ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.29: ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டையாடிய 5 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகர் மண்டல உதவி வனப் பாதுகாவலர் ஏ.பழனிராஜுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அடிக்கடி மான்கள் வேட்டையாடப்படுவதாக தகவல் கிடைத்தது. இவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு செண்பகத்தோப்பு சாலையில் உள்ள காளியப்பன் மகன் வீரையா என்பவரது செங்கல் சூளையில் சோதனை நடத்தினர். அப்போது கோட்டைப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (42), சங்கிலிராஜ் (33) உள்ளிட்ட சிலர் வேட்டையாடிய மான் இறைச்சியைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து வெள்ளைச்சாமியையும் சங்கிலிராஜையும் வனத் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குட்டதட்டி அருகே மானை வேட்டையாடியது தெரியவந்தது. மேலும், குலாலர் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம், வீரையா, கொன்றையாண்டி ஆகியோரும் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களையும் வனத்துறையினர் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட வன பாதுகாப்பாளர் பி.கே.அசோக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 5 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்து அவர் தீர்ப்பு அளித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.