BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 31 May 2014

"எங்கள் பிள்ளைகள் ஊர் மக்கள் முன்னே மரத்தில் தொங்கவிடப்பட்டது போல், குற்றவாளிகளையும் மக்கள் முன் தண்டிக்க வேண்டும்"

உத்தர பிரதேசத்தின் படான் கிராமத்தில், தலித் சகோதரிகள் இருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் இருவரையும் ஊர் மத்தியில் இருந்த மாமரத்தில் கையிற்றில் தொங்கவிட்டனர். இதில் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்தனர்.

உயிரிழந்த ஒரு சிறுமியின் தந்தை கூறுகையில், “காவல்துறையின் உதவியை நாடினோம். அதில் ஒரு காவலர் இரண்டு மணி நேரத்தில் சிறுமிகள் வீடு திரும்பி விடுவார்கள் எனத் தெரிவித்தார். ஆனால், தூக்கில் தொங்கிய நிலையில்தான் அவர்கள் எங்களுக்கு கிடைத்தனர். இந்த சம்பவம் டெல்லியில், டிசம்பர் 16-ம் தேதி நடந்த சம்பவத்தை விட கொடூரமானது.

இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் மக்கள் முன்னே தூக்கிலிட வேண்டும். எங்கள் பிள்ளைகள் ஊர் மக்கள் முன்னே மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தனர். அது போல அவர்களை மக்கள் முன் தண்டிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியினர் உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும்-ஜி.கே.வாசன்


சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், "தமிழக காங்கிரஸ் கட்சியினர் உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும். மக்களைவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய, இளைஞர்கள் புதிய ஆட்சி அமைய வேண்டும் என விரும்பியது ஒரு காரணமாக இருக்கலாம். தேசிய அளவிளான பிரச்சினைகளே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமாகின. இருப்பினும், தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு உண்மையான காரணங்களை கண்டறிய வேண்டும்." எனக் கூறினார்.

இதே போல் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் விடுத்துள்ள அறிக்கையில், "கட்சிக்குள் இருக்கும் நிறை, குறைகள் எதையும் நேரடியாகத் தெரிவியுங்கள்; பத்திரிக்கையில் அறிக்கை வெளியிட வேண்டாம்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள முக்கிய‌ பிரச்சினைகளை தீர்க்கக் கோரி பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்


தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

 "மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பரிதவிக்கின்றனர். கிராமம், நகரம் என்றில்லாமல் அனைத்து மக்களும் குடிநீர் வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கி, அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்யவேண்டும்.

தமிழகத்தில் 70%-க்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். சமீப காலமாக விவசாயத்திற்கு போதுமான நீர் ஆதாரம் இல்லாததால் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, நாட்டிலுள்ள நதிகளை தேசிய மயமாக்கி, அவற்றை இணைத்து, தமிழகத்தின் நீர் ஆதாரத்தை உயர்த்தி, விவசாயம் பெருகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் வழிவகை காண வேண்டும்.

தமிழகத்தில் கடுமையான மின்பற்றாக்குறையால் பெரும்பாலான மாவட்டங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதன் விளைவாக சிறு, குறு மற்றும் பெருந் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக லட்சக் கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்து, வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலை போக்கிட மத்திய அரசின் தமிழ்நாட்டிற்கான மின் ஒதுக்கீட்டினை அதிகரித்து, தடையில்லா மின்சாரம் கொண்டு வந்து, தொழில் உற்பத்தியைப் பெருக்கி, படித்த, மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தின் தென் கடற்கரையோர மாவட்டங்களில் மணல் மற்றும் கனிம வள கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கான நிதி வருவாய் இழப்பு பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த கனிம வளங்களைப் பாதுகாக்க இன்னும் கடுமையான சட்டங்களைக் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் அன்றாடம் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை நமது நட்பு நாடு என்ற பெருந்தன்மையோடு இந்தியா நடந்து கொண்டாலும், இலங்கை அதை மதிப்பதில்லை. அங்கு வாழும் தமிழர்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு, மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பகுதிகளில் மீண்டும் குடியேற்றப்பட்டு, அனைத்து மனித உரிமைகளோடு, சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களும் நடத்தப்படுவதை தங்கள் தலைமையிலான அரசு ஏற்படுத்திட வேண்டும்.

அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி, எல்லோருக்கும், எல்லா இடத்திலும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி தனியார்மயமாக்கப்பட்டதால், தரமான கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. எல்லோருக்கும் சமச்சீரான கல்வி வாய்ப்பு கிடைத்திட அரசுப் பள்ளி, மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, அதன் தரத்தையும் உயர்த்திட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், மேம்பாலங்கள் போன்றவை மாநில அரசின் ஒத்துழைப்பு இன்மையால் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் நிறைவேற்றப்படாததால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவைகள் மாநில நிர்வாகத்தின் கீழ் வந்தாலும், பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில், மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டுக் குழுவை அமைத்து, தமிழக அரசின் திட்ட செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துதலை தங்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு செய்யவேண்டும்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஊழலற்ற, வளமான, வலிமையான பாரதத்தை உருவாக்குவோம்."

இவ்வாறு விஜயகாந்த் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசனுடன், சுரேஷ் ரெய்னா டேடிங்கா? டிவிட்டரில் இதற்கு ரெய்னா சொன்ன பதில்


கடந்த சில தினங்களாக இணையத்தை வட்டம் அடித்த செய்தி இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா - கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலிக்கிறார்கள் என்பது தான்.

இச்செய்தி குறித்து ஸ்ருதிஹாசன் எந்த ஒரு கருத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிடவில்லை. நீண்ட நாட்களாகவே இந்த செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது. பலரும் அந்த செய்தியில் ஸ்ருதிஹாசனின் ட்விட்டர் தளத்தினை குறிப்பிட்டார்கள். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் ஸ்ருதி வெளியிடாத காரணத்தினால் செய்தி உண்மையாக தான் இருக்கும் என்று கூறிவந்தார்கள்.

ஆனால் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இச்செய்தி குறித்து தனது ட்விட்டர் தளத்தில் கருத்து கூறியிருக்கிறார். "நிறைய மீடியாக்கள் தகவல்களை உறுதிப்படுத்தாமல், செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். நான் இதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் யாருடனும் டேட்டிங்கில் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

21 அமைச்சர்கள் குழுக்களையும், 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களையும் கலைக்க மோடி உத்தரவு


மத்திய அமைச்சர்கள் குழு, அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றை கலைத்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: "மத்திய அமைச்சகங்களுக்கும், இலாகாக்களுக்கும் கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 21 அமைச்சர்கள் குழுக்களையும், 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களையும் கலைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் முக்கிய முடிவுகள் துரிதமாக எடுக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும்.

அமைச்சர்கள் குழுக்கள் முன் நிலுவையில் உள்ள விவகாரங்களில் இனி அமைச்சகமே முடிவு எடுக்கும்.

அமைச்சகங்கள் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால் கேபினட் செயலரும், பிரதமர் அலுவலகமும் உதவி செய்வார்கள்.

விரைந்து முடிவுகள் எடுக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்".

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் சிறுமிகளை பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்டது தொடர்பாக 2 போலீஸார் உட்பட, 5 பேர் கைது


உத்தரப் பிரதேச மாநிலம் பதௌன் பகுதியில் 14, 15 வயதையுடைய சிறுமிகள் இருவர் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டு, கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 5-வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் பெயர் தெரியாத 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

2 போலீஸ் உட்பட 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 போலீசாரும், பப்பு யாதவ், அவதேஷ் யாதவ் மற்றும் உர்வேஷ் யாதவ் ஆகிய 3 சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் உத்தர பிரதேச மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக விரைவு நீதிமன்றம் மூலம் உடனடியாக குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர மாநில அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சுயநலத்துக்காக சிவகங்கையில் மட்டும் தன் மகனுக்காகப் பிரச்சாரம் செய்த சிதம்பரம், கட்சியையே அழிக்கப் பார்க்கிறார்

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியையே அழிக்கப் பார்க்கிறார் என்று கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து 30-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து ஞான தேசிகனை நீக்க வேண்டும் என்று கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சியைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு சிலர் அறிக்கை வெளியிட்டுள்ளது மிகப் பெரிய தவறு. அறிக்கை விட்டவர்கள், ஜூன் 6-ம் தேதி நடக்கவுள்ள மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தோல்விக்கான காரணங்களையும், தங்களுடைய கருத்துக்களையும் கட்சித் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கலாம். அதை விடுத்து தன்னிச்சையாக அறிக்கை விடுவது ஏற்புடையது அல்ல.

இன்று கோரிக்கை விடுப்ப வர்கள், தேர்தலின்போது எந்தத் தொகுதிக்கும் சென்று பணியாற்ற வில்லை. இலங்கை பிரச்சினை, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை போன்ற பிரச்சினைகளின்போது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலை களில் இவர்களோ அல்லது இவர்களுக்கு பின்னால் இருந்து இயக்குபவர்களோ யாரும் குரல் கொடுக்கவில்லை.

ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதுதான் அகில இந்திய அளவில் பொருளாதார வீழ்ச்சியும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டு இன்று காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது. அவசரப்பட்டு ஆந்திராவை இரண்டாகப் பிரித்து அங்கு காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை உண்டாக்கியவர் உள் துறை அமைச்சராக இருந்த சிதம்பரம்தான். கட்சிக்காக அல்லாமல் சுயநலத்துக்காக சிவகங்கை தொகுதியில் மட்டும் தன் மகனுக்காகப் பிரச்சாரம் செய்தவர் இன்று கட்சியையே அழிக்கப் பார்க்கிறார்.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக கட்சியிலுள்ள எல்லா அமைச்சர்களையும் முன்னாள் மாநிலத் தலைவர்களையும் ஒருங் கிணைத்து கட்சியின் ஒற்று மையை வெளிப்படுத்தி தமிழகம் முழுவதும் கூட்டங்கள் போட்டவர் ஞானதேசிகன். காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளையும், மாவட்ட தலைவர்களையும் நியமித்து கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, தொண்டர் களை அரவணைத்துச் செல்லும் தலைவராக ஞானதேசிகன் விளங்குகிறார்.

எனவே, இதுபோன்ற அறிக்கை களை விடுவதன்மூலம் தமிழக காங்கிரஸ் கட்சியை பலவீனப் படுத்தாமல் கட்சியின் வளர்ச்சிக் காக அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவிலிருந்து ப.சிதம்பரத்தை மாநிலங்களவைக்கு அனுப்ப சித்தராமையா எதிர்ப்பு

கர்நாடகாவில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் 4 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூன் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பெங்களூரில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் திக் விஜய்சிங் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று  நடைபெற்ற போது, சிதம்பரம் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்பொழுது கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசுகையில், “கர்நாடகாவுடன் துளியும் தொடர்பில்லாத தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரத்தை இங்கிருந்து தேர்வு செய்தால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். ஏனென்றால் கன்னடர் களை புறக்கணித்துவிட்டு வேறு மாநிலத்தில் இருப்பவரை தேர்வு செய்தால் கட்சிக்குள்ளே குழப்பம் ஏற்படும். அவரைத் தேர்ந்தெடுப் பதற்கு பதிலாக கர்நாடகாவில் இருக்கும் தகுதியான தலைவரை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும்'' என கூறினார்.

திக்விஜய் சிங், 'அவர் (சிதம்பரம்) தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதைக் கணித்து போட்டியிடுவதைத் தவிர்த்தார். இதனால் கட்சிக்கு மிகுந்த அவப்பெயர் ஏற்பட்டது'' என ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளார். 

Friday, 30 May 2014

2ஜி வழக்கில் தன்னை சாட்சியாக சேர்க்க வேண்டுமென ஆ.ராசா புதிய மனு


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நீதிபதி ஓ.பி.சைனி முன் ஆஜராகி தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், தன்னை வழக்கில் ஒரு சாட்சியாகவும் சேர்க்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்க கோரப்பட்டுள்ளது. சாட்சியாக சேர்ப்பது குறித்து நீதிபதி முடிவு செய்யவுள்ளார்.

சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள்: சைதை துரைசாமி அறிவிப்பு


சென்னை மாமன்ற கூட்டம் ஒன்றில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:

ஒரு வார்டுக்கு ஒன்று வீதம் 200 உணவகங்களும், அது தவிர ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, மற்றும் எழும்பூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றிலும் அம்மா உணவகங்கள் இருக்கின்றன.

தற்போது ஒவ்வொரு வார்டிலும் மேலும் ஒரு அம்மா உணவகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதே போன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனை மற்றும் கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும் அம்மா உணவகம் அமைப்பதற்கான உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே 203 அம்மா உணவகங்கள் உள்ளன. தற்போது மேலும் 200 அம்மா உணவகங்கள் தொடங்க உள்ளது.

காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கினால் ஐ.நா. தீர்மானப்படி பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டி வரும்



காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் 370வது பிரிவை நீக்குவது என்பது பாஜகவின் முக்கிய கோஷமாகும், தற்போது பாஜக தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்துள்ளதால் இந்த கோஷம் வலுத்துள்ளது, இது குறித்து பிரதமர் மோடி பதவியேற்றபின் இதுவரை எதுவும் சொல்லவில்லை என்றாலும் அவரது கட்சியினரும் ஆர்.எஸ்.எஸ்சும் இதை பிரச்சினையாக்குகின்றன.

காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க இயலாது, காஷ்மீர் மாநிலத்தின் எல்லையை அதிகரிக்கவோ சுருக்கவோ இந்திய பாராளுமன்றத்தால் இயலாது. இராணுவம், வெளியுறவு, நிதி மற்றும் தொலை தொடர்பு தவிர மற்ற அனைத்து சட்டங்களும் காஷ்மீர் மாநில சட்டத்திற்குட்பட்டது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு முசாஃபர் ஹூசைன் பெய்க் என்ற அரசியல் சாசன வல்லுநர்  அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டதாவது இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் வெளியேறியபோது பல்வேறு தனி தனி சாம்ராஜ்யங்களாக இருந்தவைகள் இந்தியாவில் தாமாகவோ அல்லது இந்திய அரசின் பேச்சுவார்த்தை, போலிஸ் மற்றும் ராணுவநடவடிக்கையினால் இணைக்கபப்ட்டன, ஆனால் ஜம்மு காஷ்மீர் இணைப்பு மட்டும் ஐ.நா சபை வரை சென்றது. இதனால் ஐக்கிய நாடுகள் சபையானது ஜம்மு காஷ்மீர் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அந்த பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இந்திய அரசுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே அரசியல் சாசனம் 370வது பிரிவு உருவாக்கப்பட்டது.

இந்த 370 ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையேயானது. இது இந்தியாவுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே அரசியல் சாசன தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இந்தியா 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் கோரி நீக்கிவிட்டால் இயல்பாகவே ஜம்மு காஷ்மீரத்து மக்கள் தங்களது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்ளும் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு உரிமை படைத்தவர்களாகிவிடுவர்கள் என்றார்

ஜூன் 3-ல் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு


பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஜூன் 3-ம் தேதி நேரில் சந்திக்கிறார். 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜூன் 3-ம் தேதி புது டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுவார்.
பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசின் சார்பில் மனு ஒன்றை பிரதமரிடம் அவர் அளிப்பார். அதில், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்தின் மிக முக்கிய விவகாரங்கள் அடங்கியிருக்கும். தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையை துரிதமாக்குவதற்கு வித்திடக் கூடியதும், மாநில நலனைக் காக்கக் கூடியதுமான மத்திய அரசு அதிவேகமாக கவனம் செலுத்தக்கூடிய விவகாரங்கள் முன்வைக்கப்படும்.  

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிப் பாடப் புத்தக்கத்தில் தன் வரலாற்றை சேர்க்க நரேந்திர மோடி எதிர்ப்பு

குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பள்ளிப் பாடப் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு குறித்த பாடத்தைச் சேர்க்க அம்மாநில அரசுகள் முடிவு செய்தன. ஆனால் இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று ட்விட்டர் மூலம் வெளியிட்ட செய்தியில், "சில மாநில அரசுகள், எனது வாழ்க்கைப் போராட்டத்தை பள்ளிப் பாடத்தில் சேர்ப்பது என முடிவு எடுத்துள்ளதாக செய்திகளைப் படித்தேன்.

வாழும் தனி நபர்களின் வாழ்க்கை வரலாறு, பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கூடாது என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

இந்தியாவின் மகத்தான வரலாற்றில் எத்தனையோ வல்லவர்கள் நிறைந்திருக்கின்றனர். அந்த மாபெரும் மனிதர்களின் வாழ்க்கையைதான் இளம் சிறார்கள் படிக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ரயிலில் ஏற முயன்ற பெண், டிக்கெட் பரிசோதகர் தள்ளி விட்டதில், உடல் துண்டாகி உயிரிழந்தார்

மகாராஷ்டிர மாநிலத்தில், உஜ்வாலா பாண்டே எனும் பெண் தனது 10 வயது மகளுடன் ராஜேந்திர நகர் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி.கோச்சில் ஏற முற்பட்டார்.

அவரிடம் சாதாரண வகுப்புக்கான டிக்கெட் இருந்ததால் ஏ.சி.கோச்சில் ஏறுவதைத் தடுத்து நிறுத்தினார் டிக்கெட் பரிசோதகர் சம்பத் சலுங்கே.

ரயிலைத் தவறவிட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் தன் 10 வயது மகளுடன் மீண்டும் ரயிலில் ஏற முயன்றார் உஜ்வாலா. அப்போது டிக்கெட் பரிசோதகர் அவரைப் பிடித்துத் தள்ளினார்.

டிக்கெட் பரிசோதகர் தள்ளி விட்டதில் தடுமாறிய உஜ்வாலா, ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையில் கீழே விழுந்து, ரயில் சக்கரங்களுக்கு இடையே சிக்கி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து கோபமடைந்த மக்கள், சலுங்கேவைப் பிடித்து இழுத்து, கடுமையாகத் தாக்கினர். பின்னர் அவர் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஸ்கூட்டராக செயல்படும் பாட்டரி பொறுத்தப்பட்ட சூட்கேஸ்


சீன நாட்டில், விவசாயியாக இருந்த ஒருவர், 10 வருடங்களாக முயன்று, சூட்கேஸில் பாட்டரி பொறுத்தி அதை ஸ்கூட்டராக 12 கிலோமீட்டர் தூரம் ஓட்டி காட்டியிருக்கிறார். இந்த ஸ்கூட்டரின் எடை 7கிலோகிராம் மட்டுமே. இதில் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கலாம் ,மணிக்கு 20கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த ஸ்கூட்டரில், 50-60 கிலோமீட்டர் தூரம் செல்லும் வரை பாட்டரி சார்ஜ் இருக்கும்.

பள்ளி பாடப்புத்தகத்தில் மோடி வாழ்க்கை வரலாறு, எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்


குஜராத்தில், 2015ஆம் ஆண்டு கல்வித் திட்டத்தில் மோடி வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளது. ஆரம்ப நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இனி மோடி வாழ்க்கை வரலாறு கற்பிக்கப்படும்.

இது குறித்து குஜராத் மாநில கல்வி அமைச்சர் புபேந்திர சிங் சுதாசமா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மோடியின் பிறப்பு, அவரது குடும்பப் பின்னணி, அவரது பள்ளி நாட்கள், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் முதல் பிரதமர் ஆக உயர்வடைந்தது வரை அந்த பாடப் புத்தகத்தில் அறிமுகம் செய்யப்படும்” என்றார். மாணவர்கள் மத்தியில் தலைமை வகிக்கும் திறமைகளையும் பண்பாட்டையும் மேம்படுத்தும் திட்டத்துடன் இது செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் தோஷி கூறுகையில், "மோடியை பரவசப்படுத்துவது எப்படி என்பதை யோசிப்பதை விட ஏழைக்குழந்தைகளுக்கு அனைத்துப் பாடப் புத்தகங்களும் கிடைக்க வழிவகை செய்வதே பொறுப்பான செயல்” என்று கூறியுள்ளார்.

விஜய் டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கு திருமணம்


விஜய் டிவியின் ‘டெலி அவார்டு’ நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளர் விருது பெற்று, அதை கொண்டாடி கொண்டிருக்கும் திவ்யதர்ஷினிக்கு (டிடி),  வரும் ஜீன் மாதம் இறுதியில், சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. மாப்பிள்ளையின் பெயர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி யாளராக பணியாற்றியவர்.

இது குறித்து டிடி கூறியதாவது, "கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் நாங்கள் இரு வரும் நண்பர்கள். என்னோட வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கின நேரம். அவரோட வீட்டில் அவருக்கு பொண்ணு பார்க்க தொடங்கினாங்க.

ஒரு வழியாக ரெண்டு பேர் வீட்டிலும் உள்ள பெரியவங்களே பேசி எங்கள் திருமணத்தை முடிவு செய்துட்டாங்க. ஜூன் இறுதியில் சென்னையில் திருமணம். இத்தனை நாட்களாக என்னோட நண்பனாக இருந்த ஸ்ரீகாந்தை, ‘ஹாய் மாமா’’ என்றுதான் செல்லமாக கூப்பிடுவேன். அவ்ளோ ஜாலியான, கேரிங்கான நபர். இப்போ என்னோட லைஃப் பாட்னராகவே ஆகிட்டார். ரொம்பவே சந்தோஷமா இருக்கு. உங்க எல்லோரோட ஆசீர்வாதமும் எங்க ரெண்டு பேருக்கும் வேண்டும்." என்று தெரிவித்தார்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஞானதேசிகன் பதவி விலக வேண்டும்-ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்

நாடாளுமன்ற தேர்தலலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதுகுறித்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி.க்கள் வள்ளல் பெருமான், கே.எஸ்.அழகிரி உள்பட 30-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தேசிய அளவில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. அதிலும் தமிழகத்தில் மிகவும் மோசமாக 4.31 சதவீத வாக்குகள் பெற்றதற்கு காரணம் என்ன? தமிழக காங்கிரஸ் தலைமை இந்தத் தேர்தலில் சரியாக செயல்படவில்லை.

மற்ற கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தனர். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் முறையாக காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து கூட்டம் போடவில்லை. பிரச்சாரத்துக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மாநில அளவில் பொதுக்கூட்டம்கூட நடத்தவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்தும் செயல்படவில்லை.

தலைமைப் பொறுப்பிலிருந்து முறையாக செயல்படத் தவறியதால், இந்த வீழ்ச்சிக்கான முழு பொறுப்பும் தமிழக காங்கிரஸ் தலைவரையே சேரும். இனி தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் தலையெடுக்க வேண்டும் என்றால், விவேகமாக செயல்படும் தலைமையை தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, தோல்விக்கு பொறுப்பேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, 29 May 2014

மோடி தர்பாரின் 14 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன‌

மோடி தர்பாரின் 14 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன‌

பாஜகவின் மோடி அமைச்சரவையில் உள்ள 14 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதிகபட்சமாக அமைச்சர் உமாபாரதி மீது 13 கிரிமினல் வழக்குகள் உள்ளன, அதில் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உண்டு.

நிதின் கட்காரி மீது 4 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

டெல்லி விமான நிலையத்தில், சக பயணியுடன் சட்டையை பிடித்து சண்டை போட்ட பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ், சினேகா நடித்த ‘உன் சமையல் அறையில்’ படம் ஜூன் 6–ந்தேதி வெளிவர இருக்கிற‌து. பிரகாஷ் ராஜே இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார். பட வேலையாக டெல்லி சென்ற பிரகாஷ் ராஜ் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு ஏர் இந்தியா கவுண்டரில் பயணிகள் கியூவில் நின்று கொண்டு இருந்தார்கள். பிரகாஷ்ராஜும் அவர்களுடன் நின்றார்.

அப்போது சக பயணி ஒருவர் பிரகாஷ்ராஜை தள்ளிவிட்டார். கீழே விழப்போன பிரகாஷ்ராஜ் சுதாரித்து நிமிர்ந்தார். இதனால் அந்த பயணியை கண்டித்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, ஒருவரை யொருவர் கடுமையாக திட்டினார்கள். கோபமான பிரகாஷ்ராஜ் அந்த பயணியின் சட்டை காலரை பிடித்து இழுத்தார். பதிலுக்கு அவரும் பிரகாஷ் ராஜ் சட்டையை பிடித்தார். இந்த சண்டையை பார்த்துக் கொண்டிருந்த சக பயணிகள் குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியாக இழுத்து பிரித்துவிட்டனர்.

முன்னாள் அமைச்சர்கள் அரசு வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும்- வெங்கய்யா நாயுடு

மத்திய நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "பதிவியிருந்து விலகிய அமைச்சர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும். அப்போதுதான் புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்கள் அவற்றில் குடியேற முடியும்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்டுவதற்கு, வங்கிகளில் வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்படுவது அவசியம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தருவதற்கு புதிய அரசு முன்னுரிமை அளிக்கும். வீட்டுக் கடன் வட்டி குறைப்பது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் ஆலோசிக்க உள்ளேன்" என்றார்.

முதல் 100 நாட்கள் ஆட்சியில் முன்னுரிமை அளிக்கவேண்டிய, மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்


முதல் 100 நாட்கள் ஆட்சியில் முன்னுரிமை அளிக்கவேண்டிய 10 முக்கிய விஷயங்களை அமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அந்த 10 முன்னுரிமைகளாவன:

1.மக்களிடையே அதிகாரிகள் பற்றிய நம்பிக்கையை வளர்த்தெடுத்தல்.

2. புதிதான கருத்துக்கள் மற்றும் சுதந்திரமாக பணியாற்றுதலை வரவேற்பது.

3. கல்வி, சுகாதாரம், நீராதாரம், எரிசக்தி, சாலைகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்தல்.

4. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் மின் ஏலத்தை வளர்த்தெடுத்தல்.

5. அமைச்சகங்களுக்கு இடையிலான விவகாரங்களைக் கவனிக்க சிறப்பு ஏற்பாடு.6. அரசு எந்திரத்தில் மக்கள் நலனுக்கான அமைப்பை ஏற்படுத்துதல்.

7. பொருளாதார விவகாரங்களுக்கு உடனுக்குடன் முன்னுரிமை அளித்தல்.

8. உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுச் சீர்திருத்தங்கள்.

9.அரசின் கொள்கையை குறித்த காலத்தில் செய்து முடித்தல்.

10. அரசுக் கொள்கைகளில் நிலையான போக்கைக் கடைபிடித்தல் மற்றும் திறமையாக செயல்படுதல்

இந்த 10 முன்னுரிமைகளை பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாஸ்போர்ட்டை தன் குழந்தையிடம் கொடுத்து விட்டு ஏர்போர்ட்டில் பரிதவிக்கும் தந்தை


சீனாவில் இருந்து  தென் கொரியா கிளம்பிய தந்தை ஒருவர், தன் 4-வயது மகனிடம் பாஸ்போர்ட்டை கொடுத்திருக்கிறார். அச்சிறுவன்  தன் ஒவிய திறமையை பாஸ்போர்ட்டில் பயன்படுத்தி, படங்கள் வரைந்திருக்கிறார். பாஸ்போர்ட்டில் இருக்கும் விவரங்கள் யாவும் சிறுவன் வரைந்த படங்களினால் தெரியாமல் போக, இருவரும் தென் கொரியா ஏர்போர்ட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவனை அழைத்து வந்த தந்தை, சிக்கலில் இருந்து வெளிவர, சீனா தூதரகத்தை உதவிக்கு நாடியிருக்கிறார்.

அடுத்த முறை நீங்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் போது குழந்தைகளை அழைத்து சென்றால், உங்கள் பாஸ்போர்ட்டை எச்சரிக்கையுடன் வைத்திருங்கள்!

தமிழகத்தின் நலன்,வளர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது. மோடி அதனை பார்த்துக்கொள்வார். -இல.கணேசன்


"மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இது எந்த வகையிலும் தமிழகத்தை பாதிக்காது.", என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட‌ பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், செவ்வாய்க் கிழமை இரவு சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இதை கணக் கில் கொண்டு விகிதாச்சார அடிப் படையில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  இதனால் தமிழகத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது. பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அதனை பார்த் துக்கொள்வார்.

வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற் றுள்ள சுஷ்மா சுவராஜ், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக அந்த நாட்டுக்கே சென்று வந்தவர். தமிழக மீனவர்களின் நலனிலும் அவருக்கு அதிக அக்கறையுண்டு. எனவே அவரால் இலங்கையுடனான பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணமுடியும்.

நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காதது மத்திய மாநில உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது. விழாக்களில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும்.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

என் செயல்திறனை பார்த்துவிட்டு என்னை விமர்சியுங்கள்: ஸ்மிருதி இரானி


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை எதிர்த்துப் அமேதி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மத்திய மனிதவளம் மற்றும் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

பட்டப்படிப்பு கூட முடிக்காத ஸ்மிருதி இரானிக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பியது. காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான அஜய் மாக்கன், “மோடியின் அமைச்சரவையில் ஸ்மிருதி இரானிக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பட்டப்படிப்பு கூட படிக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஸ்மிருதி; "எனது கட்சி, என் திறமை மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த பொறுப்பை அளித்துள்ளது. என் செயல்திறனை பார்த்துவிட்டு என்னை விமர்சியுங்கள். எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியில் கவனத்தைச் செலுத்த முடியாமல் என்னை திசை திருப்பும் வகையில் சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.

கல்வித்துறையை நிர்வகிக்க பட்டப்படிப்பு அவசியமா அல்லது செயல்திறன் இருந்தால் போதுமா என்பது குறித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்!

சென்னையில் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 5 மாதத்தில் 22,914 வழக்குகள் பதிவு, விபத்து ஏற்படுத்திய 374 பேரின் லைசென்ஸ் ரத்து


சென்னையில் தினமும் இரவில் 54 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் சென்னை நகரில் நடத்தப்பட்ட சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 22,914 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை போதையை அளவிடும் கருவியான ‘பிரீத் அனலைசர்' மூலம் கண்டுபிடித்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவர்களில் 6,221 பேர் காரில் வந்தவர்கள்.

அதிக போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 374 பேரின் ஓட்டுநர் உரிமம் நீதிமன்றம் மூலம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், போதையில் வாகனம் ஓட்டியதாக 2,396 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் உயிரிழப்பு விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 27 சதவீதம் குறைந்துள்ளது.

தெலங்கானாவில் இன்று பந்த்: 136 கிராமங்களை சீமாந்திரா பகுதியில் சேர்பதற்கு எதிர்ப்பு


தெலங்கானா, சீமாந்திரா என இரு மாநிலங்கள் வரும் ஜூன் 2-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்க உள்ளதால், கம்மம் மாவட்டத்தில், போலாவரம் அணைக்கட்டின் கீழ் உள்ள 7 மண்டலங்களை சீமாந்திரா பகுதியில் சேர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரும், விரைவில் தெலங்கானா முதல்வராக பதவி ஏற்க உள்ளவருமான கே.சந்திரசேகர் ராவ், புதன்கிழமை ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து கூறியதாவது:

"போலாவரம் அணைக்கட்டின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் இருக்கும் 136 கிராமங்கள் தெலங்கானாவிற்கு சொந்தமானது. இப்போது மத்திய அரசு, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக இந்த மண்டலங்களை சீமாந்திரா பகுதியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தெலங்கானா பந்த் நடத்தப்படும், போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்."

இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்.

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார்

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து, வரும் ஜூன் 2-ம் தேதி தெலங்கானா மாநிலம் நாட்டின் 29வது மாநிலமாக உருவாக உள்ளது. அன்றைய நாளே, தெலங்கானாவின் முதல்வராக, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் கே. சந்திர சேகர் ராவ் பதவியேற்கிறார்.

சீமாந்திராவின் முதல் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் மாதம் 8-ம் தேதி, குண்டூர்-விஜயவாடா இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் பதவி ஏற்க உள்ளார். இவ்விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். ஜூன் 8-ம் தேதி  சந்திரபாபு நாயுடு பதவி பொறுப்பேற்கும் வரையில், சீமாந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் மற்றும் ஜூன் 2-ம் தேதி தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் பதவியேற்கும் வரை அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 28 May 2014

வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் வரை செல்ல 40 நிமிடங்கள் எடுக்கும் மெட்ரோ ரயில், கட்டணம் ரூ.40

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் இரு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிறைவேற்றப்படுகின்றன. முதல் கட்டமாக வரும் அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதற்கிடையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதற்கான கட்டணம் இறுதி செய்யப்பட்டு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 3 இயக்குனர்கள், தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஆகியோரை கொண்ட கட்டண நிர்ணயக் குழு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி மெட்ரோ ரெயில் கட்டணத்தை இறுதி செய்துள்ளது.

அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை செல்ல (24 கி.மீ.) ரூ. 40 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.10. அதற்கு அடுத்ததாக ரூ.15, ரூ.20, ரூ.25, ரூ.30 என முழுத் தொகையாகவே கட்டணம் வசூலிக்கப்படும். 

சென்னை மெட்ரோ ரெயிலுக்கான கட்டண விவரம் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும்.

ஒரு நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஒன்று முதல் 2 கி.மீ. தூரத்தில் அடுத்த நிலையம் வந்து விடும் என்பதால் மணிக்கு 34 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி வண்ணாரப் பேட்டையில் இருந்து விமான நிலையத்திற்கு 40 நிமிடங்களில் போய் சேர முடியும். சிக்னல், கிராசிங் போன்ற இடையூறுகள் இல்லை என்பதால் தாமத மின்றி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி குறித்து காங்கிரஸ் சர்ச்சை, சோனியா என்ன படித்துவிட்டார் என பதிலடி கொடுக்கும் பாஜக‌

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் அமேதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், ஸ்மிருதி இரானி. மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், 'மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்தான் கல்வித் துறையை கவனிப்பார். அந்தத் துறையின் அமைச்சர் ஸ்மிருதி இரானி பட்டப்படிப்புகூட படிக்காதவர்." எனக் கூறியுள்ளார்.

இதேபோல் சமூக ஆர்வலர் மது கிஷ்வார் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடியின் அமைச்சரவை எப்படிப்பட்டதாக உள்ளது தெரியுமா? 12 ஆம் வகுப்பை மட்டுமே முடித்த பின், ஃபேஷன் மாடலாக மாறி, அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடரில் மருமகளாக இருப்பவர் கல்வித் துறையை கவினிப்பாரா?" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், "காங்கிரஸ் தலைவர்கள், பாஜகவினர் குறித்து குற்றம் கண்டுப்பிடுப்பதை நிறுத்த வேண்டும். இந்த அகந்தையால்தான் அவர்கள் மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர். மக்களின் முடிவை காங்கிரஸ் ஏற்றுதான் ஆகவேண்டும். முதலில் அவர்கள் தங்கள் அகந்தையை விட்டுவிட்டு சுயபரிசோதனை செய்தால் நல்லது" என்று கூறினார்.

பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி கருத்து கூறும்போது, "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கல்வித் தகுதி என்னவென்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைவராக இருந்து, அரசுக்கு ஆலோசனைகளைக் கூறிவந்தவர். அவரது கல்வித் தகுதிச் சான்றிதழைப் பார்க்க வேண்டும்" என்றார்.

முதல்முறையாக மக்களவையில்ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை

2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்களில் ஒருவர் கூட இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடப்படத்தக்கது.  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், 482 வேட்பாளர்களை பாஜக களமிறக்கியது, அதில் 7 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள், ஆனால் அவர்களில் யாரும் தேர்தலில் வெற்றி பெறவில்லை. மக்களவையில், ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியராக இல்லாதது இதுவே முதல் முறை.

மக்களவையில் உள்ள எம்.பிக்களின் மொத்த எண்ணிக்கை 543, இதில் 23 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள், ஆனால் இதில் ஒருவர் கூட உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் இல்லை. அம்மாநிலத்தில் மட்டுமே பாஜக 71 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கு வங்காளத்தில் இருந்து அதிகபட்சமாக 7 இஸ்லாமிய வேட்பாளர்களும், இதற்கடுத்து பீகாரில் இருந்து 4 இஸ்லாமிய வேட்பாளர்களும்  மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

குழந்தைகளுக்கு மோடி பெயரை வைத்த முன்னாள் அமைச்சர் மீது பெற்றோர் போலீஸில் புகார்


மோடி பிரதமராக பதவியேற்ற அடுத்த சில நிமிடங்களில் மைசூரில் உள்ள அரசு செலுவம்பா மகப்பேறு மருத்துவமனையில் ஓர் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தன. அப்போது மருத்துவமனைக்கு வந்த கர்நாடக மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான எஸ்.ஏ. ராமதாஸ், அங்கிருந்த அனை வருக்கும் இனிப்பு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களின் வேண்டு கோளுக்கிணங்க அங்கு பிறந்த ஆண் குழந்தைக்கு `நரேந்திர கிருஷ்ணா மோடி' என்றும், பெண் குழந்தைக்கு `தன்மயி மோடி' எனவும் பெயரை சூட்டினார். அந்த குழந்தைகளுக்கு காவி நிறத்தில் புதிய உடைகளையும் வழங்கினார்.

இந்நிலையில் மோடியின் பெயரைச் சூட்டிய அந்த இரு குழந்தைகளின் பெற்றோரும், உறவினர்களும் எஸ்.ஏ.ராமதாஸ் மீது போலீஸில் புகார் அளித்துள் ளனர்.

இது தொடர்பாக தன்மயி மோடி என்ற குழந்தையின் தந்தை மஞ்சுநாத் கவுடா பேசுகையில், ``குழந்தை பிறந்தபோது நான் மருந்து வாங்க வெளியே சென்றிருந்தேன். அப்போது குழந் தைக்கு பெயர் சூட்டியுள்ளார். என்னுடைய மனைவியிடமோ, உறவினர்களிடமோ கூட அனுமதி பெறவில்லை.

அதுமட்டுமில்லாமல் ஏற் கெனவே பெண்கள் விவகாரத்தில் சிக்கி, தற் கொலைக்கு முயற்சித்தவர் ராமதாஸ். அவர் மீது ஏகப்பட்ட அவப்பெயர்கள் இருக்கிறது. இப் படிப்பட்ட ராமதாஸுக்கு என் னுடைய குழந்தைக்கு பெயர் வைக்கும் தகுதியில்லை.

நான் என்னுடைய தாயின் பெயரையே குழந்தைக்கு சூட்ட நினைத்தேன். இப்போது மருத்துவமனையும் அவர் சூட்டிய பெயரையே பிறப்பு சான்றிதழில் குறிப்பிட உள்ளது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளேன்'' என்றார்.

சிவகங்கையில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 59 வயது ஆசாமிக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது


சிவகங்கை மாவட்டத்தில், 13 வயது சிறுமியின் வயிறு பெரிதானதால், அவரது தாயார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 59 வயது மெய்யப்பன் என்ற முதியவர், தாயார் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் ரூ.20 கொடுத்து தின்பண்டம் வாங்கிச் சாப்பிடுமாறும், யாரி டமும் இதை தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டியதாகவும், பலமுறை தன்னி டம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கொத்தமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பலாத் காரம் செய்த முதியவருக்கு திருமணமான மகளும், திருமணமாகாத 2 மகன்களும் உள்ளனர்.

காவலர்கள் தேடுவதை அறிந்து தலைமறைவான மெய்யப்பன் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

13 வயது சிறுமியை 59 வயது முதியவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது வெட் ககரமான சம்பவம். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுக்கு குறையாமல் தண்டனை கிடைக்கும். இதுபோன்ற வழக்குகளில், முன்ஜாமீன் வழங்கக்கூடாது என நீதிமன்றம் கருதுகிறது. சமூகத்துக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது மட்டும் அல்ல; அந்த தண்டனையால், இது போன்ற குற்றங்களில் இனிமேல் யாரும் ஈடுபடக் கூடாது என்ற பயமும் ஏற் படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் பலாத் காரச் சம்பவங்கள் பெண் இனத்தின் மாண்புக்கு தீராத களங்கத்தை ஏற்படுத் தும். பெண்களின் கண்ணியத்தை குழி தோண்டிப் புதைக்கும் செயலாகும்.

இந்த வழக்கின் தன்மை மற்றும் இதுபோன்ற வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, மனுதாரருக்கு முன் ஜாமீன் மட்டும் அல்ல, ஜாமீனும் வழங்கக் கூடாது.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய் யப்படுகிறது. இந்த வழக்கில் விரைவில் நீதி வழங்க வேண்டும். கீழ் நீதிமன்றம் விரைவில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண் டும். குற்றங்கள் நிரூபிக்கப்படும் நிலை யில், மனுதாரரின் வயதைக் கருத்தில் கொண்டும் விடுதலை செய்யக்கூடாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் கொலை, சிபிஐ விசாரணையில் 20 வருடங்களுக்கு பிறகு தெரிய வந்தது


பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த ஒரு மைனர் பெண்ணை, மோகன் என்பவர் காதலித்து, சென்னைக்குக் கடத்திச் சென்று 1994 ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு காவல் ஆய்வாளராக இருந்த கஸ்தூரி காந்தி, இந்த காதலுக்கு வேப்பூரைச் சேர்ந்த பாண்டியன் (35) என்பவர் உதவியிருப்பதாகச் சந்தேகித்து, அவரை அழைத்துச் சென்று விசாரித்தார்.

இந்தநிலையில் பருத்திக்காட்டில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்ட நிலையில் பாண்டியன் சடலம் கிடந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், தனது கணவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொலை செய்து விட்டதாக பாண்டியனின் மனைவி அஞ்சலை, சடலத்தை வாங்க மறுத்து உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாண்டியன் மரணத்தில் சந்தேகம் உள்ளது என அஞ்சலை அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. பிறகு, சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ போலீஸார், பாண்டியன் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அப்போது காவல் ஆய்வாளராக இருந்த கஸ்தூரி காந்தி (தற்போது மதுரை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர்) மற்றும் அப்போது பாடாலூர் காவல் நிலையத்தில் காவலராக இருந்த ரவி (தற்போது திருச்சி விமான நிலைய குடியேற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்) ஆகியோரை சென்னையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, நிம்மதி, நியாயம் கிடைக்க வேண்டும் என ராஜபக்சேவிடம் வலியுறுத்திய மோடி


பிரதமர் நரேந்திர மோடி நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சேவை டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார். 

இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, நிம்மதி, நியாயம் கிடைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கை கட்டமைப்புக்குள் தேசிய சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ராஜபக்சேவை மோடி வலியுறுத்தினார். இதற்கு 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல் செய்வதுடன் அதைத்தாண்டியும் உரிய நடவடிக்கை எடுப்பது உதவும் எனவும் ராஜபக்சேவிடம் எடுத்துரைத்தார் மோடி.

இலங்கை- இந்தியா இரு தரப்பு உறவு, வர்த்தக-பொருளாதார கூட்டுறவு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, இலங்கை திரிகோணமலை மாவட்டம், சாம்பூரில் 500 மெகாவாட் அனல்மின் நிலையத்தை விரைவில் தொடங்குவது குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் மோடி விவாதித்தார். இந்த பிரச்சினையில் இரு தரப்பிலுமே சம்பந்தப்படுபவர்கள் தமிழர்கள்தான். அவர்கள் தங்களுக்குள் பேசி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கான தேவை பற்றி இரு தலைவர்களின் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

Tuesday, 27 May 2014

ஆம் ஆத்மி கவுண்டவுன் ஸ்டார்ட் - மோடி அரசுக்கு ஆம் ஆத்மி வைத்துள்ள 150 நாள் கெடு

ஆம் ஆத்மி கவுண்டவுன் ஸ்டார்ட் - ஆம் ஆத்மி வைத்துள்ள 150 நாள் கெடு

கருப்பு பணத்தை கண்டுபிடித்து 150 நாட்களில் இந்தியாவிற்கு கொண்டு வருவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி கொடுத்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம். இதற்கான கவுண்டவுண் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி இதை தொடர்ந்து கவனிக்கும். உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி தர்பாரில் மதிப்பிழந்து போன தமிழகம் - 18 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் பிடியை இழந்தது


1996ல் ஆரம்பித்து தற்போது சில மாதங்கள் முன்பு வரை டில்லியில் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் கேபினேட் மற்றும் இணையமைச்சர்களாக இருந்தனர், குறைந்தது 6 அமைச்சர்கள் அதிகபட்சமாக 12 அமைச்சர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்

தற்போது 2014ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களை வென்றது, பாஜகவும் பாமகவும் தலா ஒரு இடத்தில் வென்றது, 1996ல் இருந்து 2014 வரை கடந்த 18 ஆண்டுகளாக பல கேபினேட் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களை கொண்டிருந்த தமிழகம் தற்போது மீண்டும் பழைய கதையாக ஒரே ஒரு இணை அமைச்சரை பெற்று டெல்லியின் தன் பிடியை இழந்துள்ளது.

எப்போதெல்லாம் தேசிய கட்சிகள் வலுவாக இந்தியாவில் உள்ளதோ அப்போதெல்லாம் தமிழகம் புறக்கணிக்கப்படுவது வழக்கம், முன்பு காங்கிரஸ் கட்சி வலுவாக தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி செய்யும் போது தமிழகத்திற்கு ஒரு இணை அமைச்சர் பதவி தான் கிடைக்கும், தற்போது பாஜக தனிப்பெரும்பாண்மை பெற்றுள்ள நிலையிலும் ஒரே ஒரு இணை அமைச்சர் பதவி தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் 2ஜி போன்ற மெகா ஊழல்களில் சிக்கியிருந்தாலும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர், ஆனால் தற்போது தமிழகத்தின் ஒரே ஒரு இணை அமைச்சரால் என்ன செய்ய இயலும் என்ற கேள்வி எழுந்துள்ளது? தமிழகம் பழைய மாதிரியே புறக்கணிப்புக்குள்ளாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் மோடி அரசால் புறக்கணிக்கப்படுமா என்ற கேள்விதான் தற்போது அனைவர் மனதிலும் மேலோங்கியுள்ளது.

பிணைப் பத்திரம் தாக்கல் செய்தார் கேஜ்ரிவால், அவரை விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜாமீன் பெற ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிணைப் பத்திரம் அளிக்க மறுத்தார். இதனால கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தை அவர் நாடினார்.

இந்நிலையில், ஜாமீன் பெறுவதற்கு பிணைப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியது.

இதனை ஏற்றுக் கொண்ட கேஜ்ரிவால் தரப்பு, பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில் அவரது வழக்கறிஞர் பிணைப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.அதனால், அவரை திஹார் சிறையில் இருந்து விடுதலை செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கைக்கு வர வேண்டுமென மோடிக்கு அழைப்பு விடுத்த‌ ராஜபக்சே


பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சார்க் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்தை பயனுள்ளதாக இருந்தது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடனான பேச்சுவார்த்தையில் தீவிரவாதம் குறித்து விவாதிக்கப்பட்டது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கக்கூடாது என நவாஸிடம் மோடி வலியுறுத்தினார். இந்தியாவுடனான உறவுவையும், வர்த்தக தொடர்பையும் வலுப்படுத்த நவாஸ் உறுதி கூறியுள்ளார்.

மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடனான பேச்சுவார்த்தையின் போது தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. 13-வது அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தினார். அதிகார பகிர்வுக்கு 13-வது அரசியல் சட்டம் அமலாவது அவசியம் என்றும் விளக்கிக் கூறினார். அனைத்து துறைகளிலும் இலங்கையுடன் ஒத்துழைப்பு தொடரும் என உறுதி கூறினார். இதையடுத்து இலங்கைக்கு வரவேண்டும் என்று ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்று மோடி இலங்கைக்கு வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சுஜாதா சிங் கூறினார்.

மும்பை 26 / 11 பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணை குறித்து நவாஸ் ஷெரீப்பிடம் விசாரித்த‌ மோடி


பிரதமர் நரேந்திர மோடியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும், மும்பை 26 / 11 பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணை குறித்து நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தவிர, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக மேம்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு சமாதான செய்தியுடன் வந்திருப்பதாகவும், 1999-ல் வாஜ்பாயும் - தானும் விட்டுச் சென்ற அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர விரும்புவதாகவும் நேற்று நவாஸ் கூறியிருந்தார்.

ஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1 முதல் அறவே நீக்க, தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 "தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் இன்று (27.5.2014) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் துறை வளர்சிக்கும் இன்றியமையாததாக விளங்குவது மின்சாரமே ஆகும். 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. ஆனால், கிடைத்த மின்சாரமோ வெறும் 8,000 மெகவாட் தான். அதாவது கிடைத்த மின்சாரத்திற்கும், தேவைப்பட்ட மின்சாரத்திற்குமான இடைவெளி 4,000 மெகாவாட்டாக இருந்தது.

மேலும், தமிழ்நாடு மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கான பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய நடுத்தர கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.

இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மின்சாரம் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து படிப்படியாக பெறப்படும்.

புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கப் பெற்று வருகிறது. எனவே, கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 2 முழுவதையும் பயன்படுத்திட வேண்டும் என்று நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை அறிவுறுத்தியுள்ளேன்.

ஜூன் மாதம் முதல் கிடைக்கப் பெறும் காற்றாலை மின்சாரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் 1.6.2014 முதல் அறவே நீக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி, தற்போது உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90 விழுக்காடு மின் கட்டுப்பாடு 1.6.2014 முதல் நீக்கப்படும்.

இதே போன்று, உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மற்ற நேரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 20 விழுக்காடு மின் கட்டுப்பாடும் 1.6.2014 முதல் நீக்கப்படும். இதன் மூலம் 1.11.2008 முதல் தமிழ்நாட்டில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகை ஏற்படும். நான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்"

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மீனவர்கள் வலையை வீச சிக்னல் கொடுக்கும் டால்பின்கள் - பிரேசிலில் தலைமுறைகளாக நடக்கும் அதிசயம்

மீனவர்கள் வலையை வீச சிக்னல் கொடுக்கும் டால்பின்கள் - பிரேசிலில் தலைமுறைகளாக நடக்கும் அதிசயம்

பிரேசில் நாட்டில் லகுனா என்ற பகுதியில்(Laguna, Brazil)  மீனவர்களுக்கு டால்பின்கள் மீன் பிடிக்க உதவும் அதிசயம் நடக்கின்றது. 150க்கும் மேற்பட்ட டால்பின்களில் 50 டால்பின்கள் உள்ளூரில் உள்ள 200 மீனவர்களுக்கு உதவுகிறது.

மீன்பிடி படகுகள் ஒரு பக்கம் நிற்க, டால்பின்கள் வரிசையாக ஒரு பக்கம் தண்ணீரில் அணைபோல நிற்கின்றன, இவை இரண்டுக்கும் இடையில் மீன்கள் வரும் போது தங்கள் தலையாலோ, வாலாலோ டப டப வென்று தண்ணீருக்கு மேலே தட்டுகின்றன, உடனே மீனவர்கள் வலையை வீச கொத்து கொத்தாக மீன்கள் சிக்குகின்றன.

இவைகள் இன்று நேற்று நடப்பதல்ல, பல தலைமுறைகளாக 1847ம் ஆண்டிலிருந்து நடைபெறுகின்றன, கரையில் வசிக்கும் மீனவர்கள் அடுத்த தலைமுறைக்கு இந்த உத்தியை சொல்லி தருகிறார்கள், ஆனால் அடுத்தடுத்த தலைமுறை டால்பின்கள் எப்படி மீனவர்களுக்கு உதவுவதை கற்றுக்கொள்கின்றன என்று தான் புரியவில்லை.

இப்படி உதவுவதால் டால்பின்களுக்கு என்ன நன்மைகள் என்று தான் புரியவில்லை, இதன் மூலம் டால்பின்களுக்கும் மீன்கள் கிடைக்கின்றன என்கிறார்கள் ஆனாலும் இதை உறுதி படுத்த முடியவில்லை மேலும் அந்த பகுதியில் இருக்கும் 150 டால்பின்களில்  இந்த 50 டால்பின்கள் மட்டுமே இதை செய்கின்றன, பிற டால்பின்கள் மீனவர்களுக்கு உதவுவதில் பங்கேற்பதில்லை.

உள்ளூர் மீனவர்களுக்கு டால்பின்களுக்குமான இந்த உறவு காலம் காலமாக தொடருகிறது

இது குறித்த வீடியோவை இந்த லிங்கில் பார்க்கலாம்


பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை அதிபர் ராஜபக்சே சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என நம்ப படுகிறது.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகள் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு,  தமிழக கட்சிகள், தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், ஈழத்தமிழர் நலன் கருதியே இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பாஜக தொடர்ந்து வலியுறுத்து வந்தது. இந்நிலையில், எதிர்ப்புகளுக்கு இடையே இந்தியா வந்துள்ள ராஜபக்சே பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ராஜபக்சே, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கிறார்.

ஆளில்லா குட்டி விமானம் மூலம் பீட்சா விநியோகித்த நிறுவனம் மீது மும்பை போலீஸ் வழக்கு

கடந்த 11-ம் தேதி மும்பையைச் சேர்ந்த ‘பிரான்ஸெஸ்கோ பிஸ்ஸேரியா’ எனும் பீட்சா நிறுவனம் ஆளில்லா குட்டி விமானம் மூலம், கடையிலி ருந்து 1.5 கி.மீ. தொலைவில் லோயர் பரேல் என்ற இடத்திலுள்ள வாடிக்கையாளரின் வீட்டில் நேரடி யாக பீட்சாவை விநியோகம் செய்தது. முதன்முறையாக இம் முயற்சியைச் செய்த அந்நிறு வனம், இதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக இணைய தளங்களில் வெளியிட்டது.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என்பதால், முன் அனுமதி பெறாமல் குட்டி விமானத்தைப் பறக்க விட்டது தொடர்பாக மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அந்நிறுவனம் இதுபோன்ற ஆளில்லா விமானத் தைப் பறக்கவிடுவதற்கு அனுமதி கோரியதா என, மும்பை விமான நிலையத்திலுள்ள வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் மும்பை காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 45 அமைச்சர் களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில், இன்று அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேபினட் அமைச்சர்கள்:

1.ராஜ்நாத் சிங்- உள்துறை அமைச்சகம்.

2.அருண் ஜேட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை

3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு அமைச்சகம்.

4.வெங்கய்ய நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை.

5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்

6.ராம் விலாஸ் பாஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை.

7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை.

8.மேனகா காந்தி- பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை.

9.கல்ராஜ் மிஸ்ரா- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.

10.நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மை விவகாரத்துறை.

11.ஆனந்த் குமார்- ரசாயனம் மற்றும் உரத்துறை.

12.ரவிசங்கர் பிரசாத்- தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை.

13.ஆனந்த கீதே- கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை.

14.உமா பாரதி- நீர் வள மேலான்மை.

15.அசோக் கஜபதி ராஜூ- விமான போக்குவரத்துத் துறை.

16.ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல் துறை.

17.நரேந்திர சிங் தோமர்- சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.

18.ஜூவல் ஓரம் - பழங்குடியின் விவகாரத்துறை

19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை

20.ஸ்மிருதி இராணி- மனித வள மேம்பாடு

21.ராதா மோகன் சிங்- விவசாயம்

22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி

23. சதானந்த கவுடா- ரயில்வே அமைச்சர்

இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

1. ஜெனரல் வி.கே.சிங்- வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை.

2. இந்திரஜித் சிங் ராவ்- திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்

3. சந்தோஷ் கங்க்வார்- ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்

4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்- கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

5. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

6. சர்வானந்த சோனோவல்- விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு

7. பிரகாஷ் ஜவடேகர்- தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை.

8. பியுஷ் கோயல்- மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை

9. ஜிதேந்திர சிங்- அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை

10. நிர்மலா சீதாராமன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.

இணை அமைச்சர்கள்:

1. ஜி.எம்.சித்தேஸ்வரா- விமான போக்குவரத்துத் துறை

2. மனோஜ் சின்ஹா- ரயில்வே துறை

3. நிஹால் சந்த்- ரசாயனம் மற்றும் உரத் துறை.

4. உபேந்திர குஷ்வாஹா- ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை.

5. பொன்.ராதாகிருஷ்ணன்- கனரக தொழில்துறை.

6. கிரண் ரிஜிஜு- உள்துறை.

7. கிரிஷன் பால் குர்ஜார்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை.

8. சஞ்சீவ் குமார் பாலியான்- விவசாயம், உணவு பதுப்படுத்துதல் துறை.

9. மன்சுக்பாய் வாசவா- பழங்குடியின விவகாரத் துறை.

10. ராவ் சாஹிப் தான்வே- நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை.

11. விஷ்ணுதேவ் சாய்- சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை.

12. சுதர்சன் பகத்- சமூக நீதித் துறை.

‘வாட்ஸ் அப்’-பில் மோடிக்கு எதிரான செய்தி பரப்பிய மாணவர் பெங்களூரில் கைது

கர்நாடக மாநிலத்தில், பட்டத்தக்கலை பகுதியைச் சேர்ந்த‌ சையித் வக்காஸ் பர்மாவர் (24) என்பவர் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

கடந்த மே 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது வக்காஸ் தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ் அப்’பில் குறுஞ்செய்தி அனுப்பி யுள்ளார். பாஜகவின் பிரச்சார ஸ்லோகனான “இதுதான் சிறந்த தருணம்… மோடியை தேர்ந்தெடுங்கள்” என்பதை, “இது தான் சிறந்த தருணம்… மோடிக்கு இறுதி அஞ்சலி செலுத்துங்கள்” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இந்த குறுஞ்செய்தி ஒவ்வொருவராகக் கடந்து பாஜக தொண்டர் ஜெயந்த் தினேகர் என்பவருக்கும் சென்றுள்ளது. இதை தொடர்ந்து அவர் சைபர் கிரைம் போலீஸாரிடம் கடந்த 22-ம் தேதி புகார் அளித்துள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் வக்காஸின் தொலைபேசியை கண்காணித்தபோது அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வக்காஸ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். விசாரணையில், வக்காஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர் மீது ஐ.டி. சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

பல்வேறு மாணவர் மற்றும் அரசியல் அமைப்புகள் வக்காஸின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

நரேந்திரமோடி பதவியேற்ற விழாவில் ஏன் ரஜினி, விஜய் கலந்து கொள்ளவில்லை?


தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்திருந்த போது,  நரேந்திர மோடி  ரஜினிகாந்தை வீட்டுக்கே சென்று சந்தித்தார். அதேபோல கோவையில் மோடியை விஜய் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், மோடி பதவியேற்கும் விழாவுக்கு ரஜினி, விஜய் இருவருக்கும் அழைப்பு வந்தது. அவர்கள் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தங்களது முடிவை மாற்றிக் கொண்டனர்.

மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தன. ராஜபக்சே பங்கேற்கும் விழாவுக்கு ரஜினி போகக்கூடாது என வலியுறுத்தி, ‘பாலச்சந்திரன் மாணவர்கள் இயக்கம்’ சார்பில் ரஜினி வீடு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்த நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் ரஜினியும் விஜய்யும் கலந்துகொள்ளவில்லை.

பதவியேற்பு விழா நேற்று நடந்த போது, நடிகர் ரஜினி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்தபடமான ‘லிங்கா’ படப்பிடிப்பு சம்மந்தமான வேலைகளுக்காக ஹைதராபாத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்தபடமான ‘கத்தி’ படத்தின் வேலைகளுக்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்தார் என தகவல்கள் தெரிவித்தன.

Monday, 26 May 2014

பள்ளி பாடப்புத்தகத்தில் மோடியின் வாழ்க்கை வரலாறு


நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றுள்ள நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்க மத்திய பிரதேச பாரதீய ஜனதா அரசு ஆலோசித்து வருகிறது.

இது குறித்து மத்தியபிரதேச மாநில கல்வித்துறை அமைச்சர் பராஸ் ஜெயின் கூறுகையில், ‘‘மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி பாடத்தில் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க உள்ளோம். இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை செய்து வருகிறோம். விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை போலவே மோடியின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களின் மனதில் தூண்டுதலை ஏற்படுத்தும் ’’ என்று கூறினார்.

இதில் அரசு முடிவு எடுக்கும் பட்சத்தில் 3–ம் வகுப்பு முதல் 6–ம் வகுப்பு வரை உள்ள பாடத்தில் மோடியின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்படும் என்று நம்ப படுகிறது.

மோடியின் வாழ்க்கை வரலாறு பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படுவது குறித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்!

சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதிய விபத்து:பலியானோர் குடும்பத்திற்கு மோடி ஆறுதல்


உத்தரபிரதேச மாநிலத்தில் சரக்கு ரயில் மீது கோரக்பூர் விரைவு ரயில் மோதியதில் 20 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சன் கபிர் நகர் மாவட்டத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் வேகமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நரேந்திர மோடி, இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கேபினட் செயலாளரை உடனடியாக தொடர்பு கொண்ட அவர், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவிகளை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஒரு லட்சம், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என வடகிழக்கு ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

விஜய் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதி 'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது!


 'ஜில்லா' படத்தினைத் தொடர்ந்து விஜய் நடிப்பில்,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'கத்தி' ப‌டத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.

விஜய்யுடன் சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பவர் அனிருத். சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. இதுவரை சுமார் 60% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் தளத்தில், "விஜய்யின் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதி 'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும்" என கூறியிருக்கிறார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media