மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக, இலங்கைக் கடற்படை சிறைபிடித்துள்ள
72 விசைப் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று நாகை, காரைக்கால் பகுதி
மீனவர்கள் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதர் ஏ.சபருல்லா கானிடம்
கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக, தேசிய மீனவர் பேரவையின் தலைவர் மா.இளங்கோவன் கூறியது: தமிழக மீனவர் பிரச்னையைத் தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர்
ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்ச ஆகியோர் தீவிரமாக முயற்சி செய்து
வருகின்றனர்.
இலங்கைச் சிறைகளில் 76 தமிழக மீனவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும்
உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நாகப்பட்டினம், காரைக்கால் பகுதி
மீனவர்கள் இலங்கைத் துணைத் தூதரிடம் வலியுறுத்தினோம்.
அதோடு, எங்களின் 72 விசைப் படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அப்போது, புயல், மழை, கடல்
சீற்றம் ஆகியவற்றால் தமிழக மீனவர்களின் 72 படகுகளும் கடுமையாகச் சேதமடையும்
என்பதால் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடம்
கோரினோம். விசைப் படகுகளின் உரிமையாளர்கள் கடன் வாங்கி இந்தப் படகுகளை
வாங்கியுள்ளனர். படகுகள் எங்களின் பராமரிப்பில் இருந்தாலே புயல் மழைக்
காலத்தில் அவை பாதிப்படையும். இந்த நிலையில், பராமரிப்பு ஏதும் இல்லாத
நிலையில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் இனி பயன்படுத்த முடியாத
நிலைக்குப் போய்விடும். அந்தப் படகுகளின் மொத்த மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.
கடனில் வாங்கப்பட்டுள்ள இந்தப் படகுகளை தமிழக மீனவர்களிடம் உடனடியாக
ஒப்படைக்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினோம். தமிழக மீனவர்களையும்,
விசைப்படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக இலங்கை அதிபரின் கவனத்துக்கு
எடுத்துச் சென்று ஆவன செய்வதாக எங்களிடம் அவர் உறுதியளித்தார் என்றார் அவர்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.