BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 2 February 2014

வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக கருணாநிதி போராட்டம் நடத்த முன் வருவாரா? என டாக்டர் ராமதாஸ் கேள்வி

மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு, கருணாநிதி போராட்டம் நடத்த முன் வருவாரா? என டாக்டர் ராமதாஸ் கேள்வி

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் தமிழகத்தில் தவறாக பலரால் பயன்படுத்தப்படுகிறது என்றும் அந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் நீண்ட காலமாக கூறி வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன் கோவை இரா.செழியன் அவர்களுடன் இணைந்து இந்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருந்தார்.



இதுகுறித்து 2012ல் டாக்டர் ராமதாஸூம் மேலும் பல சமூக தலைவர்களும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, இது குறித்து திருத்தம் வேண்டும் என்று தீர்மாணம் நிறைவேற்றியதை திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக விமர்சித்தார்,  ‘‘சாதி வெறியை கிளப்புவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அப்போது கூறியிருந்தார், தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள் என்று கருணாநிதியே கூறியுள்ளதால் அது குறித்து அவரது நிலைப்பாடு என்ன?

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை கலைஞர் ஒப்புக் கொண்டால், அதில் நியாயமான திருத்தங்களைச் செய்ய முன்வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி போராட முன்வருவாரா? என்பதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

இது குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.மு.க.வில் நடைபெற்று வரும் உட்கட்சி மோதல்களின் தொடர்ச்சியாக அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என்பதால் அது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. அவ்வாறு கருத்துக் கூறுவது நாகரீகமாகவும் இருக்காது.

அதேநேரத்தில் மு.க. அழகிரி மீதான நடவடிக்கைக்காக அக்கட்சித் தலைமையால் பட்டியலிடப்பட்ட காரணங்களில் முதன்மையானது சமூக பழிவாங்கலுக்கு அடிப்படையாக உள்ள ஒரு விசயத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால், அது குறித்த தி.மு.க.வின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

மதுரை பகுதியில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்து மு.க.ஸ்டாலின் அணிக்கு மாறிய சிலர் மீது திடீரென வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அழகிரி அணியில் இருந்த சிலரின் தூண்டுதலால் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி வழக்குகள் தொடரப்பட்டதாகக் கூறி சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீதான நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததால் தான் அழகிரி நீக்கப்பட்டதாக திமு.க. கூறியிருக்கிறது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களின் தலைவர்கள் என்னிடம் முறையிட்டதை அடுத்து, கடந்த 02.12.2012 அன்று அனைத்து சமுதாய பேரியக்க கூட்டத்தை சென்னையில் கூட்டி, வன்கொடுமை சட்டத்தின் தவறான பயன்பாட்டை தடுக்க, அதில் சில நியாயமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்களை நிறைவேற்றினேன்.

அதற்கு அடுத்த நாள் 03.12.2012 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் கலைஞரிடம், டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து சாதிப் பிரச்சினைகளை கிளப்பும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறாரே? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கலைஞர், ‘‘சாதி வெறியை கிளப்புவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

அனைத்து சமுதாயத்தினர் மீதும் தவறாக பயன்படுத்தப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில நியாயமான திருத்தங்களை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, நான் சாதிவெறியை கிளப்புவதாக கலைஞர் அப்போது குற்றஞ்சாற்றினார். ஆனால், இப்போது, அதே கலைஞர், தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் மீது தி.மு.க.வைச் சேர்ந்த வேறு சிலர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறியிருக்கிறார். இதேபோல் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளதாக மு.க.ஸ்டாலின் அச்சம் தெரிவித்திருக்கிறார்.

இதற்கெல்லாம் மேலாக, மு.க.அழகிரி நீக்கம் தொடர்பான அறிவிப்பில்,‘‘வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது’’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் மீது வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் தினகரன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

தமிழ் நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் எந்த அளவுக்கு தவறாக பயன் படுத்தபடுகிறது என்பதற்கு இவற்றைவிட தெளிவான உதாரணம் இருக்க முடியாது.

இவ்வளவுக்கும் பிறகாவது தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா, இல்லையா?, ஒருவேளை தவறாக பயன்படுத்தப்படவில்லை என்றால் தி.மு.க. வினர் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் உண்மையா? என்பதை தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை கலைஞர் ஒப்புக் கொண்டால், அதில் நியாயமான திருத்தங்களைச் செய்ய முன்வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி போராட முன்வருவாரா? என்பதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

டாக்டர் ராமதாஸ் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து குறை கூறியபோது அதை "சாதி வெறியை கிளப்புவோர்"  என குறை கூறியவர் தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று குறை கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media