சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது
குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற
போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது.
நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று
நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...
"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை.
அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும்
அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை
கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா
துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப்
பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை
சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே
பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில
கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.
அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
"குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை,
நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால்,
குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற
தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க
முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான்
குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச்
சொன்னேன்...' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள்
வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது.
புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது... படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க
தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை
புரிந்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.