BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 31 January 2014

அழகிரியின் 63வது பிறந்தநாளுக்கு, 63கிலோ எடை கேக், 63 கிலோ எடை ஏலக்காய் மாலை


அழகிரி நேற்று தன் 63வது பிறந்தநாளை ஒட்டி, 63 கிலோ எடை உள்ள கேக் ஒன்றை வெட்டினார். அந்த கேக்கில், ‘‘மலர் பாதையா... முள் படுக்கையா... எதுவாகிலும் அண்ணன் வழியில்...'' என எழுதப்பட்டு இருந்தது.

தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்ததனால், அவர் தனது வீட்டில் இருந்து விழா நடைபெற்ற ராஜா முத்தையா மன்றம்வரை செல்லவே,  சுமார் 2 மணி நேரம் ஆனது. பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். திமுக தொண்டர் ஒருவர் அலகு குத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அழகிரியின் ஆள் உயர கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.
            

கடந்த பிறந்தநாளின் போது அப்பா கருணாநிதியின் கையால் கேக் ஊட்டி விட்ட காட்சியை போட்டோவாக எடுத்து பெரிய பேனராக வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் மேற்கு மண்டல தலைவர் ஆர்.எம்.பி.சின்னான் 63 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை கொண்டு வந்து அழகிரிக்கு அணிவித்தார்.

தி.மு.க அழிய போகிறது- சுப்பிரமணியம் சாமி

                                     

இன்று விமான நிலையத்தில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுப்பிரமணியம் சாமி, அழகிரி-ஸ்டாலின் மோதலால் தி.மு.க அழிய போகிறது என்று கூறினார். "ஷாஜகான் காலத்தில் அவரது மகன்கள் இப்படித் தான் சண்டை போட்டுக் கொண்டார்கள். அதன் பிறகு முகலாயர்களின் ஆட்சியே முடிந்துவிட்டது. அதே போன்று அழகிரி-ஸ்டாலின் இடையேயான மோதலால், தி.மு.க.வும் அழியும்." என்று அவர் கூறினார்.

மேலும், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து, தன் கருத்தை ஏற்கனவே, பா.ஜ.க தலைமையிடம் கூறியதாகவும், அக்கருத்தை அவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பது தெரியவில்லை என்றும் சுப்பிரமணியம் சாமி கூறினார்.

மோடியின் சென்னை கூட்டத்திற்கு தடை கோரி வழக்கு

                                           

வண்டலூரில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பா.ஜ.க சார்பில் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக, முன்னெச்சரிக்கையாக மோடியின் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"நரேந்திர மோடி பீகாரில் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் குண்டுவெடித்தது.  சென்னையில் மோடி கலந்து கொள்ளும் வண்டலூர் பகுதியும் பதற்றமான பகுதி. போக்குவரத்து நிறைந்த பகுதி. தேசிய நெடுஞ்சாலையையொட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனால் சமூக மோதலுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம். எனவே இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்", என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனக்கு தெரியாது..எனக்கு தெரியாது..எனக்கு தெரியாது: கருணாநிதி

                             

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, "கருணாநிதியும், அவர் மகனும் நாடகம் நடத்துகின்றனர். அவர்களது வீட்டிற்குள் பேச வேண்டிய விஷயங்களை, ஊடகங்களின் முன்பு பேசுகின்றனர். அவர்கள் நடத்தும் எந்த நாடகத்திற்கும், தேமுதிக அடிபணியாது." என்று கூறினார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார். அப்பொழுது பிரேமலதா கருத்து பற்றி கேட்ட போது, "அவருக்குத் தெரிந்த அளவுக்கு நாடகம் பற்றி எனக்குத் தெரியாது. " என்று பதில் அளித்தார். மேலும், திமுக, தேமுதிக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை எந்த நிலையிலே இருக்கிறது என்பதும் தெரியாது என்று கூறினார்.

ஜெயலலிதா மீது இவ்வளவு வழக்குகள் இருக்கும்போது, அவர் பிரதமராக வரவேண்டும் என்பது பற்றிய அவரின் கருத்து கேட்ட போது, பிரதமர் ஆவதற்கு இப்படிப்பட்ட வழக்குகள் இடையூறாக இருக்குமா என்றால், எனக்கு அதைப் பற்றிய சட்ட நுணுக்கங்கள் தெரியாது என்று கருணாநிதி பதிலளித்தார்.

அழகிரியின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது


தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி தனது 63வது பிறந்தநாளை நேற்று மிகச் சிறப்பாக கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனது பிறந்தநாள் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட மதுரை மாவட்ட திமுகவினர் 10 பேரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். கலைக்கப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் திமுக ஏற்றால், சமரசத்திற்கு உடன் படுவேன்." என்று கூறினார்.

இதைப் பற்றி கருணாநிதியிடம் கேட்ட போது, "திமுகவில் உள்ளவர்கள், திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போன்றவர்களைப் பற்றி அபாண்டமாக பி.சி.ஆர். (தீண்டாமை வன்கொடுமை) குற்றச்சாட்டை போலீஸாரிடம் சொல்லி, அவர்கள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகு, கட்சி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. " என்று அவர் பதிலளித்தார்.

பிப்ரவரி 2ம் தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணியை அறிவிக்கிறார் விஜயகாந்த்

நாளை மறுநாள்  உளுந்தூர்பேட்டையில் நடக்கவிருக்கும் தே.மு.தி.க மாநாட்டில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து நிச்சயம் அறிவிக்கப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க மாநாட்டிற்கு 'ஊழல் எதிர்ப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டுள்ளது.  மாநாட்டிற்கு காவல்துறையினரின் அனுமதி கிடைத்துவிட்டதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார். அம்மாநாட்டின் முடிவில், தொண்டர்களின் கருத்துகளை முழுமையாக அறிந்து, தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், 'தங்களுடன் விஜயகாந்த் கூட்டணி அமைப்பது உறுதி' என, பா.ஜ.க நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடக்கவிருக்கும் மாநாட்டிலேயே விஜயகாந்த், தன் முடிவை அறிவிக்க மாட்டார் என்றும், சென்னை திரும்பியதும், மாநில நிர்வாகிகள், செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே, கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Thursday, 30 January 2014

ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வேண்டி கடிதம் எழுதப்பட்டது கடந்த டிசம்பர் மாதம்


திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதைப் பற்றி கருணாநிதி அளித்த பேட்டியில், அழகிரி தன்னிடம், ஸ்டாலின் இன்னும் 3-4 மாதங்களில் இறந்துவிடுவார் என்று கூறியிருந்தார் என தெரிவித்தார். இந்நிலையில் தான், ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க கோரி கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

தமிழ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டியளித்த தி.மு.க நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஸ்டாலின் பாதுகாப்புக் கோரி எழுதப்பட்ட கடிதம் கடந்த டிசம்பர் மாதமே எழுதப்பட்டது என்று தெரிவித்தார். அழகிரிக்கு பயந்து கொண்டு, ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கோரியதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தி தவறு என்பதை அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்த பெண் பயிற்சி விமானி பலி


சேலத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில், புதிய விமானிகள் பயிற்சி மற்றும் இயக்கம், பாராசூட் பயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிப்பது தொடர்பான பயிற்சி 4 பெண்கள் உள்பட 15 பேருக்கு அளிக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்து 3 பேர் வீதம், ஒவ்வொரு முறையும் பாராசூட் மூலம் கீழே குதித்தனர். இதே போல் 2 ஆண்கள், ஒரு பெண் பயிற்சி விமானிகள் என 3 பேரும்,  விமானம் 150 அடி உயரத்தில் பறந்த போது பாராசூட் மூலம் கீழே குதித்தனர். அப்பொழுது, பெண் பயிற்சி விமானியின் பாராசூட் ஒரு புறம் சுழலவில்லை. இதையடுத்து அவர் விமான நிலையத்தின் அருகில் இருக்கும் ஒரு விவசாய தோட்டத்தின் கரடு முரடான பகுதியில் விழுந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அங்கு விரைந்து வந்த  அதிகாரிகள் சிலர், உயிருக்கு போராடி கொண்டிருந்த அப்பெண் விமானியை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்த பெண் விமானியின் பெயர், ரம்யா, வயது 26, பெங்களூரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரிய வந்தது.

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட நர்சிங் மாணவிகள் 400 பேர் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நர்சிங் பயிற்சி பெறும் மாணவிகள் கடந்த 3 நாட்களாக, பணிக்கு செல்லாமல் பயிற்சி பள்ளி உள்ளே
 உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

அரசு கல்லூரிகளில் படித்த நர்சிங் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என‌உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர். இன்று காலை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முன்பு திடீரென 400 நர்சிங் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதனால் அங்கு சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  உடனே அங்கு ஐம்பது பெண் போலீசார்கள் வந்து, போராட்டம் நடத்தி கொண்டிருந்த நர்சிங் மாணவிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து மோதலும் ஏற்பட்டதில், சில மாணவிகள் மயக்கம் அடைந்து விழுந்துனர். பின்னர் நர்சிங் மாணவிகள் 400 பேரையும் போலீசார் கைது செய்து அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தினார்கள்.

அழகிரி பக்கம் சாய்ந்த நெப்போலியன், ரித்தீஷ், ராமலிங்கம்

அழகிரியை திமுகவை விட்டு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கியுள்ள நிலையில், அவருடன் கட்சியினர் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுக அறிவித்துள்ளது. இதையும் மீறி, திமுக எம்.பிக்கள் நெப்பொலியன், ஜே.கே.ரித்தீஷ் மற்றும் கே.பி. ராமலிங்கம், அழகிரியை நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கின்றனர். அதோடு அல்லாமல், இறுதி வரை தங்கள் ஆதரவு அழகிரிக்கே என்றும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறது திமுக தரப்பு.






தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் ராமலிங்கம், திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்தவர் தான், ஆனால் இப்பொழுது எப்படி அழகிரி பக்கம் சாய்ந்தார் என்பது பலருக்கும் விளங்கவில்லை. நெப்போலியனோ, அழகிரியின் தீவிர ஆதரவாளராக திகழ்ந்து வருகிறார். கலவர பின்னணி மற்றும் வன்முறை வரலாற்றை உடைய ஜே.கே.ரித்தீஷும், அழகிரி பக்கம் சாய்ந்து இருக்கிறார்.

அழகிரியை கட்சியை விட்டு நீக்கியபோது, யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்சித் தலைமையின் உத்தரவையும் மீறி, அழகிரியோடு தொடர்பு வைத்து கொண்டதோடு மட்டும் அல்லாமல், அவருக்கு ஆதரவு அளித்து, இறுதியுடன் அவருடன் இருப்பதாக கூறி உறுதி அளித்து இருக்கின்றனர். அதற்காக, இந்த மூவர் மீதும் கட்சியில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற‌ எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

புதிய பறக்கும் ரயில் நிலையத்திற்கு பெயர் 'முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்துக்கும், மயிலாப்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய பறக்கும் ரயில் நிலையத்துக்கு ‘முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

பயணிகள் வசதிக்காக, நிறுவப்பட்டிருக்கும் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட ஆன செலவு, ரூ. 30 கோடி ஆகும். புதிய ரயில் நிலையம் கட்டப்படும்போது அந்தந்த மாநில முதல்வர் தான் புதிய ரயில் நிலையத்தின் பெயரை முடிவு செய்து அறிவிப்பார். தமிழக அரசுக்கு, ரயில்வே நிர்வாகம் பரிந்துரைத்த பெயர்கள், திருவள்ளுவர் ரயில் நிலையம், மாதவப் பெருமாள் ரயில் நிலையம், சமஸ்கிருதக் கல்லூரி ரயில் நிலையம், முண்டகக்கண் ணியம்மன் கோயில் ரயில் நிலையம் என்பனவாகும். இந்நிலையில், ஜெயலலிதா, புதிய பறக்கும் ரயில் நிலையத்திற்கு, 'முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’ என்ற பெயரை சூட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய ரயில் நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில்கள் அனைத்தும் முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அழகிரி பிறந்தநாள், கேக் வெட்டி கொண்டாட்டம்


 
மதுரை டி.வி.எஸ்.நகர் பகுதி சாய் நகர் வீட்டில் மு.க. அழகிரி, இன்று தன் 63வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். காலை 8.45 மணியளவில், அவரது மனைவி, மகள், மகன், மருமகள் மற்றும் ஏராளமான திமுகவினர் உடன் இருக்க, தன் பிறந்தநாள் கேக் வெட்டி,  அதை குடும்பத்தினருக்கு  ஊட்டி மகிழ்ந்தார்.
அவருக்கு மூன்று  திமுக எம்.பிக்களான  கே.பி. ராமலிங்கம், நெப்போலியன், ரித்தீஷ்  உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஆதரவாளர்கள் அணிதிரண்டு அழகிரியை நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் ராஜா முத்தையா மன்றத்துக்கு அவரை அழைத்து சென்றனர்.

மோடி பிரச்சாரம் செய்யவே தேவையில்லை; ராகுல் பேசினாலே, மோடி வெற்றி பெறுவார்


                                              
சேலத்தில் நேற்று நடந்த பா.ஜ.க கூட்டத்தில் கலந்து கொண்ட இல.கணேசன், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது குறித்த ஆலோ சனையில் ஈடுபட்டார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு  முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யவே தேவையில்லை. ராகுல் காந்தி பேசினாலே, மோடி வெற்றி பெற்று விடுவார் என கூறினார்.

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்த எந்த தகுதியும் இல்லாததால்தான், காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வருகிறது என்றும் கூறினார்.

மேலும் கூட்டணி அமைப்பதை பற்றி பேசிய அவர், தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளுடன், பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், பா.ஜ.க அமைக்க போகும் கூட்டணி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு சவால்விடும் கூட்டணியாக இருக்கும் என்றும் கூறினார்.

சிவாஜி சிலையை நீக்குவதென்றால், தமிழகத்தில் 16,000 மேற்பட்ட சிலைகளையும் நீக்க வேண்டும்

                                       

சென்னையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது என்றும், விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது என்றும், மக்களுக்கு இடையூறாக இருக்கும் அச்சிலையை அகற்ற வேண்டும் என்று, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பொது இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள், சாதித் தலைவர்களின் சிலைகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்திற்கும் மேல் என்றும், அச்சிலைகளையும் அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மக்களுக்கு இடையூறாக உள்ள அத்தனை சிலைகளையும் கண்டறிந்து அகற்ற ஒரு குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் ரமேஷ் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Wednesday, 29 January 2014

டெல்லியில் நிர்பயா கற்பழிக்கப் பட்டதற்கு காரணம் அவரே தான்

பெண்கள் கற்பழிக்க படுவதற்கு காரணங்கள் மூன்று:

1. அவர்கள் அணியும் அரைகுறை ஆடைகள்
2. அவர்களின் உடல் ரீதியான அங்க அசைவுகள்
3. பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு அவர்கள் செல்வது

இவ்வாறு கூறியவர், மஹாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் ஆஷா மிர்ஜே கூறியுள்ளார்.

டெல்லியில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், நிர்பயா என்ற பெண்,  தன் ஆண் நண்பருடன் திரைப்படம் பார்த்து விட்டு வரும் போது, ஒரு பேருந்திற்குள் கூட்டாக கற்பழிக்கப் பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். நிர்பயா எதற்காக இரவு வேளையில் வெளியே செல்ல வேண்டும்? அந்த பெண் மீது தான் குற்றம் என்றும், அவர் கற்பழிக்கப் பட்டதற்கு காரணம் அவரே தான் எனவும் ஆஷா மிர்ஜே கூறியுள்ளார்.

மிர்ஜேவின் இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்புகள், கண்டனங்கள் நாடு முழுவதும் எழுந்திருக்கின்றன.

நீங்களும் உங்கள் கண்டனத்தை, 'கமென்ட்'டில் தெரிவியுங்கள்!

விதியே விதியே என்செய்ய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை - வீணாகிப்போன முத்துகுமாரின் தியாகம் -

வீணாகிப்போன முத்துகுமாரின் தியாகம் - விதியே விதியே என்செய்ய நினைத்திட்டாய் என்  தமிழ் சாதியை

2009ம் ஆண்டு இதே நாள், சென்னை சாஸ்திரி பவன் எதிரில் ஒரு இளைஞன் தன் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்துக்கொண்டான், அவன் ஒன்றும் சாதாரண இளைஞனோ உணர்ச்சிவயப்பட்ட இளைஞனோ அல்ல என்பது அவன் எழுதியிருந்த அந்த மரண சாசனத்தில் தெரிந்தது.

தன்னை 7 மாதங்கள் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி கற்பழித்தார் என குற்றச்சாட்டு அளித்த பெண்

ஜெய்பூரில், 22 வயது பெண் ஒருவர், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான மோஹன்டி என்பவர், தன்னை ஏழு மாதங்கள் கற்பழித்ததாக மேஜிஸ்ட்ரேட் முன்பு தன் குற்றச்சாட்டை நேற்று பதிவு செய்தார். ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற உதவுவதாக கூறி தன்னை மோஹன்டி கற்பழித்தார் என்று அப்பெண் கூறியுள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே பேசி கொண்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும், சென்னை, ஆக்ரா, கோவா மற்றும் பாரத்பூரில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்த் பதிவுகளை ஆதாரங்களாக வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

குற்றம் சாட்டப் பட்ட மோஹன்டியால் தனக்கு ஆபத்து ஏதாவது நேரிட வாய்ப்புள்ளது என்று, தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அப்பெண் கேட்டு கொண்டுள்ளார்.

மோடிக்கு ஆதரவு அளிப்பாரா சூப்பர் ஸ்டார்?

சேலத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த பா.ஜ.க தலைவர் இல. கணேசன்,  பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருந்தார். அப்பொழுது நிருபர்களிடம் பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம், நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு தேர்தல் நெருங்கும் சமயத்தில் கேட்போம், அவரும் நிச்சயம் ஆதரவு தருவார் என கூறினார்.

மேலும், தே.மு.தி.க.வுடனும் கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம், அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருவதற்கான சூழல்கள் பிரகாசமாக உள்ளன எனவும் தெரிவித்து இருந்தார்.

தமிழகத்தில் பலமான கூட்டணியை அமைப்போம் என்றும்,  16 சதவீத அளவுக்கு மோடிக்கு ஆதரவு தமிழகத்தில் காணப்படுகிறது, அதை இன்னும் பலப்படுத்த முயற்சிக்கிறோம் என்றும் இல.கணேசன் கூறியுள்ளார்.

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட இருக்கிறாரா?

மு.க. அழகிரியை நிரந்தரமாக நீக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அழகிரிக்கு,  'உங்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்க கூடாது?' என்பதற்கான விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பும் திட்டத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது.

கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, அழகிரியை திமுகவில் இருந்து, தற்காலிகமாக நீக்குவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர்  அன்பழகன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி, அழகிரி தன்னிடம் தகாத வார்த்தைகளை கூறிவிட்டு, ஸ்டாலின் இன்னும் 3-4 மாதங்களில் இறந்துவிடுவார் என்று கூறியதாக உருக்கமாக பேட்டி அளித்தார். இதனைத் தொடர்ந்து அழகிரியை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுகவினர் சில இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கட்சியை விட்டே அழகிரியை நிரந்தரமாக நீக்கும் முடிவிற்கு திமுக வந்ததாக தெரிகிறது.  இதனால் "கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஏன் உங்களை கட்சியைவிட்டு நீக்கக் கூடாது?" என விளக்கம் கேட்டு திமுக தலைமை  அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி நாடகத்திற்கு எல்லாம் தே.மு.தி.க அடி பணியாது

உளுந்தூர்பேட்டை அருகே தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. அம்மாநாட்டுப் பணிகளை அக்கட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதி நடத்தும் குடும்ப நாடகத்தை நாங்கள் நம்பவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் திமுக தலைவர் ஒரு மூத்த அரசியல்வாதி, மிகப் பெரிய தலைவர் என்றெல்லாம் பெயரெடுத்தவர், அவர் தன் வீட்டுக்குள் பேச வேண்டியதை வெளியில் பேசுகிறார். அதற்கு அவரது மகனும் ஊடகங்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு குடும்பத்தின் டிராமா வெட்ட வெளிச்சமாக தமிழக மக்களுக்கு தெரிந்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் அனுதாபத்தை பெற வேண்டும், யாரையாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது அவர்களின் எண்ணமா? ஆனால் எந்தவித டிராமாவுக்கும் தே.மு.தி.க. அடி பணியாது. எல்லா டிராமாவையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். இதற்கான முடிவு என்ன என்பதை வரும் 2ம் தேதி நடக்கும் மாநாட்டில் மக்கள் முன்பு அவர் தெரிவிப்பார் என்றார் பிரேமலதா.

அண்ணன் உருவ பொம்மையை எரிக்கக் கூடாது! - ஸ்டாலின் அறிக்கை

பிறந்தவர்கள் அனைவரும் இறந்து தானே ஆக வேண்டும்
நான் செத்துடுவேன் என்று அழகிரி சொன்னதை பெரிதாக எடுக்கவில்லை.
அண்ணன் உருவ பொம்மையை எரிக்கக் கூடாது! - ஸ்டாலின் அறிக்கை

பாஜக கூட்டணியில் பாமக? இறுதிகட்ட பேச்சுவார்த்தை



மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம் - அழகிரி மீது பயம்?



சாந்தன், முருகன், பேரறிவாளனின் தூக்கு இன்று ரத்தாகுமா?



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு 1998ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கருணை மனு, 2011ல் தான், அப்பொழுது இருந்த குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலால் நிராகரிக்கப்பட்டது.

கால தாமதமாக கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் தங்கள் தண்டனையை குறைக்குமாறு அந்த 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சமீபத்தில், சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 15 பேரின் மரண தண்டனையை, அவர்களின் கருணை மனுக்கள் காலதாமதமாக நிராகரிக்கப்பட்டதால்,  உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதே போன்று முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

சல்மான்கான் படங்களைப் புறக்கணியுங்கள்!

பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளரான மோடி, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்காக, மன்னிப்பு எதுவும் கேட்க தேவையில்லை என்று நடிகர் சல்மான் கான் கூறியிருந்தார். சல்மான்கானின் இந்த கருத்து முஸ்லிம்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராகப் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

"மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று சல்மான் கூறியிருப்பது, இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. குஜராத் கலவரத்தின் போது பெண்களும், குழந்தைகளும் அடைந்த வேதனையை அவர் அறிவாரா? அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஏதாவது உதவிக்கரம் நீட்டினாரா? சல்மான்கான் நடித்த படங்களை பார்க்காமல் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த புறக்கணிப்பை நீட்டிக்க வேண்டும்." என்று இஸ்லாமிய மதக் குருமார்கள் நேற்று சல்மான்கானுக்கு எதிரான ஒரு கூட்டு அறிவிப்பில் தெரிவித்து இருந்தனர்.

பேட்டி முடிந்தவுடன் அழுத 'அஞ்சா நெஞ்சன்'அழகிரி

திமுக தலைவர் கருணாநிதி தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை அபாண்டம் என கூறி நிராகரித்த அழகிரி, "தலைவர் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். நாங்கள் எல்லாம் இறந்த பின் தான், அவர் இந்த உலகத்தை விட்டு போக வேண்டும். எங்கள் பிணத்தின் மீது தான் அவரது கண்ணீர் விழ வேண்டும்" என்று ஆவேசமாக பேசி தனது பேட்டியை நேற்று மாலை முடித்தார்.

பேட்டியை முடித்து விட்டு, வீட்டிற்குள் சென்ற அழகிரி, கண்ணீர் வடித்துள்ளார். அவரது மனைவி காந்தியும், மகன் துரை தயாநிதியும் அழகிரியை அணைத்தபடி, ஆறுதல் கூறி, தேற்றி உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். அழகிரி அழுததை பார்த்த அவரது குடும்பத்தினர், சோகமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.உள்ளே சென்ற பிறகும், அழகிரி சோகத்தில் மூழ்கி இருந்து, எதுவும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் அரை மணி நேரம் கழித்த பிறகே, வெளியே வந்து, தன்னை காண வந்த ஆதரவாளர்களை சந்தித்து விட்டு, மறுபடியும் வீட்டிற்குள் சென்று விட்டார்.

மதுரையில் நாளை நடக்கவிருக்கும் அழகிரி பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் என்ன?

அழகிரி ஆதரவாளர்கள், அவரின் பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாட தீவிரமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். மதுரையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அணிவகுத்து வந்து அழகிரிக்கு 63–வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, 1000–க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 20 ஆயிரம் தொண்டர்கள் வருவார்கள் என்று ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை நகரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மதுரை சத்ய சாய் நகரில் உள்ள அவரது வீடு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பிறந்தநாள் விழா நடைபெறும் ராஜா முத்தையா மன்றத்திலும் அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அந்த மன்றத்தில் தான் காலை 9 மணிக்கு மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதன் பிறகு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட இருக்கின்றன.

பிறந்தநாள் விழாவை முடித்து விட்டு, அதற்கு மறுநாள், அழகிரி பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

1984 சீக்கியர் படுகொலை, 2002 கலவரம் பற்றி ராகுல் கூறியது தவறு: அருண் ஜெட்லி

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, சீக்கியர் படுகொலை நடந்த போது, அதை அப்பொழுது இருந்த ராஜீவ் காந்தி அரசு தடுக்க முயன்றது. 2002ல் நடந்த குஜராத் கலவரத்தை மோடி அரசே தலைமை தாங்கி நிகழ்த்தியது என்று கூறினார்.இதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜேட்லி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியன்று இந்திரவின் உடல் வைக்கப்பட்டிருந்த எய்எம்ஸ் மருத்துவமனையில் இருந்து வன்முறை வெடித்தது. காங்கிரஸ் தலைவர்களே வன்முறைக்கு தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எந்த ஒரு இடத்திலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. எவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் 2002 குஜராத் கலவரத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கலவரக்காரர்கள் 300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனால்,1984ஆம் ஆண்டு சீக்கியர் கொலையில் ராஜிவ் அரசு பங்கெடுக்கவில்லை என்று எப்படித்தான் ராகுல் காந்தி சொல்கிறாரோ என தெரியவில்லை என்று ஜேட்லி கூறினார்.

Tuesday, 28 January 2014

அழகிரி உருவ பொம்மைகள் சென்னையில் கொளுத்தப்பட்டது

கருணாநிதி, இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து, அழகிரி, தன்னிடம், ஸ்டாலின் இன்னும் 4 மாதங்களில் இறந்து விடுவார் என்றும், அவரை தகாத வார்த்தைகளை கூறி திட்டியதாகவும், தெரிவித்து இருந்தார். அவருடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை அடுத்து, ஸ்டாலின் ஆதரவாளர்கள், அழகிரி மேல் ஆத்திரம் அடைந்தனர். இன்று சென்னையில் சில இடங்களில், ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒரு ஐம்பது பேர், அழகிரியின் உருவ பொம்மைகளை கொளுத்தினர். மேலும், அழகிரியை எதிர்த்து அவதூறான வார்த்தைகளில் கோஷம் எழுப்பினர். உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்த போவதாக, முன்னதாகவே ஊடகங்களுக்கு அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

தன் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்த அழகிரி, "கலைஞர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், நாங்கள் எல்லாம் இறந்த பின்பு தான், அவர் இந்த உலகத்தை விட்டு போக வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே ஆசை.",  என்றும் கூறினார்.

தலைவருக்கு முன்னாடி நாங்கள் சாகணும் - அழகிரி ஆதங்க பேட்டி



ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களில் சாகப்போகிறார் என்று அழகிரி கருணாநிதியிடம் கூறியதாகவும் தகாத வார்த்தைகளால் வெறுப்புடன் பேசியதாகவும் திமுக தலைவர் கருணாநிதி தன் மகன் மீது குற்றம் சுமத்தி இன்று மாலை சென்னையில் பேட்டி அளித்தார்.

சென்னையில் முஸ்லிம்கள் நடத்திய சிறை நிரப்பு போராட்டம்

                                                 


முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் மத்தியில் 10 சதவீதமும், மாநிலத்தில் 7 சதவீதமும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை எழும்பூரில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதையொட்டி இன்று நடத்தப்பட்ட அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆயிரக்கணக்கான பேர் திரண்டனர்.  போராட்டத்தில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டம் அதிகமானதால் லட்சுமி ருக்குமணி சாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இதனால் எழும்பூரை சுற்றியுள்ள பிறசாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாநில தலைவர் ஜெய்னூல் ஆபுதீன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது



ஆம் ஆத்மி கட்சி, ஒரு கோடியே ஐந்து லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் தனது கட்சியினைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஜனவரி 26ம் தேதிக்குள் தங்களது கட்சியில் சுமார் ஒருகோடி உறுப்பினர்களை இணைப்பதை இலக்காகக் கொண்டு செயல் பட்டு வந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 98.46 லட்சமாக இருந்தது. ஏற்கனவே இருந்த பழைய உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் சேர்த்து, மொத்தம் ஒரு கோடியே ஐந்து லட்சம் பேர் கட்சியில் இருப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மியின் தற்போதைய உறுப்பினர்களில் அதிகமானவர்கள் கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம் ஆத்மியின் கொள்கைகளை பின்பற்றாதவர்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப் படுவர் என ஆம் ஆத்மி எச்சரித்துள்ளது. 

புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும் எனவும் ஆம் ஆத்மி கூறியுள்ளது.

யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? - மு.க.அழகிரி ஆதங்கம்

இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கருணாநிதி, தன்னைப் பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் வெறுக்கத்தக்க வகையில் அழகிரி பேசினார் என்றும் ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் இறந்து போய்விடுவார் என்றும் அழகிரி கூறியதை எப்படி ஒரு தகப்பனார் பொறுத்துக் கொள்வார் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த குற்றச்சாட்டிற்கு, பதிலடி கொடுத்திருக்கிறார் அழகிரி.

"என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பொதுச் செயலாளர் அன்று ஒரு காரணம் கூறினார். இன்று, தலைவர் ஒரு காரணம் கூறுகிறார். அப்படியென்றால், அன்பழகன் கூறியது தவறா? ஸ்டாலினை பற்றி பேசியதால் நீக்கம் என்கிறார்கள். ஸ்டாலின் எனது தம்பிதானே. எனது தம்பியை பற்றி நான் பேசக்கூடாதா? ஸ்டாலினை பற்றி பேசினால் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்களா? சரி, இந்த விளக்கத்தை ஏன் நான் பேசிய அன்றே சொல்லவில்லை. இன்று ஏன் சொல்கிறார்கள் என மக்கள் கேட்கிறார்கள். ",  என்று அழகிரி கூறியுள்ளார்.

உங்கள் அப்பாவை அடித்தீர்கள் என்று சொல்லபடுகிறதே? என்ற கேள்விக்கு, "யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? என்று பதில் கேள்வி கேட்டிருந்தார்.

ஸ்டாலின் செத்துவிடுவார் என கருணாநிதியிடம் கூறிய மு.க.அழகிரி

ஸ்டாலின் செத்துவிடுவார் என கருணாநிதியிடம் கூறிய மு.க.அழகிரி

மகன் அழகிரி மீது கருணாநிதியே கூறிய கடும் குற்றச்சாட்டு

கருணாநிதியை கண்ணத்தில் அறைந்தாரா அழகிரி?

இன்று பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்த பல அதிர்ச்சி தகவல்கள்

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி சில நாட்களுக்கு முன் திமுகவை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார், வழக்கமாக ஸ்டாலின் அழகிரி சகோதர யுத்தம் தான் நடைபெறும், ஆனால் இம்முறை கருணாநிதி அழகிரி அப்பா-மகன் யுத்தம் நடந்துள்ளது. ஹாங்காங்கில் விடுமுறை முடித்து வந்த அழகிரி நேராக கோபாலபுரம் சென்று தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது குறித்து கருணாநிதியுடன் வாதிட்டதாக தெரியவந்தது. உடனடியாக அழகிரி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

இது முன்பு நடந்ததை போல லுல்லுலாயி சஸ்பெண்ட் ஆக இல்லாமல் இருந்ததும் அழகிரியும் தொடர்ந்து பேட்டிகள் கொடுப்பதும் நேரடியாகவே கருணாநிதியை ப்லாக்மெயில் செய்கிறார்கள் என்றும்,திமுக தோற்கும் என்றும் பேட்டிகள் அளித்ததும் கழக காசில் முறைகேடுகள் நடக்கின்றன, ஆயிரம் கோடி எங்கே என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து பேசியதை அடுத்து சண்டை உண்மையான சண்டை தான் என்று உணரப்பட்டது.

ஆனால் அன்று அதிகாலையில் அழகிரி-கருணாநிதி சந்திப்பில் என்ன நடந்தது என்று தகவல்கள் கிசுகிசுக்களாக பரவின, தினமணி போன்ற பத்திரிக்கையிலேயே பெயர் குறிப்பிடாமல் ஆனால் புரிந்து கொளும் படியாக திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி கண்ணத்தில் அறைந்துவிட்டார் என்று பொருளில் ஒரு பத்தி செய்தி வெளியானது, இது குறித்து செய்தியின் உண்மை தன்மையை உறுதி செய்ய முயன்றபோது குழப்பமான தகவல்கள் கிடைத்ததால் நடந்ததை சற்றுமுன் செய்திகளால் உறுதியாக கூற முடியவில்லை

இந்நிலையில் இன்று கருணாநிதியின் பேட்டி வெளியாகியுள்ளது, அதில் தான் மு.க.அழகிரி தன்னை ஒருமையில் திட்டியதாகவும், மு.க.ஸ்டாலின் இன்னும் சில மாதங்களில் செத்துவிடுவார் என்று கூறியதாகவும் தன் மகன் மீதே குற்றம் சாட்டியுள்ளார். வைகோவை கட்சியை விட்டு நீக்கம் செய்ய முனைந்த போதும் கருணாநிதியை வைகோவுக்கு ஆதரவாக புலிகள் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அளித்த பேட்டியில்

மு.க.அழகிரிக்கு  தி.மு. கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது என்றும் உச்ச கட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளை யெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய
வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார்.

எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்.

மேலும் அழகிரியின் ஆட்கள் பிசிஆர் கட்சியிலே உள்ள மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி அவர்கள் மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும் என்பதையும் உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன்.

அவர் மீது கட்சியின் சட்டதிட்டபடி பொதுச் செயலாளர் அவர்கள் கண்டனமும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்

என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல; கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலே கூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்து விடுவார் என்று கட்சித் தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

அதிமுக விற்கும், ஸ்டாலினுக்கும் ரகசிய உடன்பாடு உண்டு- அழகிரி



திமுக கட்சியின் சொத்து கணக்கில் ஏகப்பட்ட முறைகேடுகள் இருக்கிறது என்றும், அதை பற்றி தான் விரைவில் வெளியிட போவதாகவும் கூறியிருக்கிறார் அழகிரி. மேலும்  ஊடகங்களிடம் பேசிய அவர், "திமுக தலைவரை நான் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக,  ஸ்டாலினுடன் இருக்கும் தரக்குறைவான ஆட்கள் வதந்திகளை பரப்புகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்மீதும், என் குடும்பத்தை சேர்ந்தோர் மீதும்  வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் ஸ்டாலின் மீது வழக்கு போடப்பட்டதா? அவருக்கும், அதிமுகவிற்கும் ரகசிய உடன்பாடுகள் இருக்கின்றது. ஸ்டாலினும் அந்த அம்மாவை விமர்சித்து அல்லது அவருக்கு எதிராக ஏதாவது பேசியிருப்பாரா? என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் அழகிரி.

"என்மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கும் பேராசிரியர், ஸ்டாலின் மீதான புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதில்லை?" என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் அழகிரி.

சென்னையில் ‘பஸ் டே’ கொண்டாட்டத்தில் மாணவர்கள், காவல் துறை இடையே மோதல்

அயனாவரத்தில் இருந்து பெசன்ட்நகருக்கு 23-சி மாநகரப் பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பேருந்து, அண்ணா மேம்பாலம் அருகே வந்த போது,  அப்போது அங் கிருந்த நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பஸ்ஸை மறித்து, பயணிகளை கீழே இறக்கிவிட்ட னர். பின்னர் மாலைகள் மற்றும் பெயர் பலகைகளுடன் 'பஸ் டே' கொண்டாட அனைவரும் பேருந்தில் ஏறினர். பேருந்துக்கு முன்பு மாலைகளை கட்டினர்.

அப்பொழுது அங்கு வந்த போலீசார், பஸ் தினம் கொண்டாட நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும், கலைந்து செல்லுங்கள் என்றும் மாணவர்களிடம் தெரிவித்தனர். மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்தது, அது முற்றிய நிலையில் மாணவர்களுக்கும், போலீஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட போலீஸாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதையொட்டி, அண்ணா சாலையில் மாணவர்கள் திடீரென்று கீழே படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, போலீஸ் உயர் அதிகாரிகள் மாணவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த மோதல் சம்பவத்தால் அண்ணாசாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாணவர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை சரியென நினைத்தால், 'லைக்' செய்யுங்கள். இல்லையென, நினைத்தால் உங்கள் கருத்தை 'கமென்ட்' செய்யுங்கள்.

"இந்த குடும்பத்தில் நானா பிறக்க வேண்டும் என்று விரும்பினேன்?" , ராகுல் காந்தி

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் தான் வாரிசு அரசியலை எதிர்ப்பதாக கூறியிருந்தார். "இந்த குடும்பத்தில் நானா பிறக்க வேண்டும் என்று விரும்பினேன்?" என்று கேட்டிருந்தார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தான் அச்சப்படவில்லை என்றும் கூறினார்.  1984ல் நடந்த சீக்கியர்கள் படுகொலையில் சில காங்கிரஸாருக்கு தொடர்பு உண்டு என்றும், அப்பொழுது இருந்த ராஜீவ் காந்தி அரசு அந்த படுகொலைகளை தடுக்க முயன்றது என்றும்,  ஆனால் 2002ல் நடந்த கலவரத்தை நிகழ்த்தியதே மோடி தான் என்றும் குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி.

"பல மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற போது என்னை குறிப்பிடுவதில்லை. ஆனால் சில மாநிலங்களில் தோற்கும் போது என்னை பொறுப்பாக்குகின்றனர். 2014 தேர்தலில் காங்கிரஸ் வெல்லாவிட்டால் நானே முழு பொறுப்பு", என்றும் அப்பேட்டியில் கூறியிருந்தார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரவே, காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவு தந்தது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளதாகவும், 2014 தேர்தலில், காங்கிரஸ் நிச்சயம் வெல்லும் என்றும் கூறினார், ராகுல் காந்தி.

"நல்ல ஜோக் குடியரசு தலைவரே!" என பிரணாப்புக்கு பதிலடி கொடுத்த‌ ஆம் ஆத்மி அமைச்சர்

ஆம் ஆத்மி கட்சி, கடமை தவறியதாக கூறி சில காவல் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, டெல்லியில் 30 மணி நேர தர்ணாவில் ஈடுப்பட்டது. பின்னர், துணை நிலை ஆளுநர் அளித்த உறுதிமொழியை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில், கடந்த 25-ந் தேதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசு தின உரையில், ‘விளம்பரம் தேடும் நோக்கத்தில் நடத்தப்படும் கலகங்கள், ஆட்சி திறன் ஆகாது' என கேஜ்ரிவாலின் போராட்டத்தை மறைமுகமாக‌ விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார், டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி. "ஆம் ஆத்மியின் செயல்கள் கலகம் என்றால், 1984 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களை குடியரசு தலைவர் என்னவென்று சொல்வார்? போராட்டங்கள் என்றா? நல்ல ஜோக், குடியரசுத் தலைவர் அவர்களே' எனத் தன் டிவிட்டர் வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

இப்பதிவிற்கு எதிர்ப்புகள் பல வந்ததாலும், சர்ச்சைக்குள்ளானதாலும், பதிவை சில மணி நேரங்களிலேயே நீக்கி விட்டார் சோம்நாத் பாரதி.

Monday, 27 January 2014

4 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ!

4 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ!

டில்லியில் ஒரு கருணாநிதி!

பின்னணியில் அன்னா ஹசாரே

ஆம் ஆத்மிக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறும் முடிவு தற்போது இல்லை- காங்கிரஸ்

ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கைகள் ஏமாற்றத்தை தந்தாலும், அக்கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறும் முடிவில் தற்போது இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

"நாங்கள் பல விஷயங்களை கருத்தில் கொண்டு தான் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தோம். அதனால் பொறுமையுடன் தான் செயல் படுவோம். இன்னொரு முறை தேர்தல் நடத்த பட்டு, டெல்லி மக்களுக்கு சிரமத்தை கொடுக்க வேண்டாம் என தான், அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினோம். ஆனால், ஆம் ஆத்மி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகம் இல்லை .", என காங்கிரஸ் சார்பில் பேசிய முகுல் வாஸ்னிக் கூறினார்.

அழகிரி பிறந்தநாள் விழா அன்று ஸ்டாலினுக்கும் சென்னையில் விழா

மு.க.அழகிரியின் பிறந்தநாள் வரும் 30ம் தேதி அன்று, அவரது ஆதரவாளர்களால் மதுரையில் சிறப்பாக கொண்ட பட இருக்கிறது. அதே தினத்தில், சென்னையில் ஸ்டாலின் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டம் மயிலாப்பூரில் நடை பெற இருக்கிறது. இதைப் பற்றி டிவிட்டர் வலை தளத்தில் பதிவு செய்திருந்த தென் சென்னை மாவட்ட திமுக செயலர் ஜெ. அன்பழகன், நடக்கவிருக்கும் பொது கூட்டத்தை 'தளபதி திருவிழா' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அழகிரி பிறந்தநாள் விழாவை விட பிரம்மாண்டமாக நடைப் பெற இருக்கும் தளபதி திருவிழாவில், ஆயிரங்கணக்கான ஸ்டாலின் ஆதரவாளர்கள் சென்னையில் குவிவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

# சபாஷ், சரியான போட்டி!

மிஸ்டு கால் கொடுத்து, பணம் பறிக்கும் புதிய கைவரிசை


'மொபைல் பேங்கிங்' மூலம் அதிகமாக பணப்பரிவர்த்தணை செய்துவரும் நபரா நீங்கள்? உங்களுக்கு +375602605281, +37127913091 போன்ற எண்களில் இருந்து மிஸ்டு கால்கள் வருகிறதா?

குவிந்த அழகிரி ஆதரவாளர்கள், அதிர்ந்த திமுக தலைமை

கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, தி.மு.க வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர்,  அழகிரி நேற்று விமானத்தில் மதுரைக்கு  புறப்பட்டு சென்றார்.  அவரை மதுரை விமான நிலையத்தில் வரவேற்க‌, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வந்து காத்து கொண்டிருந்தனர்.  சென்னை விமான நிலையத்திலும், அவரது ஆதரவாளர்கள் மேள தாளத்துடன் பிரம்மாண்டமான முறையில் வழியனுப்பு நடத்தினர்.

மதுரையில், தனக்காக உற்சாகமாக காத்து கொண்டிருந்த ஆதரவாளர்களை பார்த்து, புன்னகை நிறைந்த‌ முகத்துடன்  கைகளை அசைத்தார் அழகிரி. அப்பொழுது, அழகிரி ஆதரவாளர்கள் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.


கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரிக்கு, பிரம்மாண்டமான வழியனுப்பு மற்றும் வரவேற்பு  நடத்த ஆயிரங்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்தது, திமுக தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும், அழகிரி தன் பிறந்தநாளான ஜனவரி 30 அன்று விரிவாக பேச போவதாக கூறியிருப்பது திமுக வட்டாரத்தில், படபடப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் துரைமுருகன் அழகிரியை சென்னையில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரான துரைமுருகன் அழகிரியை சந்தித்திருப்பது கருணாநிதி அனுப்பிய சமாதான தூது என்றே தெரிகிறது

வைகோவை பற்றி பேசி வாங்கி கட்டி கொண்ட சுப்பிரமணியம் சாமி

மதிமுகவை பாஜக கூட்டணியில் சேர்த்தது தவறு என்றும், இதனால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுகதான் ஜெயிக்கப் போகிறது என்று சுப்பிரமணியம் சாமி கருத்து கூறியுள்ளார். சாமியின் இக்கருத்து, மதிமுகவினரையும் மட்டுமல்லாது, பாஜகவினரையும் கடும் அதிருப்தி படுத்தியுள்ளது.

இதைப் பற்றி, பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி எம்.வி.எம். அழகப்பன் கூறுகையில், "சாமியின் கருத்து நான்சென்ஸ். முட்டாள்தனமாக அவர் பேசுகிறார். கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் தான் கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக விவகாரங்களில் சாமி தலையிடக் கூடாது." என்று பேசியுள்ளார்.

"கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டதே மதிமுக - பாஜக கூட்டணி. அதுகுறித்து சாமிக்கு கருத்துக் கூற உரிமையே கிடையாது. ", என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.









பிற மொழி படங்கள் டப் செய்யப்பட்டு கன்னடத்தில் வெளியாவதற்கு தடை விதிக்க கோரிக்கை

கன்னட படங்கள் குவிக்கும் வசூலை விட, தமிழில் இருந்து கன்னடத்திற்கு டப் செய்யப்பட்டு வெளியாகும் படங்கள் அதிக‌ வசூலை குவிப்பதினால், அதை முடக்குவதற்கு, கன்னட திரையுலகினர் பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். நேற்று பெங்களூரில் நடந்த கன்னட திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்திய அவசர கூட்டத்தில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்தனர்.

எனினும், கன்னட திரையுலகில் உள்ள சில சங்கங்கள் மட்டும் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.



தி.மு.க பற்றி அக்கறை இல்லை, அக்கட்சி அழிவிற்கு ஒரு காரணம் வீரமணி

தி.மு.க வில் இருந்து கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, நீக்கப்பட்ட அழகிரி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் தேர்தலில், தி.மு.க வெல்வது பற்றியோ, அவர்கள் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள் பற்றியோ எந்த அக்கறையும் தனக்கு கிடையாது என்று கூறினார். ஆனால், நிச்சயமாக, தே.மு.தி.க வுடன் இணைந்தால், எந்த பலனும் தி.மு.க விற்கு கிடைக்காது என கூறினார்.

வீரமணியை பற்றி பேசும் போது, "ஆட்சி மாறும் போதெல்லாம் கருத்து சொல்லும் கறுப்பு மனிதர் அவர். கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றார். பின்னர் அ.தி.மு.க. ஆட்சியின்போது, ஜெயலலிதாவை சமூக நீதிகாத்த வீராங்கனை என்று சொன்னார். தற்போது, தி.மு.க.வின் அழிவிற்கு அவரும் ஒரு காரணம் ஆகி வருகிறார்." என்று அவரை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், தி.மு.க வில் சந்தர்ப்பவாதிகள் இருக்கிறார்கள், அவர்கள் கட்சியின் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார்கள், அதன் காரணமாகவே தான் நீக்கப்பட்டிருப்பதாகவும் அழகிரி கூறினார்.


மதுரைக்கு கிளம்பிய அழகிரியை சந்தித்த துரைமுருகன்

திமுக விலிருந்து நீக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக நேற்று மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் அழகிரி. சென்னை விமான நிலையத்தில்  மேளதாளம் முழங்க அவரது ஆதரவாளர்கள் தடல் புடலான வழியனுப்பு நடத்தி வைத்தனர். இம்மாதம் 30ம் தேதி, அவர் பிறந்த நாளை, மதுரையில் சிறப்பாக கொண்டாட, அவரது ஆதரவாளர்கள் பெரிய திட்டங்களுடன் இருக்கின்றனர். அழகிரியும் அவர் பிறந்தநாள் அன்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்து, விரிவாக பேச போவதாக அறிவித்து இருந்தார்.

அழகிரி கிளம்புவதற்கு முன்பு, விமான நிலையத்திற்கு திடீரென திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் வந்திருந்தார். அவர் அழகிரியை சந்தித்து தனியாக பத்து நிமிடங்கள் பேசினார். திமுக தலைமை தரப்பில் துரைமுருகன் மூலம் ஏதாவது சமரசத்திற்கு முயல்கிறார்களா என்ற கேள்வியையும், எதிர்பார்ப்பையும் இந்த சந்திப்பு எழுப்பியுள்ளது.

அவர்கள் எதை பற்றி பேசினார்கள் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.










ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்.எல்.ஏ நீக்கம்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, எம்.எல்.ஏ விநோத் குமார் பின்னி, கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக‌ நீக்கப் பட்டார். இவர், ஆம் ஆத்மி கட்சியையும், கேஜ்ரிவாலையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.  அக்கட்சி, டெல்லி தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும்,  கேஜ்ரிவால் சர்வாதிகாரம் செலுத்துபவர் என்று குற்றம் சாட்டி இருந்தார். ஆம் ஆத்மி அரசை கண்டித்து இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறியிருந்தார்.

இதை பற்றி விநோத் குமார் பின்னி பேசுகையில், "டெல்லி மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசிய என்னை, கட்சியை விட்டே நீக்கி இருப்பது துரதிஷ்ட வசமானது. ஆம் ஆத்மி ஒரு சர்வாதிகாரம் நிறைந்த கட்சி, அதனால், என்னை நீக்கியிருக்கும் அவர்களது முடிவில் எனக்கு ஆச்சரியம் இல்லை. " என்று தெரிவித்தார்.


அந்தமானில் படகு கவிழ்ந்ததில் 31 பேர் பலி



காஞ்சிபுரத்திலிருந்து அந்தமானுக்கு முப்பதிற்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றிருந்த படகு நடுக் கடலில் கவிழ்ந்தது. இதில் 31 பேர் உயிர் இழந்தனர். இது வரை 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் போர்ட்பிளேரில் உள்ள ஒரு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள்,  பெரும்பாலானாவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து சுற்றுலா வந்திருந்தவர்கள். மும்பையைச் சேர்ந்த சிலரும் படகில் இருந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய அக்வா மெரைன் என்ற அந்தப் படகில் அதிகபட்சம் 25 பேர் வரை மட்டுமே ஏற்றலாம். ஆனால், அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏற்ற பட்டதால், படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க அந்தமான் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.





Saturday, 25 January 2014

மேற்கு வங்கத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம்

மேற்கு வங்கத்தில், பஞ்சாயத்து தலைவர் கட்டளையின் பேரில், உயர் சாதி பையனை காதலித்ததற்காக, 12 பேரால் ஒரு பெண் கற்பழிக்க பட்டிருப்பது, மாநிலத்தையே உலுக்கி இருக்கிற இந்நிலையில், 55 வயது ஆசாமி ஒருவர், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்.

பிஸ்துடா சிங் என்பவர், 6 வயது சிறுமி ஒருவரை தனியாக இருக்கும் போது, பேசி ஏமாற்றி தனியாக அழைத்து சென்று, பலாத்காரம் செய்து இருக்கிறார். பின்னர், வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமி, தன் பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறினார். இது பற்றி சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிஸ்துபடா சிங் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.





மோடியை டீ விற்கச் சொல்லும் அய்யர், சோனியா காந்தியை அவர் முன்பு செய்த ஓட்டல் பணியாளர் வேலையை செய்ய சொல்வாரா?

மணி சங்கர் அய்யர், தனது பேச்சை கட்டுப் படுத்தாவிட்டால், பா.ஜ.க வினரின் நேரடி தாக்குதலுக்கு ஆளாக கூடும் என்று பாஜக துணை தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். மோடியை தேநீர் விற்க சொல்லும் அய்யர், சோனியாவை, அவர் முன்பு இங்கிலாந்தில் ஓட்டல் பணியாளராக செய்த பணியை திரும்ப செய்ய சொல்வாரா? எனவும் அவர் கேட்டார்.

மேலும், சந்திப்பில் அவர் கூறியதாவது:

சோனியா காந்தி, 1965ம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள ஒரு கிரேக்க ஓட்டலில், பண தேவைகளுக்காக, பணியாளராக பணிபுரிந்தார். அவரை ஏன் அந்த பணியாளர் வேலையை செய்ய அய்யர் சொல்லவில்லை என்று ராஜா கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் பத்து ஆண்டுகளாக நடத்திய ஆட்சியினால், இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன. மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று கூறுவது தவறு. அவர் ஆட்சி செய்யும் குஜராத்தை, சீனாவுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று உலக நாடுகளே ஒப்பு கொண்டுள்ளன.

திறமையான பிரதமர் இருந்திருந்தால் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யாது.

பொருளாளர் பதவியில் இருந்து கொண்டு ஏன் கட்சி தலைவர் போல் ஸ்டாலின் செயல்பட வேண்டும்?

தி.மு.க வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும் போது, கருணாநிதியை தவிர வேறு யாரையும், கட்சி தலைவராக கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது:
மு.க. ஸ்டாலின் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர். அவரை ஒரு போதும் தலைவராக ஏற்க முடியாது. தி.மு.க வில் தலைவரும், பொது செயலாளரும், ஸ்டாலின் சொல்வதை தான் கேட்கிறார்கள். ஸ்டாலினுக்கு கட்சியில் பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பொருளாளர் போல் செயல் படாமல், கட்சி தலைவர் போல் செயல் படுகிறார். மீண்டும் கட்சி தலைவரை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை. நான் எந்த தவறும் செய்யாத நிலையில் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் எந்த விளக்க கடிதமும் கட்சிக்கு அனுப்ப போவதில்லை.

இந்திய அரசியல் அமைப்பு, முதல் அமைச்சர் தர்ணா செய்வதற்கு தடை விதிக்கவில்லை



இந்திய அரசியல் அமைப்பு, முதல் அமைச்சர் தர்ணா செய்வதற்கு தடை விதிக்கவில்லை என்று டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவால் கூறுகிறார். 

 கேஜ்ரிவால், ரயில் பவனில் நடத்திய தர்ணாவிற்காக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.  அவர் மீது, டெல்லி போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. உச்ச நீதிமன்றம், விதிக்கப்பட்ட 144 தடையை மீறி, சட்ட விரோதமாக கேஜ்ரிவால் மற்றும் அவர் ஆதரவாளர்கள் கூடி தர்ணா நடத்தியதை சாடி உள்ளது. இதைப் பற்றி பேசும் போது கேஜ்ரிவால், "நான் இந்திய அரசியல் அமைப்பை படித்தேன். அதில், முதல் அமைச்சர் தர்ணா நடத்த கூடாது என்று எங்கும் இல்லை." என்று கூறினார். மேலும், "எங்களது ஆம் ஆத்மி கட்சியை பற்றி தவறாக எழுதுவதற்கும், மக்களிடயே எங்களது புகழை கெடுப்பதற்கும், ஊடகங்கள் பணம் வாங்குகின்றனர். " என்றும் அவர் கூறினார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media