BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 28 February 2014

ஐஎன்எஸ் சிந்து ரத்னா விபத்தில், மற்றவர்களைக் காப்பாற்றி விட்டு, உயிரை விட்ட இரண்டு கடற்படை அதிகாரிகள்


ஐஎன்எஸ் சிந்து ரத்னா நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இரண்டு கடற்படை அதிகாரிகள் , 32 வயதான 'லெப்டினென்ட் கமாண்டர்' கபிஷ் முவால் மற்றும் 30 வயதான மனோரஞ்சன் குமார் உயிர் இழந்துள்ளனர்.

முவாலின் சகோதரர் ஆசிஷ் இதுகுறித்துக் கூறுகையில், "எனது சகோதரர் போரில் இறந்திருந்தால் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் இப்படி உயிரிழந்திருப்பது பெரும் வருத்தமாக உள்ளது. இந்தக் கப்பல் மிகவும் குறைபாடுகளுடன் இருப்பதாக என்னிடம் முவால் பலமுறை கூறியுள்ளார் . எல்லோருக்குமே இது தெரியும். கடைசி முறையாகத்தான் இந்தக் கப்பலை சோதிக்க அனுப்பினர். ஆனால் அது இருவரின் உயிரைப் பறித்து விட்டது." என்று வருத்தத்துடன் கூறினார் .

கப்பலில் இருந்த ஒரு பேட்டரியில் ஏற்பட்ட கசிவுதான் தீவிபத்துக்குக் காரணம் என்கிறார்கள். மேலும் முவால் மற்றும் குமார் ஆகியோர் இருந்த அறைக்குள் தீயை அணைக்க வைத்திருக்கும் தீத்தடுப்பான் கருவியிலிருந்து வெளியான விஷ வாயுவும் அறைக்குள் புகுந்து விட்டதால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீ மற்றும் விஷவாயுவும் பரவியதைத் தொடர்ந்து, முவாலும், குமாரும் தங்களது அறைக்குள் இருந்தவர்களை வேகமாக வெளியே தள்ளிக் காப்பாற்றியுள்ளனர். வேறு யாரும் உள்ளே சிக்கியுள்ளனரா என்றும் பார்த்துள்ளனர். அப்போதுதான் இவர்கள் இருவரும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கடற்படை வீரர்களின் உயிர் தியாகத்திற்கு 'சல்யூட்' செய்ய விரும்புவோர்கள், லைக் போடுங்கள்!

கொழும்புவில் விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்': வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை - கொந்தளிக்கும் வைகோ


விஜய் டிவி சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயல் என்று மதிமுக கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் நியாயம் கிடைக்க தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் நீதிக்கான முழக்கம் எழுந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிங்கள ராஜபக்சே அரசு வஞ்சகமான வேலையைச் செய்கிறது. கொடியவன் கோத்தபய ராஜபக்சே கூட்டம் பின்னணியில் செய்திருக்கிற ஏற்பாட்டில் இலங்கையில் இசை நிகழ்ச்சி என்ற பெயரில் மார்ச் 1-ஆம் தேதியும், 2-ஆம் தேதியும் உலக நாடுகளை ஏமாற்றும் வேலைக்கு ஏற்பாடாகி உள்ளது.

ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்காக நரித் தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்துகிறார்கள்.
இந்நிலையில் கொழும்பில் சிங்களவன் நடத்தும் கேளிக்கைக் கொண்டாட்டங்களில் தமிழ்நாட்டு இசைக் கலைஞர்களைப் பங்கேற்க வைப்பதன்மூலம் தாய்த் தமிழகத்தில் சிங்கள அரசுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று வெளி உலகத்திற்குச் சொல்வதற்காகவே இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.

ரோமாபுரி பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்ததுபோல விஜய் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்துதான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம்.

மார்ச்1 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் சிங்கள அரசின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சியில் பாடுகின்ற இசைக்கலைஞர்கள் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

உலகில் இசைக் கலையை முதலில் தந்தவர்களே தமிழர்கள்தான். இசைக்கலைஞர்கள் மீது நான் மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிறேன். எனவே, அவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கண்டிப்பாகப் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக மேற் கொள்ள இருக்கும் இசைக் கலைஞர்களின்  இலங்கை பயணத்திற்கு, மாணவ அமைப்பினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் எளிய மக்கள் கட்சி யாக மாறும் ஆம் ஆத்மி கட்சி - எ.ம.க.வில் இணைந்த சுப.உதயக்குமார் அறிக்கை



அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் எளிய மக்கள் கட்சியில் (AAP) இணைகின்றனர்

10 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் இல்லத்தை காலி செய்ய தயாராகும் மன்மோகன் சிங்


பிரதமர் மன்மோகன் சிங், தற்போது டெல்லியின் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமருக்கான‌ அதிகாரபூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார். வரும் நாடாளுமன்ற தோ்தலுக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ள பிரதமர் மன்மோகன் சிங், தற்போது குடியிருக்கும் பிரதமர் இல்லத்தை காலி செய்துவிட்டு, மோதிலால் நேரு பிளேஸ் பங்களாவுக்கு குடியேற தயாராகி வருகிறார்.

இந்த பங்களாவில் தான் டெல்லியின் முன்னாள் முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் வசித்து வந்தார். இந்த பங்களாவை, மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நான்கு படுக்கைகள் கொண்ட இந்த மிகப்பெரிய பங்களாவில், மன்மோகன் சிங் குடியேற உள்ளதால், பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது.

ஓட்டுக்கு பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் 1 வருடம் சிறை தண்டனை


பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் ஓட்டு போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுப்பதும், வாங்குவதும் வீடியோ ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை வழங்கப்படும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, வாங்குவதை தடுக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். திரை அரங்குகள், போஸ்டர்கள், அறிவிப்பு பலகைகள், தொலைக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். பறக்கும் படைகள் அமைக்கப்படும். பணம் கொண்டு செல்வதை தடுக்க இந்த பறக்கும் படைகள் பயன்படுத்தப்படும். பதட்டமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். 30 சதவீத வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் பொது மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களிலும், சுவர்களிலும் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் பொது இடங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. தனியார் இடங்களில் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். தமிழ்நாட்டில் ஓரே கட்டமாக தேர்தல் நடத்தும்படி அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதை தலைமை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளோம். தேர்தல் தேதி அறிவிக்கும் போதுதான் எத்தனை கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்பது தெரியும். பொது இடங்களில் அரசியல் கட்சியின் சின்னங்கள் இருந்தால் தேர்தல் விதிகளின்படி மூடி மறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நிருபர்களிடம் கூறினார்.

மோடியை ஆண்மையற்றவர் என்றழைத்த சல்மான் குர்ஷித், தான் ஆண்மை உள்ளவர் என நிரூபிப்பாரா?




 உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், '2002'ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் ஆண்மை அற்றவர். வலிமையானவராக இருந்திருந்தால் நிச்சயம் கலவரத்தை தடுத்து இருப்பார்' என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பாஜக‌ மத்தியில் மட்டுமல்ல, ராகுல் காந்தியே கூட சல்மான் குர்ஷித்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். ஆனாலும், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோரப் போவதில்லை என தெரிவித்தார் சல்மான் குர்ஷித். மேலும், நரேந்திரமோடியை 'ஆண்மை அற்றவர்' என்று நான் கூறியதில் எந்த தவறும் இல்லை என்று அவர் கூறினார்.


இந்நிலையில், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சல்மான் குர்ஷித் விமர்சனம் குறித்துக் கூறுகையில், ‘மோடியை ஆண்மையற்றவர் என விமர்சித்த குர்ஷித் தான் அவ்வாறு இல்லை என்பதை நிரூபிப்பாரா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

போராடி எதையும் சாதிக்க முடியவில்லை, ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறோம், இது ஒரு புதிய துவக்கம் - சுப.உதயக்குமார் அறிக்கை

போராடி எதையும் சாதிக்க முடியவில்லை, போராட்டத்தை மக்களிடம் கையளிக்கிறோம், நாங்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறோம், இது ஒரு புதிய துவக்கம் - சுப.உதயக்குமார் அறிக்கை

'கோச்சடையான்' இசையை மார்ச் 9 அன்று வெளியிட போகும் மாபெரும் நடிகர்..


கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொண்டு, இசையை வெளியிட போகிறவர், அமிதாப் பச்சன். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரஜினிகாந்த் சொந்தக் குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். இந்த படத்தின் முழுப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

கோச்சடையான்' இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சன் கலந்துக் கொள்ள இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், ஷோபனா, ருக்மணி மற்றும் பலர் நடித்து இருக்கும் இப்படத்தில், ஷோபனாவும், ரஜினியும் இணைந்து நடனமாடும் போட்டிப் பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

ஐந்து இந்தியர்களை உயிருடன் புதைத்தோம், சவுதி நீதிமன்றத்தில் 3 குற்றவாளிகள் வாக்குமூலம்


2010ம் ஆண்டில், சவுதி அரேபியாவில் உள்ள காதிப் பகுதியில் இருக்கும் பண்ணை ஒன்றில் குழி தோண்டியபோது அதில் 5 எலும்புக்கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் மற்றும் சிலரை கைது செய்தனர்.

 கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவர் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இது குறித்து ஒருவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

5 ஊழியர்கள் கைகள் கட்டப்பட்டு பண்ணை வீட்டு வரவேற்பு அறையில் இருப்பதை நாங்கள் பார்த்தோம். அப்போது என்னுடன் இருந்த நண்பர் அவர்களின் கைகள் ஏன் கட்டப்பட்டுள்ளது என்று எங்களுக்கு விருந்து அளித்தவரிடம் கேட்டார். அதற்கு அவர், அநத் 5 பேரில் ஒருவர் ஸ்பான்சரின் மகள் மற்றும் சில பெண்களுடன் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

நான் அந்த 5 இந்திய ஊழியர்களை பார்த்தபோது அவர்களின் கைகள் கட்டப்பட்டு அவர்கள் சுயநினைவின்றி இருந்தனர். நாங்கள் பக்கத்து அறைக்கு சென்று மது அருந்தினோம். அப்போது ஒருவர் கத்தும் சத்தம் கேட்டு வந்து நான் அவரை கன்னத்தில் அறைந்தேன். அதன் பிறகு என்னுடன் வந்த நண்பர் அந்த ஊழியரை கம்பால் அடித்தார். அவருக்கு ரத்தம் வரும் வரை அடித்தார். உடனே அந்த 5 பேரையும் வேறு ஒரு அறைக்கு கொண்டு சென்று நாங்கள் 3 பேரும் சேர்ந்து அவர்களை அடித்து நொறுக்கினோம். நாங்கள் மது அருந்திக் கொண்டும், புகைபிடித்துக் கொண்டும் அவர்களை அடித்தோம். உடனே எங்களுக்கு விருந்து அளித்தவர் பண்ணை நுழைவாயிலில் உள்ள கேட்டுக்கு பின்னால் இருக்கும் குழியில் அந்த 5 பேரையும் உயிருடன் புதைத்துவிடலாம் என்றார். இதையடுத்து அவர்களின் கை, கால்களை கட்டி, வாயில் டேப் ஒட்டி குழியில் உயிருடன் புதைத்தோம். அப்போது அவர்களின் ஐ.டி. கார்டுகளையும் குழியில் போட்டுவிட்டோம். காலை தொழுகைக்கு நேரம் ஆனதால் நானும், என் நண்பரும் சென்றுவிட்டோம் என்றார்.

தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டன.. இனிமேல் எந்த ஒரு கட்சிக்கும் அழைப்பு கிடையாது- ஸ்டாலின்



லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டன.. இனிமேல் எந்த ஒரு கட்சிக்கும் அழைப்பு கிடையாது என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று பல்வேறு கட்சிகளில் இருந்து 4 ஆயிரத்து 806 பேர் விலகி,  தி.மு.க.வில் இணையும் விழா நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மற்றவர்கள் தி.மு.க மீது கொண்டிருந்த கண்ணோட்டம் மாறிவிட்டது. தி.மு.க.வின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்திருப்பதை திருச்சி மாநாடு உறுதி செய்துள்ளது. தி.மு.க. தற்போது 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலை நடத்தி முடித்துள்ளது. நேர்காணலின் போது கலந்துகொண்ட தி.மு.க.வினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக தெரிவித்த கருத்து, தி.மு.க. கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும். அதற்கு தி.மு.க தற்போது அமைத்துள்ள கூட்டணியே போதுமானதாகும் என்பதுதான். எனவே தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டது. இனிமேல் எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது.

சென்னையில், கையெழுத்து வளர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய டென்டுல்கர்


நேற்று முன் தினம், சென்னையில் ரெனால்ட்ஸ் நிறுவனத்தின் ‘ரைட்விஸ்’என்ற கையெழுத்து வளர்க்கும் திட்டத்தை சச்சின் டென்டுல்கர்  தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

நான் சிறு வயதில் வெளியூரில் தங்கியிருந்த காலங்களில் எனது பெற்றோருக்கு கடிதம் எழுதுவேன். எனது மனைவி அஞ்சலிக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறேன். அது மிகவும் சுவாரசியமான அனுபவம். எழுதுவதும் கிரிக்கெட் விளையாடுவதும் ஒரே மாதிரிதான். இரண்டுக்கும் முறையான பயிற்சி தேவை, சரியான நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டிலும் போதிய பயிற்சி இருந்தால்தான் தன்னம்பிக்கையுடன் செயலில் இறங்க முடியும். கணினி பயன்படுத்துவதை விட எழுதும் போது நிறைய தகவல்கள் ஆழ் மனதில் பதியும் என்றார்.

மேலும் அவர் பேசிய போது, தனது மனைவியின் கையெழுத்து மிகவும் அழகானது, பார்ப்போர் அனைவரும் அவரது கையெழுத்தை ரசிப்பர் என்று கூறினார். கிரிக்கெட் விளையாடும் போது, பந்தை அடிக்கும் திறன் தனக்கு இயற்கையாகவே வந்துவிட்டது என்றும், ஆனால் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது, தகவல் தொழில்நுட்பம் இந்தளவுக்கு வளராத காலத்தில், மனைவிக்கு தன் கையால், கடிதங்கள் எழுதுவது என்பது தான் என்று அவர் கூறினார். கிரிக்கெட் ஆட்டக்காரர்களில், அணில் கும்ப்ளேவிற்கு, கையெழுத்து அழகாக இருக்கும் என்று அவர் கூறினார்.

ஜெயலலிதாவை சந்தித்ததற்காக, பாமகவை விட்டு நீக்கப்பட்ட எம்.எல்.ஏ


பா.ம.க வை சேர்ந்த எம்.எல்.ஏ அணைக்கட்டு கலையரசுவை அக்கட்சியில் இருந்து நீக்கியதாக, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.கலையரசு, தொகுதியில் உள்ள கட்சியினருக்கு விரோதமாகவும், கட்சி வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வந்ததுடன், கட்சியின் கட்டுப்பாடடை மீறியும், கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதால், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பசுமை நாயகர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ம.கலையரசு நீக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Thursday, 27 February 2014

நாகர்கோவிலில் இரண்டாம் வகுப்பு மாணவி கற்பழிப்பு


நாகர்கோவிலை சேர்ந்த சிறுமி ஒருவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 22–ந் தேதி பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த லாலு(வயது 20) என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தகாத முறையில் நடந்தார். இதனால் சிறுமி அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் இருந்து தப்பிக்க போராடிய போது, வாலிபர் சிறுமியின் வாயை பொத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் தெரிய வந்ததும், சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட லாலு மீது 2012–ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி லாலுவை தேடி வருகின்றனர்.

நாட்டின் முதல் அஞ்சல் துறை ஏடிஎம் சென்னையில் திறப்பு


நாட்டிலேயே முதலாவது அஞ்சல் துறை ஏ.டி.எம் ஒன்றை சென்னையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். சென்னை தியாகாரய நகர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், இந்த ஏடிஎம்-ஐ திறந்து வைத்துப் பேசிய அவர் கூறியதாவது:

" இந்த புதிய முயற்சியில் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, இணையம் வழியான மைய வங்கி சேவையை அஞ்சல் துறை துவக்கியுள்ளது. இதன்மூலம் அஞ்சல் துறையில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் இதுபோன்ற ஏடிஎம் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

விரைவில் நாடு முழுவதும் 1,55,000 மையங்கள் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும். இந்த ஏடிஎம் சேவையைப் பயன்படுத்துவதற்கு வசதிகள் செய்யப்படும். நாடு முழுவதும் 2015ம் ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் அஞ்சல் துறை ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் பெறும் வசதிக்காக வங்கிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்." 

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 100 பேர் கைது


சத்தியமூர்த்தி பவனில் கல் வீசி தாக்குதல், ராஜீவ் சிலை உடைப்பு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, வளசர வாக்கம் சின்ன போரூர் பகுதியில் உள்ள 'நாம் தமிழர்' கட்சி தலைவர் சீமான் வீட்டை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள், அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ராஜீவ் சிலை உடைப்பை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சியினர், வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக கிடைக்கப் தகவலின் அடிப்படையில், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

சிமென்ட் சிலைகள் உடைக்கப்பட்டதால், வெண்கலத்தில் மறுபடியும் ராஜீவ் காந்திக்கு சிலை


வேப்பேரி போலீஸ் நிலையம் அருகில் மற்றும் புரசைவாக்கம், பட்டாளம் ஆகிய 3 இடங்களில் இருந்த ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலைகளை நேற்று இரவு மர்ம ஆசாமிகள் உடைத்துள்ளனர். உடைக்கப்பட்ட 3 இடங்களிலும் ராஜீவ் காந்தியின் வெண்கல சிலை அமைக்கப்படும் என்று வட சென்னை மாவட்ட காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ பேசிய போது, "ராஜீவ் சிலைகள் உடைக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். சிலைகளை உடைத்துவிட்டதால் உணர்வுகளை அழித்துவிட முடியாது. தற்போது உடைக்கப்பட்டது சிமெண்டு சிலைகள். இனி அதே இடத்தில் வட சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவின் வெண்கல உருவசிலை அமைக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி சிலை உடைப்பு: பெரம்பூரில் காங்கிரசார் மறியல்


பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் இரண்டு இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் உடைக்கப்பட்டன. இதுபற்றி அறிந்ததும்,  இன்று காலை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுமார் 500–க்கும் மேற்பட்டோர் அந்த இடம் அருகே திரண்டனர். சிலையை உடைந்தவர்களை கைது செய்யக்கோரி அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் சீமானை கைது செய்கக் கோரி கோஷமிட்டு சாலையில் அமர்ந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

எம்.ஜி.ஆர். சமாதி இரட்டை இலைச் சின்னத்தை துணியைப் போட்டு மூடக் கோரி திமுக வழக்கு


சென்னை கடற்கரையில் உள்ள‌ எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், அதிமுக அரசு அமைத்துள்ள இரட்டை இலை சின்னம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை திரையைப் போட்டு மூட உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில்,

இந்த இரட்டை இலை சின்னத்தை அகற்றக்கோரி ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் இந்த சின்னம் வாக்காளர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த சின்னத்தை திரையிட்டு மூடுவதற்கு தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். இதற்கான செலவினை அதிமுகவிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Wednesday, 26 February 2014

மோடியை தரக்குறைவாக விமர்சித்த சல்மான் குர்ஷித், கடும் கோபம் அடைந்த பா.ஜ.க


மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் செவ்வாய்க் கிழமை நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். "குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கலவரம் நடந்து கொண்டிருந்தது. யார், யாரோ அப்பாவி மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போது, மோடி அவற்றை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்? மோடியால் கலவரத்தை தடுக்க முடியவில்லை. கலவரத்தை தடுக்காத நரேந்திர மோடி செயல் திறனற்றவர் (impotent)" என்று அவர் கூறியது, பா.ஜ.க.வினரை கடும் கோபமடைய செய்துள்ளது.

"இத்தகைய விமர்சனத்தை நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருப்பவர் முன்வைத்துள்ளது வருந்தத்தக்கது மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டியதும் கூட. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். இத்தகைய தரக்குறைவான வார்த்தையை சல்மான் குர்ஷித் பயன்படுத்தியிருப்பதை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அனுமதிப்பாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

படியில் பயணம் செய்ததை தட்டிக்கேட்டதால், பேருந்து கண்ணாடியை உடைத்து அராஜகம் செய்த கல்லூரி மாணவர்கள், பேருந்திற்குள் இருந்த பயணி ஒருவரின் மேல் கல் பட்டு காயம்



சென்னை திருவொற்றியூரில் இருந்து அண்ணா சதுக்கத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் மாநகர பேருந்து 28எம் புறப்பட்டது.  பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர்கள் படிக் கட்டில் தொங்கிக் கொண்டும், பேருந்தின் பக்கவாட்டில் தட்டி ஓசை எழுப்பி பாட்டு பாடிக்கொண்டும் வந்தனர். அந்த மாணவர்களை உள்ளே ஏறும்படி நடத்துநர் கண்டித்து இருக்கிறார்.
ஆனால், மாணவர்கள் அவர் பேச்சை கேட்கவில்லை.

வண்ணாரப்பேட்டை பழைய தபால் நிலையம் அருகே பேருந்து வந்தபோது, போக்குவரத்து நெரிசலில் பேருந்து மெதுவாகச் சென்ற போது, படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்தவர்களை உள்ளே வரும்படி மீண்டும் நடத்துநர் கூறினார்.  ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சிலர் மெதுவாக சென்ற பேருந்தில் இருந்து கீழே குதித்து தரையில் கிடந்த ஒரு கல்லை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் எறிந்தனர். இதில் கண்ணாடி உடைந்து விழுந்தது. உடைந்த கண்ணாடி வழியாக பேருந்துக்குள் இருந்த பயணிகள் மீதும் மாணவர்கள் கற்களை எறிந்தனர்.

இதில் பேருந்துக்குள் இருந்த  செல்வி (32) என்பவரின் தலையில் கல் பட்டு ரத்தம் வடிந்தது. வலியில் அவர் துடித்ததை பார்த்து கல்லெறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சென்னையில் 'நமோ நடமாடும் மீன் கடை' திறப்பினால் வியாபாரம் கெடுவதாகக் கூறி பெண்கள் கடும் எதிர்ப்பு


பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயரில் ‘நமோ நடமாடும் மீன் கடை’ சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. இங்கு ஒரு கிலோ வஞ்சிரம் (உயிருடன்) மீன் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. கடைத் திறப்பு விழாவில், கலந்து கொண்டு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்  இல.கணேசன் மீன் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர், "நரேந்திரமோடி பிரதமரானதும் மீனவர்களுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படும். மற்ற கட்சியினர் வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். பாஜகவால் மட்டும்தான் செயல்படுத்த முடியும். நாங்கள் கடலை தெய்வமாகக் கருதுகிறோம். கடல் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், பாஜக ஆட்சிக்கு வந்தால், மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். " என்று அவர் கூறினார்.

 நமோ நடமாடும் மீன் கடையில் விற்பனை நடந்தபோது, பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்கள் திடீரென விழா நடைபெற்ற இடத்துக்கு வந்து, ‘எங்கள் வியாபாரத்தைக் கெடுக்காதீர்கள்’ என்று பலமாகக் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சமாதானப்படுத்தினார்.

கோயில் உண்டியல்களில் பணத்தைப் போடுவதைவிட, நியாயமாக வருமான வரி செலுத்துங்கள், அதிக பலன் கிடைக்கும்


வருமான வரித்துறை அலுவலகம் சார்பில், இரண்டு நாள் தேசிய கலை விழா, சென்னையில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நேர்மையாக வரி செலுத்துபவர் என்ற பாராட்டை வருமான வரித்துறையிடமிருந்து பெற்று வருபவர்கள் நடிகர்கள் ரஜினியும் கமலும் ஆவர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியபோது, "கடவுளுக்கு, உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன். சிலர், வரிகட்டும் போதும் மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர். அதற்கு முன் சில விஷயங்களை யோசிக்க வேண்டும். வரியினால், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்து பார்த்தால், வரியின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்துவோரின் பங்கும் தெரியும் வரும்,'' என்று தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் சொல்வது 'சபாஷ்' என நீங்கள் நினைத்தால், லைக் போடுங்கள்!

கேலி செய்து, கையைப் பிடித்து இழுத்தபோது செருப்பால் அடித்த உமாவை நாங்கள் பழி தீர்த்தோம், கொலையாளிகள் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம்

மேற்கு வங்கத்தை சேர்த்த கட்டிட தொழிலாளிகள், உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதாகி இருக்கின்றனர். கொலையாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் கடந்த ஒரு ஆண்டாக சிறுசேரி சிப்காட் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தினமும் ரூ.500 கூலி கிடைக்கும். தினமும் இரவு வேலை முடிந்ததும் மது அருந்துவோம். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாங்கள் போதையில் சிப்காட் வளாகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தோம். அப்போது நள்ளிரவு நேரம். உமா மகேஸ்வரி ரோட்டில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்த் போது, அவரை பார்த்ததும் நாங்கள் கிண்டல் செய்து, இந்தி சினிமா பாட்டை பாடி அவரது கையைப்பிடித்து இழுத்தோம். இதில் கோபம் அடைந்த உமா மகேஸ்வரி, எங்களை செருப்பால் அடித்தார். இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் பார்த்து கூட்டமாக கூடினார்கள். இதனால் நாங்கள் தப்பி ஓடிவிட்டோம். உமாமகேஸ்வரி, எங்களை தாக்கியது எங்களுக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. அவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று உறுதி எடுத்தோம். எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13-ந்தேதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார். போதை மயக்கத்தில் இருந்த நாங்கள், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளினோம். பின்னர் அவரது வாயை பொத்தி அலாக்காக குண்டுகட்டாக தூக்கினோம். அருகில் உள்ள புதர் மறைவுக்கு தூக்கிச் சென்றோம். அவர் கூச்சல்போட்டு கத்தி கலாட்டா செய்தார். இதனால் அவரது வாயை பொத்திக்கொண்டும், கை, கால்களை அமுக்கி பிடித்துக்கொண்டும் அவரை பலாத்காரம் செய்தோம். இதனால்,  உமா மகேஸ்வரி மயக்கமானார்.

அடுத்து அவரை அப்படியே விட்டுவிட்டு போவதா, அல்லது கொலை செய்வதா என்று யோசித்தபடி இருந்தோம். இதற்குள் உமா மகேஸ்வரி மயக்கம் தெளிந்து கூச்சல் போட்டார். எங்களது முகத்தில் எச்சில் துப்பினார். அவரை உயிரோடு விட்டால் எங்களை போலீசில் சிக்கவைத்துவிடுவார் என்று பயந்து, நாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது அடிவயிற்றில் குத்தினோம். அவரது உயிர் போகவில்லை. இதனால் கழுத்தை அறுத்தோம். பின்னர் உமா மகேஸ்வரியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு, தப்பிவிட்டோம்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த கொலையாளிகள், இவ்வாறு தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

உமா மகேஸ்வரி கொலை வழக்கில், கொலையாளிகள் பிடிப்பட்டனர்


டிசிஎஸ் நிறுவன பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில், கண்காணிப்பு கேமரா உதவியால், கொலையாளிகளை கைது செய்ததாக சி.பி.சி.ஐ,டி. ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நேற்று உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.

பிப்ரவரி 13ம் தேதி இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வருவதைப் பார்த்த கட்டிட தொழிலாளர்கள் 5 பேர், அவரை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் உமா மகேஸ்வரி சத்தம் போட்டும் உதவிக்கு யாரும் வர முடியவில்லை. கொலையாளிகள், உமா மகேஸ்வரியின் செல்போன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். கொலையாளிகளில் இருவர், கல்பாக்கம் அருகே ஒரு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு உமா மகேஸ்வரியின் கிரெடிட் கார்டை கொடுத்துள்ளனர். உமா மகேஸ்வரி தனது கிரெடிட் கார்டின் பின்பகுதியில் பின் நம்பரை எழுதி வைத்திருந்தது, அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

இந்தக் கார்டு எண்ணை ஏற்கெனவே கண்காணித்து வந்த சிபிசிஐடி போலீஸார், உடனடியாக கல்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்து, அந்தக் கடைக்கு அனுப்பினர். அவர்கள் சென்று 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர் உத்தம்(23), ராம் மண்டல்(23) என்பது தெரிந்தது. இவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களின் கூட்டாளிகள் 2 பேர் கொல்கத்தா தப்பிச் சென்றது தெரிந்தது. அவர்களைப் பிடிக்க 4 தனிப்படை போலீஸார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த முடியாது: ராஜபக்சே அரசு


இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது நடந்த ஏராளமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உலகறிந்தவை. அடுத்த மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இது தொடர்பாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஒரு தீர்மானம் கொண்டு வர உள்ளன. இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தலைவர் நவிபிள்ளை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களைப் பொருத்தமட்டில் இலங்கை அரசு தொடர்ந்து உண்மையை அம்பலத்துக்கு கொண்டு வரவும், நீதி வழங்கவும் தவறி வருகிறது. அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறுவது அல்லது பிற காரணங்களை சொல்வது இனியும் ஏற்கத்தக்கதல்ல என்று நம்புகிறோம். அடிப்படையில், அரசியல் தலைமையின் (அதிபர்) விருப்பம்தான் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையில், சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்படவேண்டும். உள்நாட்டில் நடத்தப்பட்ட விசாரணை தோல்வியுற்ற நிலையில், சர்வதேச விசாரணைதான் புலன்விசாரணையில் புதிய தகவல்களைக் கொண்டு வரும். உண்மையையும் அம்பலப்படுத்தும்.

இதற்கு பதில் அளித்து, ராஜபக்சே அரசு சார்பில், ஜெனீவாவில் அமைந்துள்ள இலங்கையின் நிரந்தர தூதரகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டதாவது:

நவி பிள்ளையின் அறிக்கை, முழு விவரமும் அறியாமல் முன்கூட்டியே புகார் கூறுவதும், அரசியல் ஆக்குவதும், ஒரு சார்பானதும் ஆகும். இலங்கை விவகாரத்தில் அவர் இதைத்தான் பின்பற்றி வருகிறார். எப்படி இருந்தாலும், இலங்கை தன் சுய நல்லிணக்க செயல்பாடுகளை தொடரும். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அந்த அறிக்கையின் முடிவையும், பரிந்துரையையும் இலங்கை அரசு முழுமையாக நிராகரிக்கிறது. அது ஒருதலைப்பட்சமானது. தேவையற்றது. இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் விவகாரத்தில் தலையிடுவதும் ஆகும். அந்த அறிக்கையில், போரினால் கற்ற படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் உள்நாட்டு நடவடிக்கைகள், செயல் திட்டங்கள் குறித்து போதுமான தகவல் இல்லை.

இவ்வாறு ராஜபக்சே அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது



Tuesday, 25 February 2014

இசையமைப்பாளர் ரஹ்மானை 'ஜீனீயஸ்' என்று புகழும் மத்திய அமைச்சர் கபில் சிபல்


மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் கபில் சிபல் அரசியல்வாதி மட்டும் அல்ல, ஒரு கவிஞரும் கூட‌. இவர் எழுதிய கவிதைகள் இப்போது பாடல்களாக வடிவம் பெற்றுள்ளன.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள ரானாக் என்ற ஆல்பத்தில் கபில் சிபலின் கவிதை வரிகள் இடம் பெற்றுள்ளன. இது பற்றி கபில் சிபல் கூறுகையில், "எனது கவிதைகளை இசையாக மாற்றுவதற்கு ரஹ்மானை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவரது தனிப்பட்ட பணி நேர்த்தி மற்றும் வேறுபட்ட மெல்லிசைகளை படைப்பதில் உள்ள அவரது விருப்பம் ஆகியவையே ஆகும். ரஹ்மான் ஒரு ஜீனியஸ். அவரது இசையில் எனது வார்த்தைகள் அதனுடைய ஆத்மாவை கண்டுள்ளன." என்றும், மேலும் ரஹ்மானை பற்றி பேசிய அவர்,  "ரஹ்மானின் படைப்புகள் புதிதாகவும் பாலிவுட் பாணியிலிருந்து மாறுபட்ட உணர்வையும் கொண்டவை. அவரது குரல் மற்றும் அதன் தன்மை ஆகியவை ஒழுங்கான வடிவத்தை கொண்டுள்ளது. " என்று இசைப்புயலை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் அமைச்சர்.

"உன் பொன்னு எவன் கூடனா ஓடி போயிருப்பா.. " என்று புகார் கொடுத்த உமா மகேஸ்வரி தந்தையிடம் கூறிய போலீஸார், என் மகளுக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் வர கூடாது என புலம்பும் தந்தை பாலசுப்ரமணியம்



சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் குடும்பத்தோடு வசித்தும் வரும் பாலசுப்ரமணியம் என்பவரின் மகள் உமா மகேஸ்வரி சென்னையில் தங்கி, சிறுசேரியில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சிப்காட் வளாகத்தில் இருக்கும் புதரின் உள்ளே அழுகிய  பிணமாகக் அவர் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பாலசுப்ரமணியம் கூறுகையில், என் மகளுக்கு ஏற்பட்டது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. எங்கள் மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது, போலீசார் உங்கள் மகள் காதல் விவகாரத்தில் எங்காவது ஓடியிருப்பார், பொறுமையாக இருங்கள் கண்டுபிடிக்கலாம் என்று மெத்தனமாக பதில் அளித்தனர். சிப்காட் வளாகத்தை சுற்றி நன்கு சோதனை செய்யுமாறு எனது உறவினர்கள் வலியுறுத்தினார்கள். அதன்பேரில் சோதனை நடத்தியபோது தான் என் மகள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உமாவை அருப்புக்கோட்டையில் இருக்கும் எனது உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுது இறுதிச் சடங்கையாவது அருப்புக்கோட்டையில் செய்யலாம் என்று தான் என் மகளின் உடலை அங்கு கொண்டு சென்று தகனம் செய்தோம். குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

டிசிஎஸ் பெண் ஊழியர் கொலையில் 4 வட மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் கைது




சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில்,  இன்று நான்கு பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மேற்கு வங்கம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட உமா மகேஸ்வரியின் செல்போனை பயன்படுத்தியபோது சிக்கியுள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி  அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சிறுசேரியில் முகாமிட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். அப்போது சிகரெட் துண்டுகள் ,மதுபாட்டில்கள் மற்றும் தலை முடிகளும் சிதறிக் கிடந்தன. இவற்றை சேகரித்து தடயவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். உமா மகேஸ்வரி தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நடந்து செல்லும் ஒரே ஒரு வீடியோ காட்சியை தவிர வேறு எந்த ஆரம்ப கட்ட தடயங்களும் போலீசிடம் சிக்கவில்லை.

காங்கிரஸ்-திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்ட ஜெயலலிதா


நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தமிழகத்திற்கு செய்த துரோகங்களை கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டு இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

கச்சத்தீவை மீட்பதற்காக ஜெயலலிதா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழகத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்தது

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் 2 லட்சம் கோடி ரூபாயை கொள்ளை அடித்தது

2007ல் வழங்கப்பட்ட காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடாமல் திட்டமிட்டே காலம் தாழ்த்தியது

ஜெயலலிதா மேற்கொண்ட பகீரத முயற்சிகளால் காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை 19.2.2013ல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்காமல் கர்நாடகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு இருப்பது

மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் வகுப்புவாரி வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற முயல்வது

மாநிலத்தின் நிதி ஆதாரங்களைக் குறைக்கும் வகையிலான பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்த முனைவது

தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கடைபிடித்து விலைவாசி உயர வழிவகுத்தது

விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகளை பலமுறை உயர்த்தியது

மாநிலத்தின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படும்போதெல்லாம் அதற்கு திமுக உறுதுணையாக இருந்தது

சமூக நீதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் மருத்துவப்படிப்பில் பொது நுழைவுத் தேர்வை நுழைக்க நடவடிக்கை எடுக்க முனைவது

தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்க மறுப்பது

ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் அதிக சேனல்களை கண்டு களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு DAS அனுமதி வழங்க மறுப்பது

தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வருவது

இலங்கை தமிழர்களை அழிப்பதற்காக இலங்கை நாட்டு ராணுவத்திற்கு பயிற்சியையும், ஆயுதங்களையும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியபோது திமுக அதை தட்டிக் கேட்காமல் மவுனம் சாதித்தது

இலங்கை இனப் போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அங்குள்ள இலங்கை தமிழர்களை கொத்து கொத்தாக இலங்கை ராணுவம் கொன்று குவிக்க உறுதுணையாக இருந்தது

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற மக்கள் விரோத மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் கொள்கைக்கு திமுக ஆதரவு அளித்தது

மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின் குறை மாநிலமாக மாற்றி தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தது

இத்தகைய துரோகங்களை தமிழக மக்களுக்கு திமுக-காங்கிரஸ் இழைத்திருப்பதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
 

பரமக்குடி கலவரத்தில் கணவனை இழந்த‌ மனைவியை வாழ்க்கைத் துணையாக்கிய ராஜேந்திரன்


‘‘ஆண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், ஒரு பெண் கண வனை இழந்தாலோ, பிரிந்து வாழ்ந்தாலோ இன்னொரு திருமணம் செய்துகொள்ள இந்த ஆணாதிக்க சமுதாயம் அவ்வளவு எளிதில் விடுவதில்லை. இந்த நிலையை மாற்றவேண்டும். கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் சிந்தனை." என்று கூறும் ராஜேந்திரன், இமானுவேல் சேகரன் பேரவையின் பரமக்குடி ஒன்றியச் செயலாளர் ஆவார். இவர் தன் சிந்தனைக்கு ஏற்றார்போல், கணவனை இழந்து நின்ற பெண்ணை மணம் முடித்துள்ளார்.

பரமக்குடியில் 2011ல் நடந்த இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் நடந்த கலவரத்தின்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரில் ஒருவர், ஜெயபால். அவர் இறந்தபோது, அவரின் மனைவி காயத்ரி நிறைமாத கர்ப்பிணி, அடுத்த 18-வது நாள் ஆண் குழந்தைக்கு தாயானார். இந்த நிலையில்தான் காயத்ரியை மறுமணம் செய்துகொள்ள முன்வந்திருக்கிறார், ராஜேந்திரன். அவர் விருப்பத்தை காயத்ரியிடம் எடுத்துச் சொல்லி சம்மதம் பெற்ற இமானுவேல் சேகரன் பேரவையினர் இருவருக்கும் கடந்த 16-ம் தேதி பரமக்குடியில் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது தோழர் ஜெயபால் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அந்த பாதிப்புதான் அவரது துணைவியாருக்கு மறுவாழ்வு கொடுக்கும்படி என்னை உந்தியது’’ என்கிறார் ராஜேந்திரன்.

சென்னை மக்களுக்கோர் நற்செய்தி: 65 இடங்களில் சில்லறை மெஷின்கள்


சென்னையில் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, கிண்டி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் 65 வங்கிகளில் சில்லறை மெஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை செலுத்தி 1, 2, 5 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம்.  சில்லறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாடு முழுவதும் ‘காயின் வெண்டிங் மெஷின்களை’ ரிசர்வ் வங்கி அமைத்து வருகிறது. சென்னையில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்பட அரசு மற்றும் தனியார் வங்கிகளில் சில்லறை மெஷின் வைக்கப்பட்டுள்ளன.

ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்கள் வெளியேற இந்த மெஷினில் 3 துவாரங்கள் இருக்கின்றன. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை உள்ளே செலுத்தினால் அந்த துவாரங்கள் வழியாக சில்லறைகளை பெற்றுக்கொள்ளலாம். இது பயனுள்ள வகையில் இருப்பதாக பொதுமக்கள் பலரும் கூறுகின்றனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media