உலக அளவில் கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவது குறித்து ஆராய உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) என்ற அமைப்பு உள்ளது. இது அமெரிக்காவில் பதிவுபெற்ற தன்னார்வ அமைப்பாகும். இதில் உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பு பல்கலைக்கழகங்களுடனும், தமிழக அரசுடனும் இணைந்து இதுவரை உலகின் பல பாகங்களில் 12 மாநாடுகளை நடத்தியுள்ளது. பதின்மூன்றாவது மாநாடு புதுச்சேரியில் முதன்முறையாக நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குப் புதுவைப் பல்கலைக்கழகப் பண்பாட்டு வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. முதல்வர் ரங்கசாமி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். உத்தமம் அமைப்பின் தலைவர் வாசு. அரங்கநாதன வரவேற்கிறார். சுவிசர்லாந்து பல்கலை. பேராசிரியர் கு. கல்யாணசுந்தரம் மாநாட்டின் நோக்கவுரையாற்ற உள்ளார்.
துணைவேந்தர் பேராசிரியர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் உத்தமம் ஆலோசகரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவருமான பேராசிரியர் மு.அனந்தகிருஷ்ணன் சிறப்புரையாற்ற உள்ளார்.
உலகத் தமிழ் இணைய மாநாடு மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது. ஆய்வரங்கம் புதுவைப் பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் நடைபெறுகிறது. இந்த ஆய்வரங்கில் ஆய்வாளர்கள் 100 பேர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளனர்.
அதே நாள்களில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தித்திடல் அருகில் உள்ள கைவினைப் பொருள் கண்காட்சிக் கூடத்தில் கணினித் திருவிழா என்ற பெயரில் மென்பொருள், கணினிக் கண்காட்சியும், மக்கள் அரங்கமும் நடைபெறுகிறது. தமிழகத்தின் முன்னணி கணினி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்கள் தயாரிப்புகளை பார்வைக்கு வைக்க உள்ளன.
மக்கள் அரங்கில் கணினி, இணையத் தன்னார்வலர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கணினி, இணையம் குறித்துப் பொதுமக்கள், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடையளிப்பார்கள். தமிழ்த்தட்டச்சு செய்வது, விக்கிப்பீடியாவில் எழுதுவது, வலைப்பதிவு (பிளாக்) உருவாக்குவது குறித்து, இணையத்தில் உள்ள இலவச மென்பொருள்களை அறிமுகம் செய்வது என்று மக்கள் அரங்கத்தின் பணிகள் இருக்கும்
.
மாநாட்டின் சார்பில் நடைபெறும் வலைப்பதிவு உருவாக்கும் போட்டியும், தமிழ்த் தட்டச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்குப் பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. தமிழ்க் கணினி, இணைய வளர்ச்சிக்குப் பாடுபட்ட தன்னார்வலர்கள் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட உள்ளனர். மாநாடு குறித்த செய்திகள் இணையதளத்தில் கிடைக்கும் என உலகத் தமிழ் இணைய மாநாட்டு உள்நாட்டுக்குழுத் தலைவர் மு.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.