BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 31 March 2014

சோனியா, ராகுலை துகில் உரித்து, இத்தாலிக்கு அனுப்ப வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ.

சோனியா, ராகுலுக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில்  பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டு, "பாரதீய ஜனதா கட்சி மத்தியில் நிச்சயம் ஆட்சியில் அமரும். அதன் பிறகு சோனியா, ராகுல் இருவரும் துகில் உரியப்பட வேண்டும். அவர்களை இத்தாலிக்கே திருப்பி அனுப்ப வேண்டும். " என்று கூறினார்.

ஹீராலால் ரேகரின் இந்த பேச்சு இன்று காலை இணையத் தளங்களில் வெளியானது. இது காங்கிரஸ் தொண்டர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து ஹீராலால் எம்.எல்.ஏ. , "நான் பேசியதை தவறாக சித்தரித்து விட்டனர். நான் தனிப்பட்ட முறையில் யார் பெயரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. என்னுடைய இந்த பேச்சால், யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். " என்று தெரிவித்து இருந்தார். இருந்தாலும், பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது தேர்தல் கமிஷனில் புகார் செய்ய காங்கிரசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் குடிநீர் இல்லை, மதுக்கடைகளை தான் அதிகமாக திறந்திருக்கிறார் ஜெ.- பிரேமலதா

விழுப்புரம் தே.மு.தி.க. வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மரக்காணத்தில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

விழுப்புரம் தே.மு.தி.க.வின் கோட்டை. இங்குதான் உளுந்தூர்பேட்டையில் லஞ்சம் ஒழிப்பு மாநாடு நடத்தி காட்டினோம். ஜெயலலிதா தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் மின்வெட்டு, தண்ணீர் இல்லை. டாஸ்மாக் கடைகள்தான் அதிகமாக திறந்துள்ளனார். டாஸ்மாக் கடையில் ரூ.24 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது.

ஜெயலலிதா 40 தொகுதிகளை வைத்துக்கொண்டு பிரதமராக வேண்டி ஓட்டு கேட்கிறார். ஆனால் 272 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் பிரதமராக முடிவும். ஆனால் ஜெயலலிதா தமிழ்நாட்டின் 40 தொகுதியை வைத்துக்கொண்டு நான்தான் பிரதமர் என்று பகல் கனவு காண்கிறார்.

நரேந்திரமோடி பிரதமரானால் தமிழ்நாட்டில் மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும். மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். நதிகள் இணைப்பு நடைபெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அனைவருக்கும் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்படும்.

கலைஞரை சுற்றி சூழ்ச்சி கும்பல் தான் உள்ளது. அந்த கும்பலின் நிர்பந்தத்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது-அழகிரி

நாமக்கல்லில் இன்று மு.க.அழகிரி, தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களை ச‌ந்தித்த பிறகு,  நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அழகிரி அளித்த பதில்களும் பின் வருமாறு:

கேள்வி: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்தால் அவர் உங்களுக்கு ஆதரவாக இருந்து இருப்பாரா?

பதில்: அவர் உயிரோடு இருந்தால் எனக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் ஆதரவாக இருப்பார். எனக்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

கே. ஏன் உங்களை கட்சியை விட்டு நீக்கினார்கள்.?

ப: தலைவர் கலைஞரை சுற்றி சூழ்ச்சி கும்பல் தான் உள்ளது. அந்த கும்பலின் நிர்பந்தத்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.

கே.பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா?

ப: தி.மு.க. 3-வது இடத்துக்கு போகும்.

கே:.அப்போது யார் தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள்?

ப: எனக்கு ஜோசியம் சொல்லத் தெரியாது.

கே. தனிக்கட்சி தொடங்குவீர்களா?

ப: தனிக்கட்சி தொடங்க மாட்டேன். தி.மு.கவில் தான் இருப்பேன். தலைவர் கலைஞர்தான் எனக்கு தலைவர். தி.மு.க. கரை போட்ட வேட்டி தான் கட்டுவேன்.

போலீஸார் மதிமுகவினரிடம் நடந்து கொண்ட விதத்தை எதிர்த்து வைகோ சாலை மறியல்

வைகோ இன்று அருப்புக்கோட்டைக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்ட போது, அவருடன் கட்சியினரும், தொடர் படையினரும் அடுத்தடுத்த வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

அவர்களது வாகனங்கள் பெரியவள்ளிகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், வைகோவுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அவரது கட்சியினரின் வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டப்போது, அக்கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தங்களை சப்-இன்ஸ்பெக்டர் ஒருமையில் பேசியதாகக் கூறி, மதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த வைகோ தனது வாகனத்தையும் சோதனையிடுமாறு போலீஸாரை கேட்டுள்ளார். அத்துடன், போலீஸாரின் நடந்து கொண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வைகோ சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

"வாகன சோதனை நடத்துவதை விட்டுவிட்டு, வாகனத்தை நிறுத்தி 'இறங்குங்கடா, யாருடா நீங்க?' என்றெல்லாம் ஒருமையில் பேசியது சரியல்ல. போலீஸார் நடந்துகொண்ட முறை பண்பாட்டுக் குறைவானது. இந்த போக்கை அனுமதிக்கக்கூடாது. நான் பிரச்சினை செய்யவேண்டும் என்பதற்காக சாலையில் உட்காரவில்லை. இது மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அமர்ந்திருக்கிறேன்" என்றார் வைகோ.

மேலும், "முதல்வர் ஜெயலலிதா செல்லும்போது 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது, அப்போது தேர்தல் அதிகாரிகள் எங்கே போனார்கள்?" என்று போலீஸாரிடம் அவர் கேள்வி எழுப்பினார். பின்பு அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உதயகுமார் வைகோவுடன் பேசியதைத் தொடர்ந்து, பிரச்சனை முடிவுக்கு வந்தது.

மோடிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்- சரத்பவார்



மகாராஷ்டிரா மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் விஜய் பாம்ப்ளேவை ஆதரித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, "மோடி அண்மைக்காலமாக அர்த்தமற்ற விஷயங்களை பேசி வருகிறார். அவருக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றார்.

மேலும், மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு பற்றியும் தியாகம் பற்றியும் என்ன தெரியும் என கேள்வி எழுப்பியதோடு காங்கிரஸ் கட்சியின் தியாகமே இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டது என்று சரத்பவார் கூறினார்.

குஜராத் கலவரம் குறித்து விமர்சித்த பவார், "2002 குஜராத் கலவரத்தின் போது சிறுபான்மையினரும், காங்கிரஸ் எம்.பி அசான் ஜாஃப்ரியும் படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரை என்றைக்குமே சந்தித்து மோடி ஆறுதல் கூறியதில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலன் மீதும் மோடிக்கு எந்த அக்கறையும் இல்லை. மோடி, இந்திய தேசத்திற்கு ஒரு ஆபத்து. " என்று பேசியிருந்தார்.

"கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை..." என்று அழகிரியை பார்த்து ஜோதிடம் கூறிய எஸ்.வி.சேகர்

மு.க.அழகிரியை நேற்று காலை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர்  சந்தித்தார். காலையில் அழகிரியின் வீட்டுக்கு சென்ற‌ அவர், அழகிரியுடனான சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் கூறியது:

மு.க.அழகிரி என் நண்பர். மதுரை வரும்போதெல்லாம் அவரை நான் சந்திப்பது வழக்கம். சிவகாசியில் இன்று எனது மோதி விளையாடு பாப்பா நாடகம் நடைபெறுகிறது. அதற்காக செல்லும் வழியில் அவரைச் சந்தித்து நட்புரீதியாகப் பேசினேன். அரசியலைத் தாண்டிய நட்பு இது. எனது, 3000-வது நாடகத்துக்கு ஜெயலலிதா வந்தார். 3500-வது நாடகத்துக்கு கலைஞரும், மூப்பனாரும் வந்தனர். 5001-வது நாடகத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார் என்றார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் எஸ்.வி.சேகர் கூறியதாவது:

அழகிரிக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்தீர்களா?

நான் ஆறுதல் கூறுவதற்காக வரவில்லை. அவர்களுக்குள் சமரசம் செய்து வைக்கவும் வரவில்லை. இது அரசியல் சந்திப்பும் கிடை யாது. ஏப். 14-ம் தேதிக்குப் பிறகு எல்லாம் தானாகவே சரியாகி விடும். நான் நிறைய பேருக்கு ஜோதிடம் சொல்லியிருக்கிறேன். கட்டம் சரியாக இருந்தால் யாரையும் கட்டம் கட்ட முடியாது. கட்டம் சரி யில்லை என்றால் யார் வேண்டுமானாலும் கட்டம் கட்டுவார்கள்.

அழகிரியை கட்சியில் இருந்து தானே நீக்கியிருக்கிறார்கள். கலை ஞரின் மகன், மு.க.ஸ்டாலின், கனி மொழியின் சகோதரர் என்ற உறவில் இருந்து அவரை நீக்க முடியாது. “பிளட் இஸ் திக்கர் தேன் வாட்டர்”.

நீங்கள் சார்ந்துள்ள பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?

‘மோடி பிரதமராக வரப்போ கிறார், ப.சிதம்பரம் நிதி அமைச்சர் பதவியை இழக்கப் போகிறார்’ என்றதும் சென்செக்ஸ் புள்ளிகள் ஏற ஆரம்பித்துவிட்டன. எனது நாடகத்தில் ஒரு காட்சி வரும். ‘தீவிரவாதத்தை ஒழிக்க என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்பார். ‘நிதி அமைச்சரை, உள்துறை அமைச்சராக்கப் போகி றோம்’ என்று பதில் சொல்வார் இன்னொருவர். ‘ஏன்?’ என்று அவர் கேட்க, ‘ஷேர் மார்க்கெட்டை அழித்து ஒழித்தவர் இவர். தீவிர வாதத்தை ஒழிக்க மாட்டாரா?’ என்று பதில் சொல்வார்கள். இது சிதம்பரத்துக்குப் பொருந்தும். மத்தியில் 300 தொகுதிகளுக்கு மேல் வென்று பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். தன் செயல் திறத்தால் தொடர்ந்து 3 முறை மோடியே பிரதமர் பதவியை வகிப்பார்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

1993 டெல்லி குண்டுவெடிப்பில் கைதான புல்லர் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் காலிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2003-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு புல்லர் கருணை மனுவை அனுப்பினார். அதை 8 ஆண்டுகளுக்கு பிறகு 20011-ம் ஆண்டு மே 14-ம் தேதி குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று புல்லரின் மனைவி நவ்நீத் கவுர் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வெளியாகும்வரை மரண தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடைசியாக கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி ஆஜரானார். “தேவேந்தர்பால் சிங் புல்லரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பதில் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.” என்று வாஹன்வதி தெரிவித்தார். வழக்கில் வரும் 31-ம் தேதி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி இன்று, தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆதாரம் இல்லாமல், பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது பொய் வழக்கு போட்டதற்கு கண்டனங்கள்- அன்புமணி ராமதாஸ்

சாதி உணர்வை தூண்டியதாக அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

தருமபுரி மக்களவைத் தொகுதியில் சாதி உணர்வைத் தூண்டும் வகையில் குறுந்தகடுகளை வினியோகம் செய்ததாகக் கூறி என் மீதும் பா.ம.க. நிர்வாகிகள் சரவணன், அரசாங்கம் ஆகியோர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்தப் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமபுரி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக என்னை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

அதைப் போலவே பரப்புரைக்காக நான் செல்லுமிடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து தங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி என்னை வரவேற்கிறார்கள்.

 தருமபுரி தொகுதியின் பொது வேட்பாளராக கருதி எனக்கு பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர். தருமபுரி முழுவதும் எனக்கு ஆதரவான அலை வீசுகிறது.

தருமபுரி தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும். அப்போது தான் அனைத்து துறைகளிலும் தருமபுரி முன்னேறும் என்பதைத் தான் நான் பிரச்சாரம் செய்வதற்காக செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறேன்.

மனித வாழ்நிலை மேம்பாட்டுக் குறியீட்டில் தற்போது 28 ஆவது இடத்தில் இருக்கும் தருமபுரி மாவட்டத்தை முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வருவேன் என்றும், மிகவும் பின்தங்கியுள்ள தருமபுரி மாவட்டத்தை அமைதியும், வளர்ச்சியும் நிறைந்ததாக மாற்றுவேன் என்றும் தேர்தல் பரப்புரையின் போது நான் அளிக்கும் வாக்குறுதிக்கு தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியினர், தோல்வி பயத்தில் காவல்துறையினரைத் தூண்டிவிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளனர்.

பா.ம.க. பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடுவதன் மூலம் எனது வெற்றியை தடுத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் ஆளுங்கட்சியினர், அதற்காகவே சாதி உணர்வை தூண்டுவதாகக் கூறி காவல்துறை மூலம் பொய் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

வாக்காளர்களிடையே வினியோகிக்கப்பட்டதாக கூறப்படும் குறுந்தகடு பற்றி எனக்கு எதுவும் தெரியாது; அந்த குறுந்தகட்டை நான் பார்த்ததும் இல்லை; அப்படி ஒரு குறுந்தகட்டை நான் கொடுக்கவும் இல்லை; கொடுக்கும்படி யாரிடமும் கூறவும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் நடக்காத ஒரு நிகழ்வுக்காக என் மீதும், பா.ம.க. நிர்வாகிகள் மீதும் வேண்டுமென்றே பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தருமபுரி தொகுதியில் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சாதி உணர்வை தூண்ட வேண்டிய தேவை எனக்கு இல்லை.

மாறாக, தோல்வி பயத்தால் துவண்டு கிடக்கும் ஆளுங்கட்சியினர் தான் பா.ம.க.வினர் மீது வழக்குத் தொடருவதன் மூலம் சாதி உணர்வைத் தூண்டி மலிவான அரசியல் லாபம் தேட முயற்சி செய்கின்றனர். ஆளுங்கட்சியின் இந்த முயற்சிக்கு அதிகாரிகளும் துணை போயிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தேர்தலுக்கு இன்னும் 25 நாட்கள் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சியினர் நினைத்தால் அவர்களே எங்களின் பெயரில் ஏதேனும் துண்டறிக்கைகளை வினியோகித்துவிட்டு, அதை நாங்கள் தான் செய்ததாகக் கூறி மீண்டும், மீண்டும் பொய் வழக்கு தொடரும் ஆபத்து உள்ளது.

எனவே, தேர்தல் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு, என் மீதும், பா.ம.க. நிர்வாகிகள் மீதும் தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறும்படி ஆணையிட வேண்டும்.

அதுமட்டுமின்றி, இது தொடர்பாக விசாரணை நடத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்"

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள பெரும்பாலான பெண்கள் மோசமாகவே நடந்து கொண்டுள்ளார்கள்-சல்மா

 
கவிஞர் சல்மாவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியப் பெண் எழுத்தாளருக்கான பெமினாவின் ’வுமன் ஆப் வொர்த் ’ என்ற விருது, சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல செய்தித்தாள் ஒன்றிற்கு, திமுக மகளிரணி பிரச்சாரக் குழுச் செயலாளரும், பிரபல பெண் கவிஞருமான சல்மா பேட்டியளித்து இருந்தார்.  

ஒரு பெண் பிரதமராக வந்தால் வரவேற்பீர்களா? என்ற கேள்விக்கு, "நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வருவது ஆணா, பெண்ணா? என்பது முக்கியமல்ல. நல்ல நிர்வாகம் தெரிந்தவராக இருக்க வேண்டும். பொதுவாக நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள பெரும்பாலான பெண்கள் மோசமாகவே நடந்து கொண்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு. இலங்கையின் சந்திரிகா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, தமிழகத்தின் ஜெயலலிதா என அனைவருமே மோசமாக நடந்து கொண்டதுதான் வரலாறாக உள்ளது. பெண் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதற்காகக் கெட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. " என்று பரப்பரப்பாக பேசியுள்ளார்.

மேலும், அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டது கட்சியை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும், அவருக்கு மக்கள் மத்தியிலோ, தொண்டர்கள் மத்தியிலோ செல்வாக்கு இல்லை என்பது தலைமைக்கு தெரிந்ததனால் தான் தயக்கமின்றி அவர் நீக்கப்பட்டிருக்கிறார், அழகிரியின் செல்வாக்கு என்னவென்று இந்தத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும் என்றும் சல்மா கூறியுள்ளார்.

தென் மாவட்டங்களில், நெருக்கடி காலத்தில் கட்சியை வளர்த்தவர் அழகிரி, அவரை புறக்கணிப்பது சரியா என்று கேட்டபோது, திமுகவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வகையிலும் பணியாற்றி, கட்சியை வளர்த்தவர் தளபதிதான் (ஸ்டாலின்). எனவே அவருக்குதான் செல்வாக்கு உள்ளது என்று பதிலளித்தார்.

Sunday, 30 March 2014

வான்வழிப் பயணம் ஏன்?- சிதம்பரத்தின் குற்றச்சாட்டிற்கு ஜெ. பதில்


மதுரை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் சிதம்பரம் தான் வான்வழியாகவே பயணிப்பதை குறித்து விமர்சனம் செய்ததற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

மேலும் அவர் பேசுகையில், ‘வான் வழியாகச் செல்பவர்களுக்கு மண்ணில் நடப்பது தெரிய வாய்ப்பில்லை என எண்ணை விமர்சனம் செய்திருக்கிறார் சிதம்பரம். அவருக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். 1982 முதல் நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். கடந்த 32 ஆண்டுகளாக தமிழகத்தில் எனது கால்படாத இடமே இல்லை என்னும் அளவுக்குப் பட்டி, தொட்டியெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். மாதக்கணக்கில் பிரச்சாரம் செய்திருக்கிறேன்.

சிதம்பரத்துக்கு வாக்குகேட்டு அவருக்காகக் கூடப் பிரச்சாரம் செய்திருக்கிறேன். நான் பிரச்சாரம் செய்யும்போது சிதம்பரம் திறந்த ஜீப்பில் பின்னால் வந்தார். தற்போது குறைந்த காலத்தில் அனைத்து தொகுதிக்கும் செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலும், சாலை வழியாகச் சென்றால் காவலர் பணிச்சுமை கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும்தான் வான்வழியாகச் சென்று கொண்டிருக்கிறேன்.

எனக்குள்ள அச்சுறுத்தல் குறித்து சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது 27.3.2009 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதில் என்ன குறிப்பிட்டார் என்பதையும் அதற்கு நான் என்ன பதில் எழுதினேன் என்பதையும் சிதம்பரம் படித்துப் பார்க்க வேண்டும். விரக்தியில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ .

இவ்வாறு ஜெயலலிதா பேசியிருந்தார். 

குடும்பத்துல யாருக்குமே விஜயகாந்த் எந்த உதவியும் செய்யல, வடிவேலு தான் நல்ல மனுஷன்-பால்ராஜ்



தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் வெள்ளிக்கிழமை மதுரையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவர் "விஜயகாந்த் தனது அண்ணன், தம்பிக்கே ஏதும் செய்யவில்லை, நாட்டுக்காக அவர் என்ன செய்து விட போகிறார்?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:

குடும்பத்துல யாருக்குமே விஜயகாந்த் எந்த உதவியும் செய்யல.. எங்களின் சகோதரர் ராமராஜ் மகனுக்கே ஆண்டாள் அழகர் கல்லூரியில் காசு வாங்கிட்டுதான் சேர்த்தாங்க.. எங்கள் சகோதரி மீனாகுமாரி மகனைப் படிக்க வைக்க உதவி கேட்டப்பவும் முடியாதுன்னுட்டாங்க. இப்பிடி யாருக்குமே அவரு எதையும் செய்யல.. இப்பிடி அண்ணன், தம்பிக்கே எதுவும் செய்யாதவரு நாட்டுக்கு என்னது செய்யப் போறாரு? மைத்துனனுக்காகவும், சகலைக்காகவும்தான் அவர் கட்சியே நடத்திக்கிட்டு இருக்காரு. அவரது சகலை (பிரேமலதாவின் சகோதரியின் கணவர்) ஆண்டாள் அழகர் கல்லூரி அறக்கட்டளை, புதுச்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரி ஆகியவற்றின் நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறார். இதில் எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் இடமில்லை.

ஆனா விஜயகாந்த் ஊருக்கே உதவி செய்றதா பேப்பர்ல வருது.. அது உண்மைன்னா அவரோட சொந்த தம்பி, தங்கைகள் குடும்பத்துக்கும் ஏதாவது செய்யலாமே? நாங்க அவருகிட்ட உதவி கேட்டு ஓஞ்சு போயிட்டோம். சாகப்போற காலத்துல இனி அவரே வந்து உதவி பண்ண நினைச்சாலும் அது எங்களுக்கு வேண்டாம். கண்ணதாசன் எப்பவோ எழுதுன பாட்டு.. ஆனா இன்னைக்கும் அதுதான் உண்மையா இருக்கு.. அதான் சார்.. ‘அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அவசரமான உலகத்துலே..’. இதுதான் இப்போ நான் அடிக்கடி கேட்குற பாட்டு’

இதே மதுரையில பொறந்து வளர்ந்த வடிவேல், விஜயகாந்தை விட எவ்வளவோ மேல்... ஏழையா இருந்த அவரு சினிமாவுக்கு போயி சம்பாதிச்ச பிறகு தன்னோட குடும்பத்தை நல்லா கவனிச்சுக்கிறாரு.. அதோட விடாம.. கஷ்டத்துல இருக்க தன்னோட சொந்தக்காரங்க எல்லாத்தையும் தேடித்தேடி போயி பலசரக்கு கடை, பெட்டிக்கடைன்னு ஏதாவது ஒண்ண வச்சுக் கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டியிருக்காரு.. அவர்தான் மனுஷன்...’’

இவ்வாறு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் பால்ராஜ்.

ரயில்களில் பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கை களுக்கு 3 ஆண்டு சிறை



எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களில் திருநங்கைகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. பயணிகளிடம் பணம் கேட்டு சிலர் தொல்லை செய்கின்றனர். காசு தராதவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

ர‌யில்களில் திருநங்கைகளின் பணம் பறிக்கும் செயலை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே போலீஸ் ஐ.ஜி. சீமா அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருத்தணி, கும்மிடிப்பூண்டி, தாம்பரம் புறநகர் ரயில்களிலும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகள் பாதுகாப்புக்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பயணிகளிடம் திருநங்கைகள் அச்சுறுத்தி பணம் பறித்தால் இந்திய தண்டனைச் சட்டம் 384-வது பிரிவின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதுவரை இந்திய தண்டனைச் சட்டம் 508-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யும்போது, நீதிமன்றம் வெறுமனே 500 ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கிறது. இனிமேல் சட்டப்பிரிவு 384 பயன்படுத்தப்படும்’’ என்றார்.

‘அச்சம் என்பது மடமையடா’ பாடலை ஜெ. இனிமேல் பாடக்கூடாது-ப.சிதம்பரம்



சிவகங்கை எம்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு தேமுதிக, அதிமுக கட்சியினர் அக்கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களை வரவேற்று, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதில் தரும் வகையில் ப.சிதம்பரம் பேசியது:

பாஜகவுக்கு காவடி தூக்க தமிழகத்தில் 3 கட்சிகள் உள்ளன. பாஜகவுக்கு காவடி தூக்கமாட்டேன் என்று காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள தேமுதிக இளைஞர்களை வரவேற்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா மதுரைக்கு வந்தபோது விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் 3 கி.மீ. தொலைவில் உள்ள மேடைக்கும் தனி குட்டி விமானத்தில் பயணம் செய்கிறார். தரையில் கால்பதிக்காமல் செல்லும் ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். அச்சுறுத்தல் இருப்பதால் விமானத்தில் வருகிறேன் என்கிறார். அவருக்கு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. அச்சுறுத்தலால் விமானம் அல்ல. நெஞ்சில் அச்சம் என்பதால்தான் விமானம். பிரதமருக்கு அச்சுறுத்தல் இல்லையா. சோனியா காந்திக்கு அச்சுறுத்தல் இல்லையா. நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது நக்சலைட் பகுதியில் பயணம் செய்தேனே, எனக்கு அச்சுறுத்தல் இல்லையா? யாருக்கு அச்சுறுத்தல் இல்லை. நெஞ்சில் அச்சமுள்ள ஜெயலலிதா, இனிமேல் அச்சம் என்பது மடமையடா என்ற பாடலை பாடக்கூடாது.

காங்கிரஸ் மீதும், என் மீதும் தொடர்ந்து தமிழக முதல்வர் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு வருகிற 3-ம் தேதி சிவகங்கையில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் விரிவான பதிலை அளிக்கவுள்ளேன் என்றார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

விஜயகாந்தை பற்றி சிதம்பரம் பேசியதாவது:

விஜயகாந்த் எனக்கு நண்பர்தான். விமானத்தில் வரும்போதும், போகும்போதும் விஜயகாந்த் எனக்கு பழக்கமானவர்.
நான் சினிமா பார்ப்பதில்லை. விஜயகாந்தும் நடிப்பதை நிறுத்தியுள்ளதாக சொல்கிறார். சென்னையில் பேசும்போது நான் ஊழல் செய்துள்ளதாக விஜயாகாந்த் பேசியுள்ளார். யாரோ பேசிய பேச்சு, விடிஞ்சா போச்சு என்பார்களே. அதுபோல் கருதி அவரை உங்கள் சார்பாக மன்னித்துவிடுகிறேன் என்றார்.

விடுதலைப் புலிகளுக்கு களங்கம் செய்யும் 'இனம்' படத்தை, தமிழகத்தில் திரையிடக் கூடாது-வைகோ


தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு களங்கம் செய்யும் 'இனம்' படத்தை, தமிழகத்தில் திரையிடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
'இனம்' (The Mob) எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். 'பயங்ரவாதி' என்ற பெயரில் அவர் முன்பு வெளியிட்ட திரைப்படம், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, கேவலமான முறையில் சித்தரித்தது.
இப்பொழுது அவர் இயக்கிய 'இனம்' எனும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் புகழேந்தி தங்கராசு என்னிடம் அதுகுறித்து விவரித்தபோது, தாங்கமுடியாத அதிர்ச்சிக்கு ஆளானேன்.
ஈழ விடுதலைப்போரையும், அங்கு ஈழத் தமிழர்கள் பட்ட அவலங்களையும் ஒரு பக்கத்தில் காட்டிக்கொண்டே வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல, சிங்களவனின் ஆலகால விஷத்தை படம் முழுக்க பரவ விட்டுள்ளார்.
சிறுவர்களும் இப்படம் பார்க்கலாம் என்ற 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படத்தில், சின்னஞ் சிறுவர்களும், சிறுமிகளும் கட்டாயமாக புலிப்படையில் சேர்க்கப்படுவதாகவும், தங்க வைக்கப்படும் இடங்களில் அவர்கள் அச்சிறு வயதிலேயே பாலியல் இச்சைக்கு ஆட்பட்டு, சேட்டைகள் செய்வதாகவும் எடுக்கப்பட்டுள்ள விதம் காம இச்சையைத் தூண்டும் வகையில் கீழ்த்தரமாக அமைந்துள்ளன. அச்சிறு வயதிலேயே அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் கட்டாயச் சூழ்நிலை இருந்ததாகவும் படம் கூறுகிறது.
பாடசாலை வகுப்பு நடக்கும்போது, கரும் பலகையில் உள்ள பாடத்திட்டத்தை அழித்துவிட்டு, விடுதலைப் புலிகளின் காணொளி திரைப்படம் காட்டப்பட்டதாக ஒரு அபாண்டமான பொய்யை காட்சியாக்குகிறார்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது, ஒரு இளந்தமிழ் பெண் சிங்களவர்களால் கற்பழிக்கப்பட்டதாக ஒரு காட்சியை அமைத்துவிட்டு, அதன் பிறகு கால்களின் மூட்டுகளுக்கு மேல் அந்த அபலைப் பெண்ணின் அங்கங்களை பெருமளவுக்கு காண்பித்துவிட்டு, அப்பெண் நீரால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதாக அமைத்துள்ள காட்சி வக்கிர புத்தி படைத்தவர்களுக்கு பாலியல் உணர்வைத் தூண்டும் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. குளத்துத் தண்ணீரில் அந்தப் பெண் நிற்கும்போது உடைக்கப்பட்ட ஒரு புத்தர் சிலையின் தலையும் முகமும் கரையில் தெரியும் வகையில் காட்டப்பட்டுள்ளது.
இனியொரு காட்சியில், ஓடையில் வரும் நீரை, குடிப்பதற்காக குவளையில் புத்த பிட்சு நிரப்புவதாகவும், குடுவையின் வாயில் துணியை வைத்துப் பிடிப்பதாகவும், குடுவையின் வாய்ப் புறத்துத் துணியில் சிக்கும் சிறிய மீன்களை மீண்டும் ஓடை நீரிலேயே உயிருடன் நீந்த விட்டுவிடுவதாகவும் காட்சி சித்தரிக்கிறது.
இதன் நோக்கம் என்ன? புத்த பிட்சுகள் மனிதாபிமானிகள் என்றும், தமிழர்கள் புத்தர் சிலையையே உடைப்பவர்கள் என்றும் தமிழ் இனத்தின் மீது களங்கம் சுமத்துவதுதான் நோக்கம் ஆகும்.
இலங்கையில் கடந்த 66 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கும், போடப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்து எறியப்பட்டதற்கும், ஐ.நா. சபை பிரதிநிதிகள் தாக்கப்பட்டதற்கும், இரத்த வெறிபிடித்த புத்த பிட்சுகளே காரணம் ஆவார்கள்.
2170 இந்து கோயில்களை சிங்களவர்கள் இடித்துத் தகர்க்க புத்து பிட்சுகளே ஏவினார்கள். கிறித்துவ தேவாலயங்கள் உடைக்கப்பட்டதற்கும், அண்மைக் காலமாக இசுலாமிய மசூதிகள் தாக்கப்படுதற்கும் முழுக்க முழுக்க புத்த பிட்சுகளே காரணம் ஆவார்கள்.
இத்திரைப்படத்தில் கதைக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு காட்சியை அமைத்து, நந்திக் கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து கிடந்ததாக படம் தெரிவிக்கிறது.
மொத்தத்தில் சிங்களக் கொலைகார அரசின் மறைமுகப் பின்னணியில், அந்த அரசின் கைக்கூலியாக கேரளத்து சந்தோஷ் சிவன் படத்தை இயக்கி உள்ளார்.
சமீப காலத்தில் வெளியான சில காணொளிகள் எப்படி எல்லாம் ஈழத் தமிழ் பெண்களும், இளைஞர்களும் கொடூரமாக வதைக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்ற உண்மையை நிருபிக்கின்றன. அதிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கோர காட்சிகளை கண்களால் காண முடியாது. அந்த சம்பவம் பற்றி நாவால் கூற முடியாது. காதுகளால் கேட்க முடியாது.
நெஞ்சு கொதிக்கிறது. தன்மானத் தமிழ் இரத்தம் துடிக்கிறது. மலையாளிகளைக் கொச்சைப்படுத்தி, இதுபோன்ற திரைப்படத்தைத் தயாரித்து கேரளத்தில் வெளியிட யாராவது முனைவார்களா?
தமிழர்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா? சொரணையற்ற ஜென்மங்களா?
இளம் தமிழர்களே, மாணவர்களே சிந்தியுங்கள். இந்தத் திரைப்படம் தமிழகத்துத் திரையரங்கங்களில் ஓடுவது தமிழர்களின் முகத்தில் காரி உமிழப்படும் அவமானம் என்பதை உணர வேண்டுகிறேன்.
உன்னதமான திரைக் காவியங்களை நான் பெரிதும் மதிப்பவன். ஏன், மலையாள மொழியில் வெளியான தகழி சிவசங்கரன் பிள்ளையின் 'செம்மீன், வடக்கன் வீரகதா 1921, நாயர் ஷாப், துலாபாரம், பழசிராஜா' போன்ற படங்கள், சிறந்த கலைஞர்களான மம்முட்டி, மோகன்லால் நடித்த திரைப்படங்கள் போன்றவற்றின் பரம இரசிகன் ஆவேன் நான். மனித குலத்துக்கு நல்வழிகாட்டும் திரைப்படங்களை பெரிதாக மதிப்பவன் நான்.
ஆனால், திரைக்கலை என்ற பெயரால் தமிழ் இனத்தின் நெற்றியில் மிதிக்க முற்படுவதும், களங்கச் சேற்றைப் பூச முனைவதும் ஈனத்தனமான வேலையாகும். அதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், தமிழ்க் குலத்தை இழிவுபடுத்த முனையும் 'இனம்' எனும் திரைப்படத்தை திரையிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.
இதனிடையே, திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு 'இனம்' திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்து வைகோ கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழகத்தை தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் குடிநீரை விற்ற வரலாறு கிடையாது-ஸ்டாலின்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ம.செந்தில்நாதனை ஆதரித்து நேற்று ஸ்டாலின் பேசியதாவது:

திருப்பூரை மாவட்டமாக்கியது திமுக. மூன்று ஆண்டுகள் ஆகியும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படவில்லை. கோவை, திருப்பூரில் ரூ.800 கோடி அளவிற்கு காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், வெளி மாநிலத்தில் அதிக விலைகொடுத்து தனியார் மின்சாரத்தை வாங்க ஜெயலலிதா முயற்சிக்கிறார். மின் பிரச்சினையில், பிரச்சினை தீர்க்கப்படும்...பற்றாக்குறை போக்கப்படும் என இன்னமும் பழைய பல்லவிதான் பாடிக்கொண்டிருக்கிறார்.

திமுக ஆட்சியில் மின்வெட்டு 2 மணிநேரம். ஜெயலலிதா ஆட்சியில் 24 மணிநேரமும் மின்வெட்டு இருக்கிறது.

ஜெயலலிதாவைப்போல் வாய்க்கு வந்ததைப் பேசவில்லை. தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடக்கவில்லை, காணொளிக்காட்சிதான் நடக்கிறது.

சேதுசமுத்திரத் திட்டத்தால் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பல நன்மைகள் கிடைத்திருக்கும். திமுகவின் சாதனைகளை பட்டியல் போடலாம். ஆனால், அந்த தகுதி அதிமுகவுக்கு உண்டா? தமிழகத்தை தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் குடிநீரை விற்ற வரலாறு கிடையாது.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மோடியை கொன்று விடுவேன் எனக் கூறிய வேட்பாளரை கண்டித்த ராகுல்


உத்தரப் பிரதேசத்தில் நேற்று பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சஹரான்பூரிலும் பேசுவதாக இருந்தது. மோடியை கொன்று விடுவேன் என கூறிய அத்தொகுதி  வேட்பாளர் இம்ரான் மசூத் விவகாரத்தால் அவர் சஹரான்பூர் கூட்டத்தைப் புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் திட்டமிட்ட படி சஹரான்பூர் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். பொதுக்கூட்ட மேடையில் இம்ரான் மசூத்தின் மனைவி ஷைமா அமர்ந்திருந்தார்.

முன்னதாக காஜியாபாத் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

மசூத் இவ்வளவு கடினமான வார்த்தைகளால் பேசியிருக்கக்கூடாது. அவரது பேச்சு காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சியில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளனர். நாங்கள் எப்போதும் கோபம் கொள்வது கிடையாது. எங்களது பணிகளை அமைதி, அன்புடன் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

சஹரான்பூர் பொதுக்கூட்டத்திலும் ராகுல் காந்தி இதே கருத்தைத் தெரிவித் தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் போன்று காங்கிரஸ் தலைவர்கள் ஆத்திரப்பட்டு பேசுவது கிடையாது என்று அவர் கூறினார்.
மோடிக்கு எதிரான மோசமான விமர்சனத்தால் சஹரான்பூர் தொகுதி வேட்பாளர் இம்ரான் மசூத் மாற்றப்பட்டு புதிய வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Saturday, 29 March 2014

இலங்கைத் தமிழர்களுக்காக சிறையில் இருந்தீர்களா, முதல்வர் என்றால் உளறுவதா?- ஜெ.விடம் கருணாநிதி கேள்வி




இன்று கேள்வி - பதில் வடிவில் வெளியிடப்பட்ட‌ கருணாநிதியின் அறிக்கை:

"இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக்கூட தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்ற கருணாநிதிக்கு துணிவில்லை, இந்தப் பயத்துக்கு காரணம் தன்னலம்" என்று திண்டுக்கல்லில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

முதலமைச்சர் என்றால் எதை வேண்டுமானாலும் உளறலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார் போலும். இலங்கைத் தமிழர்களுக்கு அண்ணா உயிரோடு இருந்தபோதே, 29-1-1956 அன்று சிதம்பரம் நகரில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான். அப்போது ஜெயலலிதா குழந்தையாகத்தான் இருந்திருப்பார்.

இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக்கூட சட்டப்பேரவையில் நான் நிறைவேற்றவில்லை என்று ஜெயலலிதா கூறுகிறார் அல்லவா?

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 24-8-1977 அன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தி, 5 லட்சம் பேர் கலந்துகொண்ட பேரணியே நடத்தினோம். 27-7-1983 அன்று சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடத்தினோம். 21-8-1981 அன்று ஈழத் தமிழர்கள் பிரச்சினை பற்றி எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பேரவையில் விரிவாகப் பேசியிருக்கிறேன். 25-8-1981 அன்று தமிழ் இளைஞர் தனபதி இலங்கையில் கொல்லப்பட்டது பற்றி பேசியிருக்கிறேன். 27-8-1981, 13-9-1981, 4-8-1982, 15-7-1983, 13-8-1983, 5-5-1986, 19-10-2008 ஆகிய நாள்களிலும் மேலும் பல நாள்களிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி "முரசொலி"யில் அவ்வப் போது ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து எழுதியிருக்கிறேன்.

10-8-1983இல் நானும், க.அன்பழகனும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறோம். 13-6-1985 அன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக "டெசோ" என்ற அமைப்பினை உருவாக்கினோம். அந்த அமைப்பின் சார்பில் 4-5-1986 அன்று மதுரை யிலும், 12-8-2012 அன்று சென்னையிலும் மிகப் பெரிய மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். 3-6-1986 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினைக் காக என்னுடைய பிறந்த நாளை ரத்து செய்த போதிலும், அன்று உண்டியல் மூலம் வசூலான தொகையை தமிழ்ப் போராளி இயக்கங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கிறேன்.

15-10-1987 அன்று ஐந்து இலட்சம் மக்கள் கலந்துகொண்ட பேரணியை நடத்தினோம். 6-11-1987 அன்றும், 24-10-2008 அன்றும், சென்னையில் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தியிருக்கிறோம். 21-2-2009 அன்று தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் இளைஞர் சங்கிலி நடத்தினோம்.

15-3-1989 அன்று டெல்லியில் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை இரண்டு முறை சந்தித்து, ஈழத் தமிழர் பிரச்சினைக்காக விவாதித்திருக்கிறேன். அதே 1989ஆம் ஆண்டு சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழக விருந்தினர் மாளிகையில் போராளிகள் அனைவரையும் அழைத்துப் பேசி, விவரங்களை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.

30-3-1990 அன்று சட்டப்பேரவையில் இந்திய அமைதிப்படை தமிழகம் திரும்பியபோது முதலமைச்சர் என்ற முறையில் ஏன் வரவேற்கவில்லை என்று கேட்டபோது, இந்திய ராணுவம் இலங்கையிலே எப்படி நடந்து கொண்டது என்பதைப் பற்றி 1988ஆம் ஆண்டு பிரபாகரன் எழுதிய கடிதத்தையே அவையிலே படித்துக் காட்டி, இந்திய ராணுவத்தின் மீது கழகத்திற்கு சகலவிதமான மரியாதையும் உண்டு, ஆனால் இலங்கையிலே அந்த ராணுவம் இலங்கைத் தமிழர்களையே தாக்கி நசுக்கிட முயற்சித்தது என்பதால்தான் வரவேற்கச் செல்ல வில்லை என்றும், ராணுவம் மதிக்கத்தக்கது, மரியாதைக்குரியது, ஆனால் தவறு செய்யும்போது ராணுவத்தை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை என்று பதில் அளித்திருக்கிறேன்.

சென்னையில் 14-10-2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியிருக்கிறேன். 24-4-2009 அன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. 4-12-2008 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தோம். நான் முதலமைச்சராக இருந்த போது, இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக 50 கோடி ரூபாய்க்கு மேல் நிதி சேர்த்து மத்திய அரசின் உதவியோடு இலங்கைத் தமிழர்களுக்கு உதவினோம்.

இவ்வாறெல்லாம் ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து போராடி வந்ததோடு, ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது 23-8-1990 அன்று சட்டப் பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறேன். அதைக் காரணமாகக் காட்டித்தான் 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கழக ஆட்சி இரண்டாவது முறையாகக் கலைக்கப்பட்டது.

தமிழகச் சட்டப்பேரவையில் 23-4-2008 அன்று இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு தீர்மானத்தை நான் முன்மொழிந்து நிறைவேற்றிடச் செய்தேன். 12-11-2008 அன்று பேரவையில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினோம். முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினீர்களா என்று கேட்ட கேள்விக்கு இதுதான் என்னுடைய பதில்.

என்னைக் கேள்வி கேட்ட முதலமைச்சரிடம் நான் ஒரு கேள்வியைத் திருப்பிக் கேட்கிறேன். 15-9-1981 அன்று என்னுடைய தலைமையில் இலங்கைத் தமிழர்களுக்காக மறியல் நடைபெற்று கைது செய்யப்பட்டிருக்கிறேன். 16-5-1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியலில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டிருக்கிறேன். நான் சிறையில் அடைபட்டதற்காக தமிழகத்தில் ஏழெட்டு பேர் தீக்குளித்தும், தற்கொலை செய்து கொண்டும் இறந்தார்கள்.

என்னைக் கேள்வி கேட்ட ஜெயலலிதா, நீங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக எத்தனை முறை கைது செய்யப்பட்டு சிறையிலே இருந்தீர்கள்? இலங்கைத் தமிழர்களுக்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட இழப்பு என்ன? ஆட்சியை இழந்தீர்களா? அல்லது குறைந்தபட்சம் உங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையாவது ராஜினாமா செய்திருக்கிறீர்களா?

இப்போது சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி வானளாவப் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறீர்களே, நீங்கள் 16-4-2002 அன்று இதே சட்டப் பேரவையிலே இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று எகிறிக் குதித்தீர்களே; இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இந்திய ராணுவம் எண்ணவில்லை, போர் என்றால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப் படுவது சகஜம்தான் என்று ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரையே கேலி செய்து 17-1-2009 அன்று, அறிக்கை விடுத்தீர்களே, அதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களும் உலகத் தமிழர்களும் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு தற்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாய்மாலம் செய்கிறீர்களா?

மின் பிரச்சினையில் குற்றச்சாட்டு

மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, "யாரும் கவலைப்பட வேண்டாம், மின்வெட்டே இல்லாத மாநிலமாக விரைவில் தமிழகம் திகழும்" என்று சொல்லியிருக்கிறாரே?

கடந்த மூன்றாண்டு காலமாக, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். விரிவாகச் சொல்ல வேண்டுமேயானால், அ.தி.மு.க.வின் சட்ட மன்றத் தேர்தல் அறிக்கையிலேயே, தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றால் நான்கு மாதங்களில் மின் வெட்டு இல்லாமல் செய்வோம் என்று அறிவித்தார்கள்.

ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, 2011ஆம் ஆண்டு ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா "தற்போதுள்ள 3 மணி நேர மின்வெட்டினை 2 மணி நேரமாகக் குறைப்போம். ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும்" என்றார்.

அ.தி.மு.க. ஆட்சியில் 4-8-2011 அன்று பேரவையில் வைத்த நிதிநிலை அறிக்கையில், "மின்சக்தியின் உற்பத்திக்கேற்ப மின்வெட்டு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, 2012 ஆகஸ்டு மாதத் திற்குள் மாநிலம் முழுவதும் முற்றிலுமாக நீக்கப்படும்" என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு, 2012ஆம் ஆண்டு, ஆளுநர் உரை மீதான விவாதத் திற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, "ஜூன் மாதம் முதல் மின் பற்றாக்குறை படிப்படி யாகக் குறையும். அடுத்த ஆண்டு மத்தியில், மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்படும்" என்றார்.

28-3-2012 அன்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில், "படிப்படியாக மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என்று அறிவித்தார், ஜூன் மாதத்திலிருந்து படிப்படியாக குறைக்கப்படுமென்று தான் அறிவித்திருக்கிறோம். இப்போது மார்ச் மாதத்தில் தான் இருக்கிறோம். இன்னும் 3 மாத காலம் பொறுத்திருங்கள்" என்று கூறினார்.

மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் அளித்த பேட்டியில் "இந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையில் மட்டும் தான் தமிழகம் மின்பற்றாக்குறையை அனுபவிக்கும். இந்த மூன்று மாதங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால், தமிழகத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது" என்றார்.

25-10-2013 அன்று "இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும்" என்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் அறிவித்தார். 3-2-2014 அன்று 2014ஆம் ஆண்டுக்கான ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, "பல தடைகளைத் தகர்த்தெறிந்து கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் அரசு எடுத்த பகீரத முயற்சிகளின் காரணமாக இருளில் மூழ்கி யிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கி யுள்ளது. நான் ஏற்கனவே உறுதி அளித்தபடி மின்வெட்டே இல்லை என்ற நிலைமையை தமிழகம் விரைவில் எட்டிவிடும்" என்றார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அடிக்கடி வாய்தா வாங்கி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு முயற்சி செய்துவருவதைப் போல எண்ணிக் கொண்டு, இந்த மின்வெட்டு பிரச்சினையிலும் இந்த ஆட்சியினர் தொடர்ந்து மூன்றாண்டு காலமாக கவலை வேண்டாம்,

மின்வெட்டே இல்லாத மாநிலமாக விரைவில் தமிழகம் ஆகும், மின்மிகை மாநிலமாக மாறும் என்றெல்லாம் குழந்தைக்கு நிலாவைப் பிடித்துத் தருவதாக கதை சொல்வதைப் போல கற்பனையான வாக்குறுதி களைக் கொடுத்து, தமிழ் மக்களை ஏமாற்றியே ஆட்சிக் காலத்தைக் கடத்திவிடலாம் என்று எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் திறமை சாலிகள், இவருடைய பொய்க்கும் பித்தலாட்டத் திற்கும் இனியும் ஏமாற மாட்டார்கள்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

மௌன குரு பேசினார்; பிரிவினை அரசியல் செய்கிறது பாஜக: மன்மோகன்


அசாம் மாநிலத்தில் சிப்சாகர் மாவட்டம் கும்டாயில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் பிஜோய் கிருஷ்ண ஹேண்டிக்கை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

அப்போது, “பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் மொழிகள் கொண்டது இந்தியா. நாட்டைப் பிரிக்கும் அரசியல் நடத்தும் பா.ஜனதா கட்சியால் நாட்டுக்கு வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஒரு நபரை அடிப்படையாக வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கான எந்த குறிப்பிட்ட கொள்கைகளும் அவர்களிடம் இல்லை என்று கூறிய பிரதமர், பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டு முடித்தார்.

இந்திய நாட்டின் பாரத பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவிற்கு மட்டுமே உண்டு-மதுரை ஆதீனம்

 
சிவகாசியில் அ.தி.மு.க. சார்பாக மாபெறும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக ப‌ங்கேற்ற மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்த நாடு பல்வேறு துறைகளில் சீரழிந்து போய்விட்டது. பொருளாதார துறையில் மட்டும் அல்ல பயங்கரவாதத்திலும் இந்த நாடு சீரழிந்து சின்னாபின்னமாகி விட்டது. தமிழகத்தில் கல்வித்துறை, விளையாட்டுத்துறை உட்பட பல்வேறு துறைகளில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.

நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜீ, மாயாவதி, தேவகவுடா உட்பட அனைத்து தேசிய தலைவர்களும் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் பாரத பிரதமராக வரவேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்திய நாட்டின் பாரத பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவிற்கு மட்டுமே உண்டு. வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவைக்கும் கடமை, பொறுப்பு, ஒவ்வொறு தமிழனுக்கும், தமிழச்சிக்கும் இருக்கின்றது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இவ்வாறு மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.

ஜெயலலிதாவுடன் கூட்டணியை புதுப்பிக்க விரும்புகிறோம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


கவ்ஹாத்தியில் இன்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. தவிர்த்து அமையும் எந்தவொரு மதச்சார்பற்ற அரசுக்கும் இடதுசாரிகள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை ஆதரிக்காத ஜெயலலிதா, நிதிஷ் குமார் அல்லது நவீன் பட்நாயக் இவர்களில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்க எங்களது கட்சி தயாராக உள்ளது. இருப்பினும் இந்த இரு கட்சிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கொண்டிருக்கும் பட்சத்தில் அவருடனான கூட்டணியை புதுப்பிக்க நாங்கள் விரும்புகிறோம். 

கடந்த 2009ல் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போதைய நிலையில் கேரளாவில் எங்களது கட்சி நன்கு வலுப்பெற்றுள்ளது. திரிபுரா, மேற்கு வங்காளத்திலும் நாங்கள் நல்ல நிலையில் உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மக்களுக்கு இனவாத விஷம் தேவையில்லை, வாய்ப்புகளே தேவை-நரேந்திர மோடி


ஹ‌ரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் கோஹனா பகுதியில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “நாட்டு மக்கள் காங்கிரசின் வாக்குறுதிகளால் வெறுத்துவிட்டனர். நான் திட்டங்களை நிறைவேற்றும் நோக்குடன் வந்திருக்கிறேன். காங்கிரஸ் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. ஆனால், முன்னேற்றம்தான் மக்களுக்குத் தேவை, பிரிவினை தேவையில்லை. மக்களுக்கு திறமைகள், வேலைவாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு தேவை. அவர்களுக்கு சூழ்ச்சிகள், அரசியல், இனவாத விஷம் தேவையில்லை. மக்களுக்கு வாய்ப்புகள் தேவை. சந்தர்ப்பவாதம் தேவையில்லை” என்று கூறினார். 

திமுக வேட்பாளரை தோற்கடியுங்கள்: ஆதரவாளர்களுக்கு அழகிரி

தனது ஆதரவாளரின் உறவினர் ஒருவர் இறந்ததை ஒட்டி ஆறுதல் சொல்வதற்காக உசிலம்பட்டி சென்றிருந்த மு.க.அழகிரி,  அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போது, தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்தை தோற்கடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸார் மனம் வருந்தி வருவார்களேயானால், அவர்களை திமுக ஆதரிக்கும் என்று சென்னையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கருணாநிதி கூறியிருந்தார். இது குறித்து அழகிரி கூறுகையில், தான் ஒரு போதும் காங்கிரஸ் கூட்டணிக்கோ இல்லை வேறு எந்த ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்கவோ முற்பட்டதில்லை என்று கூறினார்.

மோடியை கொன்று விடுவேன் எனக் கூறிய வேட்பாளர் கைது



"உத்தரப் பிரதேசத்தை குஜராத் போல் மோடி மாற்ற முயன்றால் நாங்கள் அவரை துண்டு துண்டாக்குவோம். இதற்காக நான் தாக்கப்படுவேன் என்றோ கொல்லப்படுவேன் என்றோ பயப்பட மாட்டேன். மோடிக்கு எதிராக நான் போரிடுவேன். உ.பி.யை அவர் குஜராத் என நினைக்கிறார். குஜராத்தில் 4 சதவீதம் பேரே முஸ்லிம்கள். ஆனால் உ.பி.யில் 42 சதவீதம் பேர் முஸ்லிம்கள்" என்று உத்தர பிரதேச சஹரன்பூர் தொகுதி வேட்பாளர் இம்ரான் மசூத் பேசியிருந்தார்.

"நான் மிகுந்த எச்சரிக்கையுடன் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வேண்டும். தேர்தல் பிரச்சார அனலில் அவ்வாறு பேசிவிட்டேன்” என்று மசூத் கூறி தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

சஹரான்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடிக்கு எதிராக மசூத் இவ்வாறு பேசும் வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து மசூத் மீது சஹரான்பூர் மாவட்டம், தேவ்பாத் காவல் நிலைத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மசூத் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிந்தது. இந்நிலையில் அவர் இன்று காலை சஹரான்பூரில் கைது செய்யப்பட்டார்.

Friday, 28 March 2014

மோடியை புகழ்ந்தும், ராகுல் காந்திக்கு வறுமை என்றாலே என்ன என தெரியாது எனக் கூறும் காங்கிரஸ் தலைவர்


ராஜஸ்தான் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ராமநாராயண மீனா இன்று நரேந்திர மோடியையும், ராகுல் காந்தியையும் பற்றி பேசியதாவது:

பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி அவரது திறமைகளால் அடிமட்டத்தில் இருந்து மிகவும் உயர்வான இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருக்கு வறுமையின் வேதனை தெரியும்.

மேலும் பா.ஜ.க. நரேந்திர மோடியை மட்டுமே மையப்படுத்தி தேர்தலை சந்திக்கிறது. அவரது இடது பாக்கெட்டுக்குள் அம்பானி மற்றும் அடானி ஆகியோர் உள்ளனர். வலது பாக்கெட்டில் பா.ஜனதா உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அவருக்குப் பின்னால் நிற்கிறது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வறுமையைப் பற்றி தெரியாது. வறுமையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு அவருக்கு சிறந்த குழு தேவை. மைனாரிட்டி பிரிவினர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சென்று கொண்டிருக்கின்றனர். இந்த விஷயம் கட்சிக்கு பெரும் கவலையை அளிக்கிறது.

இவ்வாறு ராமநாராயண மீனா பேசியிருந்தார்.

மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரி - ப.சிதம்பரம் சந்திப்பு


திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, நேற்று தனது தங்கை கனிமொழியை,  அவரது சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து இருந்தார். அந்த‌ 40 நிமிட சந்திப்பின் போது, தாங்கள் இருவரும் பேசியதை, கனிமொழி அவரது தந்தை கருணாநிதியிடம் பிறகு தெரிவித்தார்.

இன்று மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரியும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சந்தித்துக் கொண்டனர். சென்னையில் இருந்து மதுரை சென்ற விமானத்தில் அழகிரியும் - சிதம்பரமும் ஒன்றாகவும் பயணித்தனர். மதுரை விமான நிலையம் வந்தடைந்தவுடன், விமான நிலையத்தின் வரவேற்பு அறையில் இருவரும் சிறிது நேரம் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 9 ஆண்டுகள் அங்கம் வகித்திருக்கிறோம். அந்த வகையில் பொதுவான விஷயங்கள் குறித்து பேசினோம் என்று அவர் கூறினார்.

கருணாநிதி சுட்டிக்காட்டுபவரே பிரதமராக அமர வேண்டும்-ஸ்டாலின்


இன்று குன்னூர் பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்ற படியே அத்தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரம் செய்தார் மு.க.ஸ்டாலின். அப்பொழுது அவர் பேசியதாவது:

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் குன்னூருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையைப்போக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேட்டுப் பாளையம்–கக்கநல்லா சாலை ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டது.

இந்த தொகுதியின் எம்.பி.யாக உள்ள ஆ.ராசா மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவினார். தி.மு.க. ஆட்சியின் போது நீலகிரியில் மின்வெட்டு இல்லை. ஆனால் தற்போது நீலகிரியிலும் மின்தடை உள்ளது. இங்கு உள்ளதை விட சமவெளி பகுதிகளில் மின்தடை அதிகம் உள்ளது.

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும். அதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிக்காட்டுபவரே பிரதமராக அமர வேண்டும். அதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் இங்கு தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் ஆ.ராசா மற்றும் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும்: சிதம்பரம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நீர்த்துப்போனது என்று பரவலாக கூறப்பட்டாலும், 23 நாடுகள் அந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன. இந்நிலையில், இந்தியாவும் அந்த தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும்" என்றார்.

ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "சிதம்பரம் தமிழகத்தைச் சேர்ந்தவர். எனவே அவர் கண்டிப்பாக அப்படித் தான் கூறுவார். ஆனால் தீர்மானத்தை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் ஒரு தேசிய கட்சியாக இருந்து காங்கிரஸ் முடிவு செய்யக்கூடிய விஷயம்" என்றார்.

மதச்சார்பற்ற அணி அமையும்போது காங்கிரசை திமுக ஆதரிக்கும் என கருணாநிதி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம், "காங்கிரஸ் கட்சி நிச்சயமாக ஒரு மதச்சார்பற்ற கட்சி. கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்கிறேன்" என தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த அவர், மக்களவை தேர்தல் நிறைய ஆச்சர்யமான முடிவுகளை அளிக்கும் என்றார்.

மோடி உடலை துண்டு, துண்டாக வெட்டி விடுவோம்: காங்கிரஸ் வேட்பாளர் ஆவேசம்


மக்களவை தேர்தலில், உத்தர பிரதேச மாநில சஹரன்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், பாஜக பிரதம வேட்பாளர் மோடியை கொலை செய்வதாக கூறி பரபரப்பு மற்றும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இம்ரான் மசூத் கூறியுள்ளதாவது:

உத்தர பிரதேச மாநிலம் ஒன்றும் குஜராத் இல்லை. குஜராத்தில் 4 சதவிகித மக்கள் மட்டுமே இஸ்லாமியர்கள், உத்தர பிரதேசத்திலோ, 22 சதவிகித மக்கள் இஸ்லாமியர்கள். நரேந்திர மோடிக்கு சரியான பதிலடி கொடுக்க எனக்கு தெரியும். நாம் மோடியை துண்டு, துண்டாக வெட்டி விடுவோம்.

தேர்தல் ஆணையம், இம்ரான் மசூத் பேசியிருக்கும் வீடியோவை பார்த்த பிறகு, தகுந்த நடவடிக்கை எடுக்கும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நன்றி மறந்த காங்கிரஸ் என குற்றஞ்சாட்டிய கருணாநிதிக்கு, ஞானதேசிகனின் பதில்கள்

தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:

கைதூக்கி விட்ட திமுகவை நன்றி மறந்து விட்டு, எப்படி பழி வாங்கலாம் என்று காங்கிரஸ் கட்சி செயல்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

கடந்த 9 ஆண்டுகளாக திமுக எங்களோடு அமைச்சரவையில் இருந்தது. ஆட்சிக்கு வரும்போதே, முதலில் தங்களுக்கு என்னென்ன இலாகாக்கள் வேண்டுமென்று எழுதிக் கொடுத்து, அதைக் கேட்டு வாங்கினார்கள். 33 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஆந்திராவுக்கு கூட அமைச்சர வையில் இந்த உரிமை கிடைக்க வில்லை. ஆனால் திமுகவுக்கு 4 கேபினட் மற்றும் 3 இணை அமைச்சர் பதவிகள் வழங்கப் பட்டன. அதுவும் முக்கியமான துறைகள் வழங்கப்பட்டன.

ஆனால், ஒரு ஆண்டுக்கு முன்பு பதவி விலகிவிட்டு, குற்றஞ்சாட்டு கிறார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் கூட்டணியிலிருந்து விலகு வது திமுகவுக்கு வாடிக்கையா னது. பாஜகவுடன் கூட்டணிலிருந்த போதும் இதையேதான் செய்தார் கள். ஆட்சியிலிருந்தபோதே, இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறி விலகியிருக்கலாமே. ஆனால் இப்போது இவர்கள் சொல்லும் காரணங்களும் தத்துவங்களும் ஏற்புடையதல்ல.

பொது மன்னிப்பு என்ற முறையில் காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக திமுக தலைவர் கூறியிருக்கிறார்?

மன்னிப்பு கேட்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை. நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. காங்கிரஸின் துரோகம் குறித்து பட்டியலிட்டால் அதற்கு காங்கிரஸ் பதிலளிக்கும்.

அவர்கள் சொல்வது 2ஜியாக இருந்தால், அதற்குப் பதில் இருக்கிறது. 2ஜி வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையில் யாருடைய தலையீடுமின்றி, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் நடந்தது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்களாக யார் வாதாட வேண்டும் என்பதும், விசாரணை அறிக்கையும் கூட உச்ச நீதிமன்றத் தின் கண்காணிப்புடன் தான் நடந் தது. இதில் காங்கிரஸைக் குறை சொல்ல முடியாது. ஆனால் ராஜாவைப் பொறுத்தவரை, குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறும்வரை அவர் நிரபராதிதான்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் மீது, ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல் வழக்கும், கல்மாடி மீது காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வழக்கும் பதிவானது. எனவே காங்கிரஸ் கட்சி யாரையும் பழிவாங்கவில்லை. கட்சி பேதமின்றி வெளிப்படையாக செயல்பட்டது.

மதச்சார்பற்ற நிலைக்கு காங்கிரஸ் வந்தால் ஆதரிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

இந்தத் தேர்தல் மதச்சார்புள்ள இயக்கத்துக்கும், மதச்சார்பற்ற இயக்கத்துக்கும் இடையிலான போராட்டமாகும். ஆனால், ஏற்கெனவே மதச்சார்பற்ற நிலையில் செயல்படும் காங்கிரஸை, மதச்சார்பற்ற நிலைக்கு வந்தால் என்று திமுக தலைவர் கூறுவதன் அர்த்தம் உண்மையிலேயே எங்களுக்கு புரியவில்லை. மற்ற குற்றச்சாட்டுகளெல்லாம் அவர் ஏற்கெனவே திமுக பொதுக்குழுவில் கூறியவைதான். ஆனால், தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கோ, மோடிக்கோ திமுக ஆதரவு தராது என்பதை திட்டவட்டமாக திமுக தலைவர் கருணாநிதி சொல்ல வேண்டுமென்று காங்கிரஸும், எங்கள் கட்சியின் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால் அதற்கு அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை.

திமுகவின் ஆதரவைப் பெறும் நிலைக்கு காங்கிரஸ் வந்தால், திமுகவின் ஆதரவை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா?
அரசியலில் அந்தந்த சூழலுக்கு ஏற்பதான் அரசியல் கட்சிகள் முடிவெடுக்கும். எனவே தேர்தல் முடிவுக்குப் பிறகு என்னவென்பதை இப்போது கூற முடியாது.

காங்கிரஸ் கட்சி அதல பாதாள நிலைக்கு சென்றுவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

காங்கிரஸ் கட்சி பாதாள நிலைக்கு செல்லவில்லை. பாதாளம் யாருக்கு என்பதை தேர்தல் முடிவுக்குப் பின் தெரிந்து கொள்ளலாம்.

கனிமொழி எம்.பி.யாவதற்கு ஆதரவளித்தபோது நன்றியோடு இருந்த காங்கிரஸ், இப்போது மட்டும் கருணாநிதிக்கு நன்றி கெட்ட கட்சியாகிவிட்டதா?


திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை சத்திய மூர்த்தி பவனில் கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.ஞான தேசிகனுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

சொன்ன வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.

திமுகவுக்கு காங்கிரஸ் எந்த துரோகமும் செய்யவில்லை. மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழி எம்.பி.யாவதற்கு காங்கிரஸ் ஆதரவளித்தது. அப்போதெல்லாம் நன்றியுள்ள கட்சியாக இருந்த காங்கிரஸ் இப்போது மட்டும் திமுகவுக்கு நன்றிகெட்ட கட்சியாகிவிட்டதா? தமிழகத்தில் மைனாரிட்டி யாக இருந்த திமுகவுக்கு 5 ஆண்டுக ளாக எந்தப் பதவியும் பெறாமல் முழுமையாக ஆதரவு கொடுத்து அவர்களது ஆட்சியைக் காப்பாற்றியதே காங்கிரஸ்தான்.

இப்போது நன்றி மறந்த காங்கிரஸ் என்று திமுக தலைவர் சொல்கிறார். நன்றி மறந்தவர்கள் யார் என்பதை தேர்தல் முடிவு சொல்லும் என்றார்.

Thursday, 27 March 2014

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா உட்பட 12 நாடுகள் தவிர்த்தது, 23 நாடுகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேறியது

 

ஜெனிவாவில் இன்று இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது நடந்த வாக்குப் பதிவை இந்தியா உட்பட 12 நாடுகள் தவிர்த்தது. ஆனாலும் 23 நாடுகளின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேறியது.

முதல் முறை இத்தகைய தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா தவிர்த்துள்ளது. 2009, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில், இலங்கை போர் குற்றங்கள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூன்றுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தது.

இந்த முறை தீர்மானத்தை தவிர்த்ததைக் குறித்து, ஐ.நாவுக்கான இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா கூறியதாவது:

"இந்தத் தீர்மானம் ஒழுங்கற்று, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருப்பதால் இந்தியா இதை தவிர்க்கிறது. ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் உயர் ஆணையர் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து தலையிட்டு, விசாரணை நடத்தி, கண்காணிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த தீர்மானங்களைப் போல் இல்லாமல், இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் உள்ளது.

இறையாண்மையில் தலையிடும் விதமாக இருக்கும் அணுகுமுறை எதிர்வினையை அளிக்கும் என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. சர்வதேச நாடுகள் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்று ஒத்துழைப்பு என்கிற அடிப்படை கொள்கையிலிருந்து விலகுவது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதித்து, பாதுகாக்க மனித உரிமைக் கவுன்சில் எடுத்து வரும் முயற்சிகளை குறைந்த்து மதிப்பிடுவதாகவே இருக்கும்" என்று அவர் கூறினார்.

ஜெ.ஆட்சிக்கு 'ஓவர்' என்று சொல்லுங்கள்-ஸ்டாலின்


அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோவை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி ஏற்பட வேண்டும். நாங்கள் தேர்தலுக்கு மட்டும் வந்து செல்லவில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டையும் மக்களைப் பற்றியும் கருணாநிதி கவலைப்படுவார். ஆனால், ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்க வருவார். அதுவும் ஹெலிகாப்டரில் வருவார்.

அவர் வானத்தில் செல்லும் போது போலீஸார் கீழே பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். "ஹெலிகாப்டரில் அம்மா புறப்பட்டு விட்டார் ஓவர்", "ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டார் ஓவர்" என போலீஸார் வயர்லெஸ்சில் கூறுவார் கள். அவரது ஆட்சிக்கு மக்கள் "ஓவர்" சொல்ல வேண்டும். நான் உங்களிடம் ஓட்டு கேட்க உரிமையோடு வந்திருக்கிறேன். தமிழகத்தில் கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2006-11-ம் ஆண்டில் பல்வேறு திட்டங்கள் அரக்கோணத்தில் செயல்படுத்தப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எந்த‌ திட்டங்களும் செயல்படுத்த வில்லை. திமுக ஆட்சியில் அரக்கோணம் நகராட்சியில் தொடங்கிய பாதாள சாக்கடை திட்டம் கிடப் பில் போடப்பட்டுள்ளது.

ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியலை நாங்கள் கேட்டோம், அவர்கள் தரவில்லை-சிதம்பரம்


கறுப்புப் பணம் பதுக்கிய இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசிடம் தான் (சிதம்பரம்) கோரியதாகவும், ஆனால் அந்த நாடு, அப்பட்டியலை அளிக்க மறுத்துவிட்டதாகவும் சிதம்பரம் தற்போது நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து சிதம்பரம் கூறுகையில், கடந்த 2009ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து வெளியுறவு துறையிடம் கறுப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை கேட்டு கடிதம் எழுதியதாகவும், அதனை ஏற்றுக் கொள்ளாத சுவிட்சர்லாந்து, இந்தியர்களின் பட்டியலை வெளியிட மறுத்ததோடு, இந்தியாவின் இரட்டை வரி விதிப்பு முறையை தங்கள் நாடு ஏற்றுக் கொள்ளவில்லை என்று சுவிட்சர்லாந்து பதில் அளித்ததாக‌ கூறினார்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில், சுவிட்சர்லாந்தின் பொது நிதி கொள்கை நிலைப்பாட்டை மாற்றி கருப்புப் பண விவகாரத்தை வெளிக்கொண்டுவர வற்புறுத்தப் போவதாக ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். 

பிசிசிஐ இடைக்கால தலைவராக கவாஸ்கர்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது


ஐபிஎல் முறைகேடு விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து என்.சீனிவாசன் தாமாகவே பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. பதவி விலக தவறினால் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான அமர்வு எச்சரித்தது. இதை தொடர்ந்து சீனிவாசன் பதவி விலகியதை அடுத்து, ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை பிசிசிஐ தற்காலிக தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்கலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதே போல் ஐபிஎல் 7 போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடம் பெறக்கூடாது என நீதிபதிகள் பரிந்துரைத்தனர். மேலும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய எந்த ஒரு நபரும் பிசிசிஐ-ல் அங்கம் வகிக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

 ஐபிஎல் சூதாட்ட சர்சை விவகாரத்தில் முகுல் முத்கல் கமிட்டி அறிக்கையின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ இன்று உறுதியளித்துள்ளது. இருப்பினும், கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி, தீவிர பரிசீலனைக்குப் பின்னரே உத்தரவு பிறப்பிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி அறிக்கையின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ உறுதியளித்துள்ளது.

நண்பர்கள், எதிரிகள் என யார் உங்கள் அருகில் வந்தாலும், அலெர்ட் செய்யும் 'ஆப்'




கிரிஸ் பேக்கர் மற்றும் ப்ரையன் மூர் என்ற இருவர், க்ளோக் என்ற ஸ்மார்ட் போனுக்கான அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். உங்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் வேண்டாதவர்கள், அல்லது பார்க்க விரும்புவர்கள், பார்க்க வேண்டாம் என நினைப்பவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து இரு மைல்கள் தூரத்திற்குள் வரும்போது,  இந்த க்ளோக் அப்ளிகேஷனில் உள்ள மேப்  உங்களுக்கு தெரியப்படுத்தும். இன்ஸ்டாகிராமில் ஒருவர் தெரிவிக்கும் 'லொகேஷன்' தகவலையே க்ளோக் பயன்படுத்துகிறது. அதனால், இன்ஸ்டாகிராமில், உங்களை யாராவது ப்ளாக் செய்து இருந்தால், அவர்களை பற்றி தகவல் உங்களுக்கு தெரிய வராது.

எதிர்பார்த்தது போலவே, இந்த க்ளோக் அப்ளிகேஷன் வெற்றியை அடைந்திருக்கிறது என கிரிஸ் பேக்கர் தெரிவித்து இருக்கிறார்.

ஜெ.வின் சொத்து பட்டியலை வெளியிட்ட கருணாநிதி


நேற்று சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா சொத்து பற்றிய விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு ஒரு ரூபாய்தான் சம்பளம் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகாத அவரது வழக்கறிஞருக்கு, அவரது ஒருநாள் சம்பளமான ரூ.65000 அபராதமாக  விதிக்கப்பட்டுள்ளதை கேள்விப்படும் போது ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் எவ்வளவு என்று அனைவருமே தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வழக்கறிஞரே அம்மையாரின் உண்மையான சொத்துக்குவிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார். அப்பட்டியலில் ஜெயலலிதாவின் சொத்துக்களாக வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கரில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர், கோடநாட்டில் 800 ஏக்கர், காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளில் 1190 ஏக்கர் ஸ்ரீவைகுண்டத்தில் 200 ஏக்கர், மற்றும் ஹைதராபாத்தில் 200 ஏக்கரில் தோட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஆனால் ஜெயலலிதாவோ தன்னை ஒன்றுமில்லாத ஏழை எனவும் பச்சைக்குழந்தை போலவும் தன்னை கருதி பிரச்சாரம் செய்து வருவகிறார்,” என்று கருணாநிதி பேசினார்.

தேர்தலில் என் ஆதரவு யாருக்கும் கிடையாது-அழகிரி


மு.க.அழகிரி,  நேற்று பழம்பெரும் திமுக பிரமுகர் எம்.கே.ஏழுமலையைச் சந்திக்க ஆரணிக்கு வந்தார். அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எம்.கே. ஏழுமலையை அவரது இல்லத்தில் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது:

"திமுகவிலிருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. நான் இப்போதும் திமுகவில்தான் இருக்கிறேன். தற்காலிக நீக்கம் மற்றும் நீக்கம் செய்யும் முன் எனக்கு நோட்டீஸ் ஏதும் வழங்கவில்லை. எனக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கலைஞரிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள். தலைமையின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். யார் உள்ளே, யார் வெளியே என்பது ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும்.

வரும் தேர்தலில், என்னுடைய ஆதரவு யாருக்கும் கிடையாது, புதிய கட்சி எதுவும் தொடங்குவதாகவும் இல்லை. ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும், சுற்றுப்பயணம் செய்து எனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறேன். அதன் பின்னர் முடிவை அறிவிப்பேன். அதன் தொடர்ச்சியாகத்தான் ஆரணியில் பழம்பெரும் திமுக பிரமுகரும், எனது ஆதரவாளர் முருகனின் தந்தையுமான எம்.கே.ஏழுமலையைச் சந்திக்க வந்துள்ளேன்."

இவ்வாறு மு.க.அழகிரி கூறியிருந்தார்.

2004 ல் அதிமுகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்தது போல இப்போதும் விரட்டி அடிக்க வேண்டும்.

விழுப்புரம் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து நேற்று மாலை விஜய்காந்த் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

நமது ஒரே குறிக்கோள் அதிமுக, திமுக வெற்றிபெறக்கூடாது என்பது தான். இம்மாவட்டத்தில் கரும்பு அதிகம். கரும்பு இனிக்கிறது. ஆனால் விவசாயியின் வாழ்க்கை கசக்கிறது. இம்மாவட்டத்தில் பொன்முடியும், சி.வி.சண்முகமும் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் இம்மாவட்டம் வளர்ச்சி பெறவில்லை. அவர்கள் வளர்ச்சி பெற்று விட்டார்கள்.

30 ஆயிரம் நகைத் தொழிலாளர்கள் இம்மாவட்டத்தில் உள்ளனர். தமிழகத்தில் அதிக நகைத் தொழிலாளர்கள் கோவை மாவட்டத்திலும், அடுத்து விழுப்புரத்திலும் உள்ளனர். சிதம்பரம் அவரது தொகுதிக்கு மட்டும் ஸ்டார் ஸ்வர்ணா திட்டத்தை அமல்படுத்தினார்.

தேர்வு எழுதும் மாணவர்கள் படிக்கவே முடியவில்லை. மின்சாரமே இல்லை என்கிறார்கள். 2012-ல் நத்தம் விஸ்வநாதன் வானத்தில்தான் மின்வெட்டு இருக்கும் என்றார். அதனால்தான் அதிமுக வேட்பாளர்களை ஆங்காங்கு பொதுமக்கள் ஓட ஓட விரட்டி அடிக்கின்றனர். டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ண யிக்கும் ஜெயலலிதா பெட்ரோல் டீசல் விலையை இதற்கு மேல் ஏற்றவிடமாட்டேன் என இலக்கு நிர்ணயிக்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் தொழில், விவசாயம், கல்வி வளர்ச்சி இல்லாமல் மிகவும் பின் தங்கியுள்ளது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.தற்போது எல்லா இடத்திலும் வாகன சோதனை நடக்கிறது.

வானத்தில் ஹெலிகாப்டரில் செல்லும் ஜெயலலிதாவை எப்படி சோதனை நடத்துவது. கடிதப் புயல் கலைஞர் என்றால் ஜெயலலிதா கடித சூறாவளி என்று வைத்துக்கொள்ளலாம். எதற்கு எடுத்தாலும் கடிதம் எழுதுவது. ஏன் ஒருமுறை நேரில் சென்று பிரதமரை சந்திக்கலாமே? நானாவது பிரதமரைச் சந்தித்தேன்.

தமிழ்மக்களை வாழவைக்கவே இக்கூட்டணி. 2004 ல் அதிமுகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்தது போல இப்போதும் விரட்டி அடிக்க வேண்டும்.

இவ்வாறு விஜய்காந்த் பேசினார்.

காங்கிரஸ் மனம் திருந்தினால், பொது மன்னிப்பு கொடுத்து ஆதரிப்போம்-கருணாநிதி


திமுக தலைவர் கருணாநிதி, தனது தேர்தல் பிரச்சாரத்தை சென்னையில் நேற்று தொடங்கினார். சிந்தாதிரிப் பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சென்னையின் மூன்று தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து கருணாநிதி பேசியதாவது:

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த விவரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பட்டியலிட்டுள்ளார். (ஜெயலலி தாவின் சொத்துப் பட்டியலை வாசித்தார்). ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியதாகக் கூறியவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது. ஆனால் அவர் எங்களைப் பார்த்து ஊழல் என்கிறார்.
காங்கிரஸ் மனம் திருந்தினால், பொது மன்னிப்பு கொடுத்து ஆதரிப்போம்-கருணாநிதி

சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தேன். அதற்காக, வரும் ஆண்டில் சுதந்திர தினத்தன்று ஜெயலலிதா தேசியக் கொடியேற்றாமல் இருப்பாரா? அதுவரை அவரது ஆட்சி இருக்குமா என்று தெரியவில்லை. நாங்கள் போட்ட சாலையில், பாலத்தில்தான் அவர் தினமும் போயஸ் கார்டனிலிருந்து கோட்டைக்கு செல்கிறார்.

பல சைபர்களைப் போட்டு, ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னார்கள். இப்போது ஒவ்வொரு சைபராக விலகுகிறது. காங்கிரஸார் திமுகவை பழிவாங்கும் வகையில் நடந்து கொண்டனர். யாரைப் பழிவாங் கலாம் என்றுதான் அலைந்தார்கள். நன்றியை மறந்து விட்டு, நன்றி என்றால் என்னவென்று கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டனர். அதனால்தான் இன்றைக்கு தமிழகத்திலும் சரி, வேறு மாநிலத்திலும் சரி காங்கிரஸ் கட்சி அதாள பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

இந்த உலகத்தில் நல்ல முறையில் நல்லபடியாக வாழ வேண்டும் என்றால் நன்றி உணர்வு இருக்க வேண்டும். நன்றி உணர்வு இல்லாமல், கடந்த காலத்தில் நமக்கு கைதூக்கி விட்டவர்கள் யார் என்று எண்ணிப் பார்க்காமல், திமுக தோழர்களை, செயல்வீரர்களை நோக்கி காங்கிரஸார் நடவடிக்கை எடுத்ததால் இப்போது அனுபவிக் கிறார்கள்.

அப்படி அனுபவித்தாலும் அவர்களுக்கு நம்பிக்கையுடன் ஒன்று சொல்கிறேன். இதே காங்கிரஸார் நாளைக்கு மனம் வருந்தி, நாங்கள் மதச்சார்பற்ற நிலைக்கு மீண்டும் திரும்புவோம், மதவெறி கொண்டவர்களை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வார்களேயானால், போனால் போகட்டும் என்று அவர்களை திமுக ஆதரிக்கும். அவர்கள் செய்த தீமைகளை பொறுத்துக் கொண்டு, இதுவரை செய்ததை எண்ணிப்பாராமல், அவர்களுக்கு பொது மன்னிப்பு தருவது என்ற முறையில் திமுக நடக்கும்.

அதே நேரத்தில் நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும், அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும், மனைவி யாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் அவர்களை திமுக மன்னிக்காது. அவர்களுடைய தவறுகளை மறவாது. எனக்கு கொள்கைதான் முக்கியம். குழந்தை குட்டிகளல்ல.

நான் பொதுவாழ்வுக்கு வந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வேனோ.. அதற்குள் தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டியவைகளை செய்து விட்டுத்தான் கண் மூடுவேன். அதுவரை பெரியார், அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை பேணி நடக்க, இந்த இயக்கத்தின் வேட்பாளர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

Wednesday, 26 March 2014

கெஜ்ரிவால் முட்டாள் தனமாக பேசுபவர் தான், இருந்தாலும் அவர் மீது மை வீசியிருக்க கூடாது-திக்விஜய் சிங்


வாரணாசியில் நேற்று ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அத்தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அவர் மீது நேற்று அங்கு சிலர் மையை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் இன்று கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து திக்விஜய் சிங் கூறுகையில், “நான் கெஜ்ரிவாலின் ரசிகன் இல்லை. அவர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் முட்டாள்தனமாக மட்டும் பேசும் நபர். ஆனால் கெஜ்ரிவால் மீதான மை தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது பாசிசவாதிகளின் வழியாகும். பா.ஜ.க. ஒரு பாசிச கட்சி, அந்த கட்சிதான் இதுபோன்ற வேலையை செய்கிறது.
 நரேந்திர மோடி ஒருபோதும் பிரதமராகவே முடியாது.”

இவ்வாறு திக்விஜய் கூறியிருந்தார்.

ஆ.ராசாவை மாட்டி விட்டு தப்பித்த காங்கிரஸ், நன்றி மறக்கும் காரணத்தாலே பாதாளத்தில் விழுந்தது-கருணாநிதி


மக்களவை தேர்தலை முன்னிட்டு வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில். “2ஜி அலைக்கற்றை ஊழலில் தி.மு.க.வின் ராசாவை மாட்டிவிட்டு காங்கிரஸ் தப்பித்து விட்டது. அதோடு மட்டுமில்லாது எங்களையும் தனித்து விட்டுவிட்டது. ஆனால், தற்போது ராசா குற்றமற்றவர் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நன்றி மறந்து விட்டது. பல கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த அக்கட்சி தற்போது யாரை பழி வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. இதுவே அக்கட்சியின் வீழ்ச்சிக்கும் அதன் மதிப்பு இழந்ததற்கும் காரணம். முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் சிறப்பாக இருந்த காங்கிரஸ், தற்போது அதலபாதாளத்தில் விழுந்து கிடப்பதற்கு அதன் நன்றி மறந்த குணமே காரணம்” என்று தெரிவித்தார்.

இந்தியாவின் எதிரிகள்: ஏ.கே 47, ஏ.கே.அந்தோணி, அரவிந்த் கெஜ்ரிவால்(ஏ.கே. 49): மோடி


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு தழுவிய 'பாரத் விஜய்' என்ற பிரச்சார பேரணியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் துவங்கினார். அப்பொழுது அவர், மூன்று ஏ.கே.-க்கள் இந்திய நாட்டின் எதிரிகளாக உள்ளனர். ஒன்று ஏ.கே 47 ரக துப்பாக்கி, மற்றொன்று ஏ.கே.,47-களுடன் வலம் வரும் ஏ.கே.அந்தோணி, 3-வது அரவிந்த் கெஜ்ரிவால் (ஏ.கே.49). இவர்கள் 3 பேரும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வருபவர்கள்." என்று கூறினார்.

மேலும் மோடி பிரச்சார பேரணியின் போது, "காஷ்மீர்வாசிகள் பாகிஸ்தானுடன் இணைவது குறித்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் சொல்கிறார். இவர்களின் வெப்சைட்டில் காஷ்மீர், இந்தியாவில் இடம்பெறாத வண்ணம் காட்டப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியாவின் எதிரிகள். இவர்கள் பாகிஸ்தானுக்கு உதவியாக செயல்படுகின்றனர்." என்று கடுமையாக சாடி பேசினார்.

காங்கிரஸை தாக்கி பேசிய மோடி, "இளவரசர் ராகுல் சொல்கிறார், இந்த நாட்டை முன்னேற்ற நினைக்கிறோம் என்று. நான் சொல்கிறேன்... ராகுல் இந்த நாட்டை அழித்து வருகிறார். இங்கு முதலில் நான் வைஷ்ணவி தேவி முன் வணங்கினேன். இப்போது மக்கள் நீதிமன்றத்தில் வணங்கி கேட்கிறேன். எத்தனை ஆண்டு காலம் நீங்கள் வாரிசு அரசியல் நடத்துவீர்கள்? வாரிசு அரசியல் இந்த நாட்டின் எதிரியாக உள்ளது." என்றும் கூறினார்.

பாஜக ஒரு பலூன், அது வெடித்து சிதற போவது உறுதி, காங்கிரஸ் வெற்றியை பார்த்து அனைவரும் மிரண்டு போவர்


 காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, "கடந்த 2004-ல் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற பலூன் அடங்கியது போலவே இப்போதும் பாஜக பலூன் வெடித்துச் சிதறப்போவது உறுதி. " என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவது, இந்தியாவுக்கு தீங்கு தரும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மோசமான தோல்வி அடையப் போவதாக சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், இதற்கு மாறாகவே தேர்தல் முடிவுகள் அமையும். அப்போது, அனைவரும் மிரண்டு போவார்கள்.

காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி அடையும் என்றும், எங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அலை இருக்கிறது என்றும் 2009-ல் கூட கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால், முடிவுகள் அவற்றைப் பொய்ப்பித்தன. உத்தரப் பிரதேசத்தில் வெறும் 5 தொகுதிகள் கிடைக்கும் என்றார்கள். ஆனால், அந்த மாநிலத்தில் 22 தொகுதிகள் பெற்றோம்"

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

அழகிரியை விட்டு, ஸ்டாலின் பக்கம் தாவிய எஸ்ஸார்.கோபி


அழகிரியின் வலதுகரமாக விளங்கிய எஸ்ஸார் கோபி, தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். முன்னதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

எஸ்ஸார் கோபியின் இந்த அதிரடி நடவடிக்கை, அழகிரி தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்து கோபி கூறியதாவது:

அழகிரியின் ஆதரவாளனாக அவருடன் பல ஆண்டுகளாக இருந்தேன். சமீபகாலமாக அவர் கட்சியை விமர்சித்து பேசுவதுடன், கட்சித் தலைவர் மனது புண்படும்படி தொடர்ந்து நடந்துகொள்வது எங்களுக்குப் பிடிக்கவில்லை. இது குடும்பப் பிரச்சினைதான். சரியாகி விடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து கட்சியை விமர்சிப்பதும், தேர்தலில் திமுக தோற்கும் என்று கூறுவதையும் எங்களால் ஏற்க முடியவில்லை. திமுகவை மிக மோசமாக விமர்சித்த வைகோவை சந்திப்பதும் அவருக்கு ஆதரவு தருவதும் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்போதைய நிலையில் எங்களுக்கு அழகிரியைவிட திமுகவும், தலைவரும், தளபதியும்தான் முக்கியம். என்னைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த அழகிரி ஆதரவாளர்கள் பலரும் கருணாநிதியை சந்திக்க வருவார்கள்.

என் மீது பல வழக்குகள் இருப்பது உண்மைதான். யாரால் என் மீது வழக்கு வந்தது? அழகிரியுடன் இருந்ததால்தானே இத்தனை வழக்குகளையும் சந்தித்தேன். வழக்குகளிலிருந்து விடுபடத்தான் திமுக தலைமையுடன் இருக்கிறேன் என்று கூற முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு என் மீது 22 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இன்னும் 100 வழக்குகள் போட்டாலும் கட்சியையும், தலைமையையும் விட்டுத் தர மாட்டேன்.

இவ்வாறு எஸ்ஸார் கோபி கூறினார்.

பதவி மீது ஆசை இருந்தால் நான் ஏன் முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்?



வாரணாசி தொகுதியில் பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், அத்தொகுதியில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது பேசியதாவது:

பலர் நான் பதவியை விட்டு ஓடிவிட்டதாக கூறுகின்றனர். நான் சில கொள்கைகளுக்காகவே பதவியை விட்டு விலகினேன். கடவுள் ராமர் அவருடைய தாயாரால் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு அனுப்பப்பட்டார். அதை எல்லோரும் ஆதரித்தார்கள். பா.ஜ.க. அப்போது இருந்திருந்தால் கடவுள் ராமரையும் கூட ஓடிப்போனதாகவே கூறியிருப்பார்கள்.

அரசியல் கொள்கைகள், தியாகம் என்றால் என்னவென்றே பா.ஜனதா கட்சிக்கு தெரியாது. நான் சவால் விடுகிறேன். பா.ஜ.க.வில் யாராவது பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடியுமா?

பதவி மீது ஆசை இருந்தால் நான் ஏன் முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்? காங்கிரசும் பா.ஜ.க.வும் சேர்ந்து என்னுடைய லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. அதனால்தான் பதவியை விட்டு விலக நேரிட்டது.

ரயில்வே மந்திரி பதவியிலிருந்து ராஜினாமா செய்த அப்போதைய லால் பகதூர் சாஸ்திரியானாலும் சரி, 14 வருடங்கள் வனவாசம் சென்ற ராமர் ஆனாலும் சரி யாரையும் பா.ஜ.க. விட்டுவைக்கப்போவதில்லை. ரயில் விபத்தின் காரணமாகவே அப்போதைய லால் பகதூர் சாஸ்திரி ரயில்வே மந்திரி பதவியிலிருந்து விலக நேரிட்டது. கடவுள் புண்ணியத்தில் அப்போது பா.ஜ.க. இருக்கவில்லை. இருந்திருந்தால் அவர்களையும் கூட ஓடிப்போனதாக தான் கூறியிருப்பார்கள்.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் பேசியிருந்தார்.

புழல் சிறையில், போலீஸ் அதிகாரிகளை ஆபாசமாக பேசி, கற்கள் எரிந்து கைதிகள் ஆர்ப்பாட்டம்


சென்னை புழல் சிறையில் 800-க்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 200 பேர் திங்கள்கிழமை காலையில், தங்கள் மீதான வழக்குகளை விரைவில் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி திரிபாதி, டிஐஜி மவுரியா மற்றும் அதிகாரிகள் சிறைக்கு சென்று கைதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர்களை கைதிகள் கோபமாகவும், ஆபாசமாகவும் பேசினர். அதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த கைதிகளை கலைந்து போகச்சொல்லி சிறைக் காவலர்கள் விரட்டினர்.
அப்போது கைதிகள் கற்களை எடுத்து தாக்குதல் நடத்தினர். போலீஸார் கைதிகள் மீது தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தால் 11 கைதிகள் காயம் அடைந்தனர். இளவரசன் என்ற காவலர் உட்பட 3 காவலர்கள் காயம் அடைந்தனர். மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு கைதிகள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஜெ.வின் 4000 கோடிரூபாய் சொத்தை பற்றி நடுநிலை ஏடுகள் ஏன் செய்தி வெளியிடவில்லை? -கருணாநிதி


சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மதியம் அங்கிருந்து தனது இல்லத்திற்கு புறப்பட்ட கருணாநிதி, நிருபர்களை சந்தித்தார்.

அப்பொழுது ஜெயலலிதா 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பதாக நேற்றையதினம் பெங்களூரில் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறாரே என்று கேட்கப்பட்ட போது, அதற்கு கருணாநிதி, " ஏறத்தாழ 4 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாக நேற்றையதினம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் எடுத்து தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி பற்றி தமிழ்நாட்டு பத்திரிகைகள் குறிப்பாக சென்னையில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலை ஏடுகள் என்று தங்களை சொல்லி கொள்கின்ற பத்திரிகைகள் வெளியிடாததின் காரணம் என்ன?. சூட்சுமம் என்ன?. ரகசியம் என்ன? நடந்த பேரம் தான் என்ன?" என்று கூறியிருந்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media