BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 16 September 2014

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது

பெங்களூர் பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தரைகட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ அறிவியல் செயலாளர் கோட்டேஷ்வர ராவ், திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

‘‘செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இது தனது மொத்த பயண தூரத்தில் 98 சதவீதத்தை கடந்து உள்ளது. இந்த விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தை நெருங்கியுள்ளது. விண்கலம் செலுத்தப்பட்ட பின் 6 முறை அதன் உயரம் படிப்படியாக உயர்த்தப்பட்டது. விண்ணில் இதுவரை 3 முறை திருத்தம் செய்யப்பட்டு விண்கலம் சரியான பாதையில் செலுத்தப்பட்டு உள்ளது. மீண்டும் வருகிற 22-ந் தேதி கடைசியாக ஒரு சிறிய திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதைத்தொடர்ந்து இந்த விண்கலம் 24-ந் தேதி காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் நீள்சுற்றுவட்டப்பாதையை அடையும்.

செவ்வாய் கிரகத்தின் வான்வெளி கோளப்பாதையில் மங்கள்யான் விண்கலமானது செவ்வாய் கிரகத்துக்கு 515 கிலோ மீட்டர் அருகிலும், 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கும் வகையில் நிலை நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சுற்றிவந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். அந்த விண்கலத்தில் இருந்து ஆய்வு தகவல்கள் பெங்களூர், அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் பெறப்படும். எங்களின் இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால் செவ்வாய் கிரகத்திற்கு முதல் முயற்சியிலேயே விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். கடந்த காலங்களில் வேறு நாடுகளின் முதல் முயற்சி எதனால் தோல்வியில் முடிந்தது என்பதையும் நாங்கள் ஆய்வு செய்து பார்த்தோம்.

வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள விண்கலங்களால் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் விண்கலங்களுக்கு இடையே எந்த மோதலும் நடைபெற வாய்ப்பு இல்லை. செவ்வாய் கிரகத்தை விண்கலம் அடைந்ததும் அன்றைய தினமே புகைப்படம் எடுத்து அனுப்பும். அது எந்த அளவுக்கு தெளிவாக இருக்கும் என்று தெரியாது. அங்கிருந்து பூமிக்கு தகவல் வர 12½ நிமிடங்கள் ஆகும். விண்கலம் ஆரோக்கியமாக உள்ளது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த விண்கலம் 6 மாதம் வரை ஆய்வுகளை மேற்கொள்ளும்.’’ இவ்வாறு கோட்டேஷ்வர ராவ், மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் தெரிவித்தனர்.

திட்ட துணை இயக்குனர் பிச்சைமணி கூறுகையில், ‘‘மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கும்போது அதன் வேகம் குறைக்கப்படும். செவ்வாய் கிரகத்தை பின்நோக்கி செல்லுமாறு அதன் வேகம் குறைக்கப்படும். இதில் 5 ஆய்வு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. மீத்தேன், காற்று மண்டலம், வெப்பம், தாதுக்கள் போன்றவற்றை இந்த கண்டறியும் கருவிகள் உள்ளன. மேலும் ஒரு வண்ண கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த விண்கலம் மொத்தம் 685 மில்லியன் அதாவது 68½ கோடி கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைகிறது. பூமி சுற்றி வருவதால் விண்கலம் இலக்கை அடைந்ததும் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையேயான தூரம் 224 மில்லியன் கிலோ மீட்டராக குறைந்துவிடும்’’ என்றார். பேட்டியின்போது மங்கள்யான் திட்ட இயக்குனர் அருணன் மற்றும் விஞ்ஞானிகள் சங்கர் மாடசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மங்கள்யான் விண்கலத்தின் திட்ட மதிப்பீடு ரூ.450 கோடி ஆகும். இந்த விண்கலம் விண்வெளியில் இதுவரை 315 நாட்கள் பயணம் செய்துள்ளது. இன்னும் 9 நாட்களில் செவ்வாய் கிரகத்தின் கோளப்பாதையை வெற்றிகரமாக சென்று அடைய இருக்கிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media