BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 29 January 2014

விதியே விதியே என்செய்ய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை - வீணாகிப்போன முத்துகுமாரின் தியாகம் -

வீணாகிப்போன முத்துகுமாரின் தியாகம் - விதியே விதியே என்செய்ய நினைத்திட்டாய் என்  தமிழ் சாதியை

2009ம் ஆண்டு இதே நாள், சென்னை சாஸ்திரி பவன் எதிரில் ஒரு இளைஞன் தன் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்துக்கொண்டான், அவன் ஒன்றும் சாதாரண இளைஞனோ உணர்ச்சிவயப்பட்ட இளைஞனோ அல்ல என்பது அவன் எழுதியிருந்த அந்த மரண சாசனத்தில் தெரிந்தது.


2009ல் இணையமும் தொலைத்தொடர்பு சாதனங்களும் இருந்ததால் முத்துக்குமார் தீக்குளித்த உடனே அவரின் அந்த கடிதம் இணையம் எங்கும் பரவியது, இல்லையென்றால் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை என்று மறுநாள் பத்திரிக்கையில் வரும்படி அரசு செய்திருக்கும்.
   
 முத்துக்குமாரின் கடிதத்தை படிக்க மேலே உள்ள படங்களின் மேல் வைத்து அழுத்தவும்


ஈழத்தில் நடைபெற்ற போரை நிறுத்த கோரி தன்னுயிரை மாய்த்து தன் உடலை துருப்பு சீட்டாக வைத்து போராட கோரினார் ஈகி முத்துக்குமார், ஆனால் நடந்தது என்னவோ இரண்டு நாள் உணர்ச்சிவயப்பட்ட நாடகங்கள் மட்டுமே. முத்துக்குமார் ஈழப்போரை நிறுத்த கோரி தீக்குளிப்பதற்கு சில நாட்கள் முன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இருந்த உண்ணாவிரதத்தில் நான்கு நாட்களும் மேடையின் அருகேயே சுற்றி வந்துள்ளார், வைகோ நடத்திய ஆர்பாட்டங்களில் உணர்ச்சிபிழம்பாக கலந்து கொண்டிருந்துள்ளார், போரை நிறுத்த யார் கூட்டம் போட்டாலும் ஓடிப்போய் கலந்து கொண்டிருந்தார், அனைத்தும் பலன் தராத போது தன்னுயிரையாவது கொடுத்து போரை நிறுத்தலாமே என்று ஓடினார்.

முன்னையிட்ட தீ முப்புறத்திலே
பின்னையிட்ட தீ தென் இலங்கையில்,
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

என்று முத்துக்குமார் தன் மெய்யுடம்பில் தீயிட்டுக்கொண்டு தன் உடலை துருப்புசீட்டாக கோரி உயிர்விட்டால் அந்த உடலை அரசுக்கு பிரச்சினை வராமல் எப்படி அடக்கம் செய்வது என ஓடோடி வந்தார்கள் மீசையை நீவிவிட்டும் முறுக்கி விட்டும் தமிழ் தமிழ் என்று பேசிய தலைவர்கள்.என் பிணத்தை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக போய் மாணவர்களை திரட்டி போராடுங்கள் என்று முத்துக்குமார் குறிப்பிட்டிருந்தார், ஆனால் முத்துக்குமரனின் அடக்கத்திற்கு செங்கல்பட்டு மருத்துவகல்லூரியில் இருந்து திரண்ட மாணவர்கள் ஒத்துக்கொள்ளாமல் வழி மறிக்க தன் தொண்டர் கும்பலை வைத்து மாணவர்களை மிரட்டி விலக்க செய்தார் திருமாவளவன் கட்சியின் வன்னிஅரசு என்று கற்றது தமிழ் ராம் பின்னாளில் தன்னுடைய வேதனை தோய்ந்த கட்டுரையில் குறிப்பிட்டார். வைகோவும் நெடுமாறனும் விரைவில் நல்லடக்கம் செய்ய துடிப்பாக இருந்தனர்.

கருணாநிதி தலைமையிலான அரசோ எந்த போராட்டமும் நடைபெற்றுவிடக்கூடாது என்று மாணவர்களின் கல்லூரிகளையும் விடுதியையும் மூடினார்கள், பின்னாளில் ஈழத்தாயாக வேடம் பூண்ட அப்போதைய முக்கிய எதிர்கட்சி தலைவரான ஜெயலலிதாவோ வாயையே திறக்கவில்லை. முத்துக்குமார் என்ற அந்த தியாகியின் உடல் 20,000 பேர் உடன் வர கொளத்துமேட்டில் மீண்டும் ஒரு முறை தீயை தீண்டியது.  நான்கே மாதத்தில் தேர்தலும் வந்தது மீண்டும் காங்கிரஸ்-திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்திலே பெரும் வெற்றி பெற்றது. யாரை எதிர்த்து தன் உடலில் தீயை மூட்டினானோ அவர்களையே பெரும் வெற்றி பெற வைத்து மூன்றாம் முறையாக முத்துக்குமரின் உடலில் தீயை மூட்டியது தமிழகம்.

இன்று முத்துக்குமார் உயிர்துறந்த 5ம் ஆண்டு நினைவு நாள், எதற்காக தன்னுடம்பில் முத்துக்குமார் தீவைத்துக்கொண்டாரோ அவைகள் இம்மியளவும் நடைபெறாமல் போய்விட நாமோ கருணாநிதி குடும்பத்தின் பதவி சண்டையை ரசித்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இன்றிருந்தால் முத்துக்குமாருக்கு திருமணம் ஆகி குழந்தைகளை கூட பெற்றிருப்பார்,  நல்ல பத்திரிக்கையாளராக இருந்திருப்பார், சிறந்த திரைப்படங்களை கூட அளித்திருப்பார். நல்ல பத்திரிக்கையாளனை, ஒரு சிறந்த செயல்பாட்டாளனை, தமிழுக்கும் தமிழருக்கும் எவ்வளவோ செய்திருக்க கூடிய திறமை உள்ளவரை, ஒரு தந்தையின் மகனை தீக்கு கொடுத்துவிட்டு இருக்கிறோம், தியாகத்தை மதிக்க தெரியாத தமிழினமே, விதியே விதியே என்செய்ய நினைத்திட்டாய் என்  தமிழ் சாதியை

# இந்த ஆதங்கம் உங்களுக்கும் இருந்தால் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media