ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்கான மாற்றுத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தெற்கு ரயில்வே அளித்துள்ள மாற்றுத் திட்டத்துடன் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா வெள்ளிக்கிழமை (செப்.26) ஆய்வு மேற்கொள்கிறார். ராயபுரம் ரயில் நிலையம் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இருப்பதால் அதை ரயில் முனையமாக மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் போதிய இடப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் முனையமாக்குவதில் பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன. 2012-2013 ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சென்னை ராயபுரம் ரயில் நிலையம் 4-ஆவது ரயில் முனையமாகவும், தாம்பரம் ரயில் நிலையம் 3-ஆவது ரயில் முனையமாகவும் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் 2013-2014-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்றுவதற்காக நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் ராயபுரத்தில் புதிய ரயில் முனையம் அமைப்பதற்காக, முதல் கட்டமாக கடற்கரை முதல் அத்திப்பட்டு வரை ரூ.200 கோடியில் ரயில் பாதை, நடைமேடைகளைப் பலப்படுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. எழும்பூர் ரயில் நிலையமும், சென்ட்ரல் ரயில் நிலையமும் சென்னைக்கு வரும் ரயில்களின் பிரதான வாயில்களாக இருந்தாலும், தென்னிந்தியாவில் நிறுவப்பட்ட முதல் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றது ராயபுரம். மேலும் தெற்காசியாவில் அமைக்கப்பட்ட 2- ஆவது ரயில் பாதை என்ற பெருமையும் ராயபுரம் ரயில் நிலையத்துக்கு உண்டு. இந்த ரயில் நிலையத்தின் பிரதானக் கட்டடம் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் உள்ளது.
இதுபோன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ராயபுரம் ரயில் நிலையத்தை புதிய ரயில்வே முனையமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் ரயில்வே அமைச்சகத்துக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி கூறியது: ரயில்வே முனையம் அமைப்பதில் ரயில்வே துறைக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. ஆனால் முனையம் தொடங்குவதற்கு முன்பாக அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படும். அதற்கு தேவையான நிலத்தைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமான இடத்திலிருந்து 35 மீட்டர் அகலத்தில் 7 ஏக்கர் நிலமும், அதன் எதிர்புறமுள்ள தனியார் நிலமும் தேவைப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சிக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிகழாண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் கிடைத்தவுடன் பணிகளைத் தொடங்க உள்ளோம். இப்போது முதல் கட்டமாக கடற்கரை முதல் அத்திப்பட்டு வரை 18 கிலோ மீட்டர் தூரத்துக்கான ரயில் பாதை அதன் வழியில் உள்ள ரயில் நிலையங்கள், நடைமேடைகளை ரூ.200 கோடியில் மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் ராயபுரத்தில் உள்ள பாலம் ஒன்றும் இடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ராயபுரம் ரயில் நிலையத்தில் உள்ள பாரம்பரிய ரயில் நிலையக் கட்டடத்தை இடிக்காமல், அந்தக் கட்டடத்தின் இரண்டுபுறமும் நடைமேடைகள் அமைக்கப்படவுள்ளன.
எனவே இந்த மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் 3 அல்லது 4 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு, ராயபுரம் முனையம் செயல்பாட்டுக்கு வரும். இந்த மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ய உள்ளார் என்றார் அவர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.