BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 3 September 2014

தமிழ் இலக்கியங்களில் வானியல் சிந்தனை


ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மாணிக்கவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்"

விளக்கம்:

பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.

மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார். ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது. அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று மாணிக்கவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது. அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும்! ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை.

இனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"

இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.

வான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது? பூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். இஸ்ரோவுக்கும்(ISRO) முன்னரே வள்ளுவருக்கு வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது.

இதையே இராமாயணம் பாடிய கம்பர், வாலியின் இறப்புப் பற்றிப் பேசும் போது

"தன்னடி ஆழ்த லோடும் தாமரைத் தடங் கணானும்
பொன்னுடை வாளை நீட்டிப் நீயிது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்."

இதில் வாலி இறந்து, வானுலகத்திர்க்கும் அப்பால் உள்ள உலகத்திற்கு செல்கிறான் என்று குறிப்பிடுகின்றார். அது எந்த உலகம்?

அது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு.

"பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்"

"ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது."
இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி! இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பார்த்தால் வேற்றுக்கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.

இவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை! பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப்படவுமில்லை!


ஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழையும் எழுதி அனுப்புகிறார்கள் என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம். அது உண்மையாக இருந்தால், அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும் இருக்கத்தான் செய்யும். அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது நிச்சயம் ஒருநாள் சங்க இலக்கியங்கள் அனைத்தும் விஞ்ஞானிகளால் தேடி படிக்கப்படும் என்பது உண்மை.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media