தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 490 மீனவக் கிராமங்களில்
விழிப்புணர்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக மாநில கடலோரப் பாதுகாப்பு
குழும ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார். சர்வதேசக் கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில்
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம்
கூறியது:
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓர் ஆண்டாக மாநிலம் முழுவதும்
கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது 12 கடலோரக் காவல்
நிலையங்கள் உள்ளன. கடலோரப் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி தமிழக அரசு
கூடுதலாக 30 காவல் நிலையங்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான
கட்டடங்கள் கட்டப்பட்டு நிறைவு நிலையில் உள்ளன.

கடலோரத்தில் மீனவர்கள் பங்களிப்புடன் ரோந்துப் பணியும், கண்காணிப்பு
பணியும் நடைபெறுகிறது. இதற்காக 500 மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படை மூலம்
கடலோரப் பாதுகாப்பு குழுமத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர,
கடலோரத்தில் அன்னியர்கள் ஊடுருவதைத் தடுக்கும் வகையில் 490 மீனவக்
கிராமங்களில் விழிப்புணர்வுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ரகசியக் கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன என்றார் சைலேந்திரபாபு.
கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி: முன்னதாக, சென்னை மெரீனா கடற்கரையில்
நடந்த தூய்மைப்படுத்தும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், "ட்ரீ
பவுண்டேசன் தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்கள், கடலோரப் பாதுகாப்புப்
படையினர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை மெரீனா கடற்கரை, எலியட்
கடற்கரை ஆகியவற்றில் குப்பைகளையும் வேண்டாத கழிவுகளையும்
அப்புறப்படுத்தினர். இதில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, கடலோரப் பாதுகாப்புப் படை
கிழக்குப் பிராந்திய கமாண்டர் எஸ்.பி. சர்மா, டி.ஐ.ஜி. தாலா, டி.ஐ.ஜி.
தியாகி, மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ராஜலெட்சுமி, "ட்ரீ
பவுண்டேசன் அமைப்பைச் சேர்ந்த சுப்பராஜா தரணி ஆகியோர் பங்கேற்றனர்.
சர்வதேசக் கடற்கரை தூய்மை தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் கடலோரப் பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் சென்னை
கடற்கரைகளில் வலம் வந்தது. கடற்கரையையொட்டிய பகுதிகளில் வசிக்கும்
மக்களுக்கு கடற்கரை தூய்மை, பாதுகாப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.