டம் தொடங்க முடியாமல், ரூ.1000 கோடிக்கு மேல் செலவழிக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தாலும் கூட, அதை நிறைவேற்றக் கூடாது என அழுத்தம் திருத்தமாக ஜெயலலிதா இருப்பதின் நோக்கம் என்ன? திமுக அறிவித்த திட்டம் என்பதால், அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார் ஜெயலலிதா.
குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர், இந்த நீதிபதி கூடாது, இந்த நீதிபதி தான் வேண்டும் என சொன்னது உண்டா? அது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் நடந்தது. மனுப் போட்டும், வாய்தா வாங்கியுமே 10, 15 ஆண்டுகளாக வழக்கை இழுத்துக் கொண்டே போகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்குகளை இழுத்தடிக்க, வாய்தா வாங்க பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டிருக்கும் ஜெயலலிதா தான் நீதி, நியாயம் எனப் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறுகிறது. மக்கள் நலனுக்கான எதையும் ஜெயலலிதா செய்ய வில்லை. இப்படிப்பட்ட ஜெயலலிதாவா தமிழகத்தை முன்னேற்றப் போகிறார். இவராலா தமிழகம் முன்னேறப் போகிறது?
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி மாநாட்டின் இறுதியில் நிறைவு உரையாற்றி இருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.